சுத்தியலும் கதிர் அரிவாளும் முழு வாழ்க்கையும்

ரே மாதிரியான இந்த வாழ்வில்

சலிப்படையும் ஒவ்வொரு பொழுதும்

உன்னை மட்டும்தான் நினைத்துக் கொள்கிறேன்

உழைப்பையும் உறுதியையும்

உன்னிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறேன்

அதிலும் முக்கியமாக

எதற்கும் கலங்காத

எந்நிலையிலும் பின்வாங்காத

அந்த வலிமையான இதயம்

அதைத்தான்

இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறேன்

 

அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கையல்ல

நீ வாழ்ந்து கொண்டிருப்பது

ஒரு ஆணுக்கு நிகரான

இல்லை அதற்கும் மேலான

உழைப்பு உன்னுடையது

தியாகம் உன்னுடையது

இழப்பும் கூட உன்னுடையதே

 

வேலையில் தொடங்கி வேலையில் முடியும்

இந்த தேசத்தின்

ஒரு கிராமத்து மனுஷியின்

கடினமான பாடுகள் நிறைந்த

ஒரு வாழ்க்கைக்கு

உன்னை விடவும்

இரத்தமும் சதையுமான உதாரணம்

யார் இருக்க முடியும்

 

கணவனைப் பார்த்துக்கொள்ளவும்

குழந்தைகளைப் பராமரிக்கவும்

வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கவும்

வயல்வெளிகளுக்கோ மலையடிவாரங்களுக்கோ

உழைக்க வேண்டி நீ ஓடும் போதும்

நான் நினைத்துக் கொள்வேன்

அம்மாவுக்கு ஆயிரம் கைகள்

இருக்கும் போல என்று

கதிர் அரிவாள் பிடித்து

சுத்தியல் பிடித்து

காய்த்துப் போன

சொரசொரப்பான

உன்னுடைய கரங்களில்

அன்போடு முத்தமிடுகிறேன்

வெயிலிலும் மழையிலும் மணலிலும் பாறையிலும்

நடந்துநடந்து வெடித்துப் பிளந்திருக்கும்

உன்னுடைய பாதங்களை

கண்ணீரால் ஒருமுறை கழுவித் துடைக்கிறேன்

 

தொலைதூரத்தில் இருக்கிறவன்

இப்போதுதான்

உன்னை நெருங்குவதாக உணர்கிறேன்

எடையற்ற பொருளாய் காற்றில் பறந்துவந்து

உன் மடியில் படுத்துக்கொள்ள விரும்புகிறேன்

என்னுடைய காதுகளையும்

இதயத்தையும் கூட திறந்து வைக்கிறேன்

எனக்காக ஒருமுறை

அந்தத் தாலாட்டை மீண்டும் பாடு

எனக்காக பாடு என் பிரியமே

 

எந்த வெயிலுக்கும் நிழல் தேடாமல்

எந்த மழைக்கும் கூரை விரும்பாமல்

எந்தச் சூறாவளிக்கும் எங்கும் ஒதுங்காமல்

விதைக்கவும் களையெடுக்கவும்

அறுக்கவும் கல்லுடைக்கவும் என

எல்லாப் பருவங்களிலும்

உழைத்துக் கொண்டிருந்தவளே

காற்றும் ஓய்ந்த போனது

மழையும் ஒய்ந்து போனது

வெயிலும் மறைந்து போனது

ஆனால் நீ மட்டும்

வேலை செய்து கொண்டே இருக்கிறாய்

 

கடைசியாகத் தூங்கி

முதலாவதாக எழுந்திரிக்கும்

உன்னுடைய ஒவ்வொரு நாளும்

உழைப்போடு கழிய

உனக்கான ஓய்வோ ஒருபோதும் இல்லை

ஓய்வுநாள் இல்லை திருவிழா இல்லை

உழைப்பிலும் உறுதியிலும்

கருணையிலும் அன்பிலும்

யாரோடும் எதனோடும்

ஒருபோதும்

ஒப்பிட முடியாதவளாய் விளங்குகிறவளே

மலைகளிலிருந்தும் வயல்வெளிகளிலிருந்தும்

வியர்வை வழியவழிய

இரத்தம் சொட்டச்சொட்ட

எனக்கான ஆகாரத்தை

எடுத்து வந்தவளே

ஓ என் தாயே

உன்னுடைய கரங்கள் அழுத்திப் பிடித்த

அந்த சுத்தியலுக்கும்

அந்தக் கதிர் அரிவாளுக்கும்

அர்த்தம் கற்பிப்பேன்

அதற்காகத்தான் வாழ்கிறேன்

 

இரத்தம் சிந்தச் சிந்த

நீ கடந்து வந்த காலங்களை

உன்னுடைய பேரன்களுக்கும் பேத்திகளுக்கும்

உணர்வூட்டுகின்ற உயிரூட்டுகின்ற கதைகளாக

காலங்களைக் கடந்தும் கடத்துவேன்

அதற்காகத்தான் எழுதுகிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 29/04/2024 - 2:42 PM

உழைக்கும் வர்க்கத்தின்
உதிரத்தாலான வியர்வையைத் தமது எழுத்துக்களால் வடித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

உழைக்கும் வரக்கத்துக்காக மட்டுமே அவரது தூரிகை எழுதியது. எழுதிக் கொண்டிருக்கிறது. எழுதும்.

நீங்கள் என்ன பங்களிப்பு செய்யப் போகிறீர்கள் உழைக்கும் வர்க்கத்துக்காக?அவர்களுக்காக எதையும் செய்யாமல் இருக்க முடியாது.

கவிதையை வாசித்தாலே உத்வேகம் அடைவீர்கள்.

வாசியுங்களேன்.

Reply

Leave a Comment