படம் : துனிசீயாவின் டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜபீயர்.
உலகளவில்
மகளிருக்காக நடத்தப்படும்
டென்னிஸ் விளையாட்டின்
இறுதிப் போட்டியில்
பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல்
மோதிக்கொள்கிறார்கள் வீராங்கணைகள்
வீராங்கணைகளின் பரபரப்பு
பார்வையாளர்களையும் பற்றிக்கொள்கிறது
அமைதியாக இருப்பது
ஆராவாரம் செய்வது என
சகல உணர்வுகளையும்
வெளிப்படுத்துகிறார்கள் பார்வையாளர்கள்
நீண்ட போராட்டதிற்குப் பிறகு
அந்த போட்டியில் வெற்றியடைகிறாள்
துனிசீயாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபீயர்
அவளுடைய இரசிகர்கள் மட்டுமல்ல
விளையாட்டின் ஒட்டுமொத்த இரசிகர்களும்
கொண்டாடுகிறார்கள் அவளின் வெற்றியை
வெற்றியின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்காக
மைதானத்திலேயே
நேர்காணல் செய்யப்படுகிறாள்
இதுவரையிலும் தன்னுடைய
உறுதியான ஆட்டத்திறனால்
ஒவ்வொரு பார்வையாளரையும்
துடிதுடிக்கச் செய்துகொண்டிருந்தவள்
இப்போது தன்னுடைய
உண்மையான இதயத்தால்
ஒவ்வொரு பார்வையாளர்களையும்
துடிதுடிக்கச் செய்கிறாள்
ஒவ்வொரு பார்வையாளர்களையும்
கண்கலங்கச் செய்கிறாள்
இதோ அந்தச் சகோதரி
ஒன்ஸ் ஜபீயரின் வெற்றி வார்த்தைகள்
”இந்த வெற்றியால்
நான் மகிழ்ச்சியாக இல்லை
இந்த உலகத்தின் நிலைமைகள்
என்னை மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை
ஒவ்வொரு நாளும் படுகொலை செய்யப்படும்
பாலஸ்தீனத்தின் குழந்தைகளைப் பார்ப்பதற்கு
உண்மையிலேயே கடினமாக இருக்கிறது
இரவுகள் தூக்கமில்லாமல் இருக்கிறது
இதயம் உடைந்து நொறுங்குகிறது”
என்று சொல்லிவிட்டு
உண்மையாகவே உடைந்து அழுகிறாள்
விளையாட்டைப் பார்த்துகொண்டிருந்த
பார்வையாளர்களின் கண்களுக்கு முன்னால்
சட்டென்று ஒருகணத்தில்
இரத்தக்கறை படிந்த காஸாவின் குழந்தைகளை
கொண்டுவந்து நிறுத்துகிறாள்
இதுவரையிலும் டென்னிஸ் பந்து
அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததைப்
பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
பாலஸ்தீனத்தின் வானத்தில்
இப்போது போர்விமானங்கள் பறப்பதையும்
ஏவுகணைகள் எறிந்த குண்டுகள் பறப்பதையும்
துப்பாக்கிகள் துப்பிய தோட்டாக்கள் பறப்பதையும்
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பேசமுடியாமல் அழுத
ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீர்
பேச்சைத் தொடரமுடியாமல் வழிந்த
ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீர்
பேச்சை முடிக்கமுடியாமல் வழிந்துகொண்டிருந்த
ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீர்
அழ முடியாமல்
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
பாலஸ்தீனத்தின் தாய்மார்களை ஞாபகப்படுத்துகிறது
இந்தக் காலையில்
ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீரில்தான்
கண்விழிக்க வேண்டியிருந்தது
இப்போது வரையிலும்
உடைந்தழுத அவள்முகம்தான்
எனக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிறது
தன்னுடைய வெற்றியின் தருணத்தைப்
பாலஸ்தீனத்தில் படுகொலை செய்யப்படும்
குழந்தைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டாள்
நீங்களும்தான்
நீண்ட காலங்களாக
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் படுகொலைகளை
என்ன செய்யப் போகிறீர்கள்?
ஜோசப் ராஜா
4 comments
துனீசியாவின் டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜபீயர் வெறும் விளையாட்டு வீராங்கனையல்ல. அவர் மனிதாபிமானி.
எனவேதான் விளையாட்டு வெற்றியிலும் பாலஸ்தீனப் படுகொலைகளின் பால் கண்ணீர் வடிப்பது மனிதநேயம் சிலரின் மனதில் இன்னமும் குடியிருப்பதை வீராங்கனை மூலம் உண்ர்த்திள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
எல்லா விளையாட்டு வீரர்களும் அப்படி அல்ல. அதேபோல் தான் எல்லா மனிதர்களும் இந்த வீராங்கனையைப்போல் மனமிரங்கு வதில்லை.
உயிரிழப்புகளை உயிருள்ளவர்களால் ‘இதுவும் கடந்து போகும்’ என எப்படி அமைதியாய் கடக்க முடிகிறது? அது கள்ள மௌனமாகத்தானே இருக்க முடியும்.
அப்படி நீங்கள் இருக்க வேண்டாம். ஏதேனும் ஒரு வகையில் போருக்கு எதிரான வினையாற்றுவது காலத்தின் அவசியம்.
சிறப்பு தோழர்.. “ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீரைக் கொண்டு” நீண்ட காலமாக பார்த்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு பதிலீடு என்ன என்று அதிகாரத்தையும், அமைதியையும் ஒரே புள்ளியில் கேட்ட கேள்வி அவசியமானதென உணர்கிறேன்.
இதனை படித்த உடனே ஒன்ஸ் ஜபியூர் அவர்களின் பேட்டியை YouTube யில் பார்த்தேன்….கவிதை ஏற்படுத்திய தாக்கதை போலவே டென்னிஸ் வீராங்கனையின் கண்ணீரும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது….
YouTube link of that interview: https://youtu.be/iMY6rOzRMZ4?si=wVXhrz6Ehffha2px
ஒன்ஸ் ஜபியூர் தன்னுடைய ஆட்டத்தை அமைதிக்காகவும் போருக்கெதிராகவும் அடித்தடியிருக்கிறார் என்பதுடன், இந்த மாபெரும் மக்கள் திரளின் அமைதியை கவிதையின் வழியே அடித்தாடியிருக்கிறார் கவிஞர்.