ஏவுகணைகளிலிருந்து
தொடர்ச்சியாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன
குண்டுகள்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
போர்விமானங்களிலிருந்து
இடைவிடாமல் விழுந்து கொண்டே இருக்கின்றன
குண்டுகள்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பீரங்கிகளிலிருந்து
வரிசையாக வெடித்துக் கொண்டேயிருக்கின்றன
குண்டுகள்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
போருக்காகவே பழக்கப்படுத்தப்பட்ட
இராணுவத்தினரின் இயந்திரத் துப்பாக்கிகள்
மரணத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே
இயங்கிக் கொண்டிருக்கின்றன
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
மக்கள் நெரிசலாக வாழக்கூடிய காஸா நகரமானது
மெல்ல மெல்ல நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து
தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும்
குழந்தைகளின் பெண்களின் மெல்லிய குரல்கள்
உயிரோடு இருப்பவர்களையும்கூட
உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
வானத்தில் காதுகளை வைத்தபடி
நிலமெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தக் காஸாவின் மக்கள்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
நோயாளிகள் நிறைந்திருந்த மருத்துவமனை
தரைமட்டமாகிக் கிடக்கிறது
சிகிச்சைக்காகக் காத்திருந்தவர்கள்
சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடக் குவியல்களை
வெறுங் கைகளால் வெட்டி எடுக்கிறார்கள்
உயிர்வாஞ்சையோடு உள்ளே
முனகிக் கொண்டிருப்பவர்களை
காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
குவியல் குவியலாக மரணித்துக் கிடக்கும்
குழந்தைகளின் சடலங்களைப் பார்த்துவிட்டும்
ஒவ்வொரு நொடியும் உயிர்பிடித்து
ஒவ்வொரு இடமாக உயிர்த்திருப்பதற்காக
ஓடிக்கொண்டிருக்கும் அந்த நகரத்தின்
மனிதர்களைப் பார்த்துவிட்டும்
நெடுநேர தாகங்கொண்டும்
நீண்டநாள் பசிகொண்டும்
வரலாற்றுத் துயரத்தை
சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும்
அவர்களின் பாடுகளைப் பார்த்துவிட்டும்
இன்னும் எதற்காக இந்தத்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
நரகமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த நகரத்தின் அவலக் காட்சிகள்
உலகத்தின் ஒவ்வொரு மனசாட்சியையும்
பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் போதும்
இன்னும் எதற்காக இந்தத்
தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
நீண்டநேரமாகக் காத்துக் கொண்டிருக்கும்
செய்தியாளர்களுக்கு முன்னால்
நன்றாக முகச்சவரம் செய்துகொண்டு
பார்த்துப்பார்த்து ஒப்பனை செய்துகொண்டு
தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிந்துகொண்டு
ஒன்றுக்கு இரண்டுமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டு
வேதம் ஓதும் சாத்தானைப்போல
அமைதி
சமாதானம்
ஜனநாயகம்
மக்கள்நலன்
மனித உரிமை
என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும்
இந்தச் சாத்தான்களை
போரைவிரும்பும் இந்தச் சாத்தான்களை
மரணத்தை விரும்பும் இந்தச் சாத்தான்களை
பேராசைகொண்ட இந்தச் சாத்தான்களை
இலாபவெறிபிடித்த இந்தச் சாத்தான்களை
குழந்தைஇரத்தம் குடிக்கும் இந்தச் சாத்தான்களை
மனிதக்கறி புசிக்கும் இந்தச் சாத்தான்களை
பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு
மானுடத்திரளை
தன்னுடைய இதயத்திலிருந்து நேசிக்கக்கூடிய
மானுடத்திரளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை
உண்மையாகவே விரும்பக்கூடிய
உழைக்கும் மக்களுக்கான உன்னதமான வாழ்க்கைக்கு
உத்திரவாதம் கொடுக்கக்கூடிய
ஒரு தலைவன் இல்லாத வெறுமையை
ஒரு தலைவன் இல்லாத வெறுமையை
இந்தப் பேரழிவிற்கு முன்னால் உணர்கிறேன் நான்
இந்தப் பேரழிவிற்கு முன்னால் உணர்கிறேன் நான்
பேசிக்கொண்டே இருப்பவர்கள் அல்ல தலைவர்கள்
செயல்படுகிறவர்களே தலைவர்கள்
செயல்படத் தொடங்குங்கள்
அவர்கள் வரலாற்றை சிதைக்கிறவர்கள்
நீங்களே வரலாற்றை உருவாக்குகிறவர்கள்
அவர்கள் வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் அன்பை விதைக்கத் தொடங்குங்கள்
பேரழிவை பிரசவிக்கத் துடிக்கும் அவர்களல்ல
நிச்சயமாக அவர்களில் ஒருவருமல்ல
கவிதை உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது
வரலாறு உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது
நானும் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்!
