தக்காளிக்கு ஒரு கவிதை

குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு

பையை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள்

ஆழ்ந்த யோசனையில் சாலையில் நின்றபடி

எதிரில் இருக்கும் காய்கறிக்கடையைப்

பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருக்கிறாள்

எத்தனையோமுறை வந்திருந்தாலும் கூட

இப்போதிருக்கும் பதட்டம் எப்போதும் இருந்ததில்லை

வழக்கமாகக் கூட்டமாக இருக்கும் அந்தக்கடை

வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடிக் கிடக்கிற காட்சி

இன்னும் கொஞ்சம் பதட்டத்தை அதிகரிக்கிறது

பெரியபெரிய பைகளில் விதவிதமான காய்கறிகளை

நிறைத்துக்கொண்டு போனவர்கள்

சின்னச்சின்னப் பைகளிலும் கூட

கொஞ்சமாகவே வாங்கிக்கொண்டு செல்வதை

திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்

அம்மா தக்காளிச்சட்னி செஞ்சு குடுங்கம்மா

ஏம்மா இப்பெல்லாம் தக்காளியே வாங்க மாட்டேங்கிறீங்க”

என்று கேட்டுக்கொண்டே பள்ளிக்குள் சென்ற

குழந்தையின் குரல் காதுக்குள் கேட்கத் தொடங்கியதும்

இடதுகையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பணத்தை

மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்துவிட்டு

தைரியத்தை வரவைத்துக் கொண்டு

எதற்கும் துணிந்தவளாய் கடைக்குள் நுழைந்தவள்

தக்காளி விலையைப் பக்கத்தில் பார்த்ததும்

பேயறைந்தவளைப் போல அப்படியே நின்றுவிட்டாள்

பொன்னிறமாக மின்னிக் கொண்டிருக்கும் தக்காளியை

பொன்னைப் பார்ப்பதுபோலவே பார்த்துக் கொண்டிருந்தாள்

ஒருபோதும் வாங்கமுடியாது என்று தெரிந்தும்

விலை அதிகமாக இருக்கும் அந்த நகையை

ஒருதரம் எடுக்கச்சொல்லிப் பார்த்துவிடும் பெண்ணைப்போல

தக்காளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

காரிலிருந்து இறங்கிவந்த கணவனும் மனைவியும்

தக்காளியை மறைத்துக் கொண்டிருக்கும் அவளை

அதிகார தோரணையில் விலகச்சொல்லிவிட்டு

ஐநூறு ரூபாய்க்கு தக்காளி வாங்கிச்சென்றதை

கனவைப்போல பார்த்துக் கொண்டிருந்தாள்

அதிலும் தக்காளியை எடுத்துக்கொண்டு

அந்தப்பெண் காருக்கு நடந்துசென்ற நடையை

பார்க்கவே முடியாமல் திரும்பிக் கொண்டாள்

மீண்டும் இடதுகையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்

பணத்தை ஒருமுறை எண்ணிப்பார்த்தாள்

எத்தனைமுறை எண்ணினாலும் நூறுரூபாய்தான் இருந்தது

தைரியத்தை வரவைத்துக்கொண்டு

மெல்லத் தொட்டுப்பார்த்தாள் தக்காளியை

அந்த உணர்வு அவ்வளவு பரவசமாக இருந்தது

உணர்வுதானே தவிர உண்மையாக இல்லை

நேராகக் கடைக்காரரிடம் சென்று உயிரற்ற குரலில்

’ஓட்டத் தக்காளி இருக்காண்ணே’ என்று கேட்டாள்

முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டு

ஒரு மூலையைக் காட்டி மரியாதை இல்லாத குரலில்

’அதுவும் அம்பது ரூவாம்மா’ என்றார் கடைக்காரர்

வேகமாகச் சென்று பெட்டியைப் பார்த்தாள்

உண்மையாகவே அவ்வளவு ஓட்டைகளாக இருந்தது

அந்த ஓட்டைகளின் வழியே

ஆட்சியாளர்களின் அத்தனை நாடகங்களையும்

அப்படியே பார்க்க முடிந்தது

அந்த ஓட்டைகளின் வழியே

பதுக்கல்காரர்களின் அத்தனை மோசடிகளையும்

அப்படியே பார்க்க முடிந்தது

அந்த ஓட்டைகளின் வழியே

முதலாளிகளின் அடங்காத பணப்பசியையும்

அப்படியே பார்க்க முடிந்தது

விளைவித்தவனும் கலங்கிக் கொண்டிருக்கும்

வாங்குகிறவனும் கலங்கிக் கொண்டிருக்கும்

இந்தச் சமூகமைப்பை

இன்னும் எத்தனை காலம்

சகித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஒவ்வொரு வீட்டின் சமயலறையிலும்

மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டாமா

ஒவ்வொரு வீட்டின் உணவுநேரத்திலும்

நிம்மதி நிறைந்திருக்க வேண்டாமா

தக்காளி இல்லாமல் என்ன சமைக்கலாம் என்ற

ஒவ்வொரு குடும்பத் தலைவிகளின் மூளைகளுக்கும்

கொஞ்சமாவது ஓய்வுகொடுக்க வேண்டாமா

பேசுங்கள் தோழர்களே

பேசுங்கள் தோழர்களே

உங்களுக்காகவும் உங்களுக்காகத் தக்காளிகளை

உற்பத்தி செய்கிறவர்களுக்காகவும் உரக்கப் பேசுங்கள்!