3 comments
”பேசிக்கொண்டே இருப்பவர்கள் அல்ல தலைவர்கள் / செயல்படுகிறவர்களே தலைவர்கள்” ஆம் தோழர். உண்மை தலைமை செயல்படுவதிலேயே கவனம் செலுத்தும். பேச்சு என்பதெல்லாம் அதற்கு அவசியமற்றது. ஆனால் இங்கிருக்கும் தலைமைகள் பேசி பேசியே தலைமைக்கான இடத்தை தக்கவைக்க போராடும் தலைமைகளாக இருக்கிறதே… என்ன செய்ய..? எல்லாம் பேசி முடித்துவிட்டு – இவர்கள் செயல்படுத்த முன்வரும் பொழுது ஒன்றுமற்ற நிலையே மிஞ்சும். உண்மையை உரக்க சொல்லும் வரிகள்… வரவேற்கிறேன்.. உடன்படுகிறேன். பகிர்கிறேன். உள்வாங்குகிறேன் தோழர் நன்றி
கடக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மரணம் அல்ல. படுகொலை. அத்தகைய மரண ஓலங்களுக்கு மத்தியில் பேசி நடிக்கும் தலைவர்களின் முகமூடிகளைக் கழற்றுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா தம் கவிதையில். அவர் நம்மீது நம்பிக்கை வைக்கிறார். இந்த யுத்தத்தை நிறுத்த நாம் செய்யப் போவது என்ன? சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
எதையும் கவிதை செய்யலாம் ஆனால் இதை இதை தான் நான் கவிதையாய் செய்வேன் என்ற லட்சியத்துடன் கவிதை இயற்றுபவர்களால் தான் தமிழ் கவிதை வாழையடி வாழையாக நிலைத்து இருந்து வருகிறது.
அந்த வரிசையில் இலட்சியத்தோடு கவிதை இயற்றுபவர் கவிஞர் ஜோசப் ராஜா அவர்கள்.
தமிழ் கவிதை எனும் ஆறு எனக்கு தெரிந்த அளவில் கடந்த 15- 20 ஆண்டுகள் பின் நவீனம், இருத்தலியல் வாதம் என்ற பெயரில் வற்றி சுருங்கி ஒர் ஓடையாய் ஓடுவதையே பார்க்க முடிகின்றது.
இலக்கிய உலகில் கவிதை குறித்த ஆக்க பூர்வமான விவாதங்களும் நடைபெறுவதாகவும் தெரியவில்லை.
கவிஞர் ஜோசப் அவர்களின் கவிதைகள் அடர்த்தி மிக்கவை, ஆழமான வரலாற்று தொடர்ச்சி மிக்கவை. இன்னும் பத்து கவிஞர்களை உருவாக்கும் திறன் மிக்கவை.
காசா…ரஷ்யா – உக்ரேன் என பல கவிதைகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்
கவிஞர் ஜோசப் அவர்களால் தமிழ் கவிதை புது வெள்ள பெருக்கோடு பாய்ந்து ஓட வாழ்த்துக்கள் .
முனைவர் ச.லோகேஷ்