Related Articles

6 comments

S.lokesh 05/07/2023 - 11:52 AM

கவிதை நல்லா இருக்கு

தக்காளிக்கு ஒரு கவிதை தலைப்பே அருமையா இருக்கு

Reply
S DHANARAJ 05/07/2023 - 11:58 AM

ஒரு கருத்து உன்னை வெகுவாக பற்றிக்கொண்டால் அது ஒரு சமூக மாற்றத்தையே உருவாக்கும் என்பதை, சற்று விலக்கி வைத்திருக்கும் இந்தசமுகத்திற்கு ஒரு சிவப்பு புரட்சியை தக்காளியும் செய்யும் என்கிறது தங்கள் எழுத்து.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்.

Reply
பெரணமல்லூர் சேகரன் 05/07/2023 - 12:00 PM

இன்றைய பேசுபொருளான தக்காளிக்கென நீண்ட கவிதையை வழங்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

தக்காளி குறித்து ஏராளமான மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வந்திருந்தாலும் கூட இப்படிப்பட்ட அர்த்த அடர்த்தி மிக்கதான உணர்வைப் பெற முடியாது.

ஓட்டைத்தக்காளிகளின் ஓட்டைகளை வைத்து ஆள்வோரைச் சாடியுள்ள கவிதையை வாசித்துப் பாருங்கள்.
உங்களால் சும்மா இருக்க முடியாது.

Reply
மைத்திரிஅன்பு 05/07/2023 - 2:21 PM

“உங்களுக்காகவும் உங்களுக்காகத் தக்காளிகளை
உற்பத்தி செய்கிறவர்களுக்காகவும் உரக்கப் பேசுங்கள்!’ அவசியம் பேச வேண்டியதை பேசாமல் இருப்பவர்களின் குரல்வளைகளை சென்று சேர வேண்டிய வரிகள். இது தக்காளிக்கான கவிதை மட்டுமல்ல தக்காளி போன்ற சாமானியர்களின் அதியாவசியங்களுக்கான பஞ்சமும் விலை மதிப்பும் மாறும் சூழலை தக்காளியிலிருந்து பார்க்க தூண்டும் கவிதை…

Reply
Baskaran F T 06/07/2023 - 6:39 AM

ஆப்பிளுக்கு நிகரான விலையை தொட்டிருக்கும் தக்காளிக்கு தரமான கவிதை வழங்கப்பட்டுள்ளது…. உற்பத்தியாளனுக்கு கிடைக்கும் மரியாதை இங்கு எப்படி என்பதை இந்த கவிதை சுட்டிக்காட்டுகின்றது …வாங்குபவனுக்கும் அது எவ்வளவு பெரிய மனச்சங்கடத்தையும் பணச் செலவையும் அளிக்கிறது என்பதை இந்த தக்காளி எடுத்துக்காட்டுகின்றது…. தக்காளியின் ஓட்டைகளில் நாட்டில் ஆட்சியாளர்களும் கொள்ளையர்களும் பதுக்கள்காரர்களும் முதலாளிகளும் செய்யும் அத்தனை அக்கிரமங்களும் வெளிப்படுகின்றது…. தக்காளியின் ஓட்டையிலே இவ்வளவு பெரிய கவிதை வந்திருக்கிறது என்றால் மிகவும் வரவேற்கக் கூடிய ஒன்று…

கம்யூனிச சிந்தனையாலராள் மட்டுமே இப்படி ஒரு கவிதை எழுத முடியும்…

தொடரட்டும் தோழர் உங்களின் கவிதைகள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும்….

Reply
aji murugesan 09/07/2023 - 10:25 AM

வேண்டியோ வேண்டாமலோ ஓட்டளித்தவர்களுக்கு ஓட்டைத் தக்காளியை வாங்கக் கூட வக்கற்ற நிலை.. யாரைச் சொல்லி நோவது..

#தக்காளி
வருங்காலங்களில் பங்குச் சந்தை முதலீடுகளில் முதலிடம் பெறக்கூடும்..
மதிக்கத்தக்க பொருளென கின்னஸ் சாதனையிலும் இடம்பெறும்..

Reply

Leave a Comment