சுதந்திரம் என்பது

ந்த மலைப்பாதையில்

நீண்ட நடைப்பயணத்தில்

காதலி கேட்டாள்

சுதந்திரம் என்பது

என்னவாக இருக்கும் என்று

காற்று வீசிக்கொண்டிருந்ததைப் போல

இலைகள் சலசலத்ததைப் போல

கவிதையும் இயல்பாய் பிரவாகமெடுத்தது

 

சுதந்திரம் என்பது

உள்ளுக்குள் மட்டுமே உருவாவது அல்ல

சுதந்திரம் என்பது

புறத்தில் மட்டுமே நிழலாடுவது அல்ல

சுதந்திரம் என்பது

உள்ளும் புறமும் உருமாறுவது

சுதந்திரம் என்பது

அகமும் புறமும் அழகாவது

சுதந்திரம் என்பது கொடுப்பதா

சுதந்திரம் என்பது பெறுவதா

நான் உனக்கும் நீ எனக்குமாக

சுதந்திரம் என்பது

கொள்வதும் கொடுப்பதுமல்லவா

இந்த நவீன உலகத்தில்

இந்த அவசர உலகத்தில்

இந்தப் பொருளியல் உலகத்தில்

சுதந்திரத்தின் தேவையை

சுதந்திரத்தின் மகிமையை

உன்னைப்போல் யாரறிவார்

இந்த உலகம்

காதலால் நிறைந்திருக்கிறது என்றால்

சுதந்திரமாக இருக்கிறதென்று அர்த்தம்

இந்த மனிதர்கள்

காதலோடு இருக்கிறார்கள் என்றால்

சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள்

என்று அர்த்தம்

 

நீங்களே சொல்லுங்கள்

இந்த உலகத்தின் கரங்களில்

என்ன இருக்கிறது

இந்த உலகத்தின் கனவுகளில்

என்ன இருக்கிறது

இந்த உலகத்திடம்

கனவுகள் என்று ஏதும் இருக்கிறதா

சகோதர மனிதர்களின் மீது

விஷத்தைக் கக்குக்கின்ற நச்சுப் பாம்புகள்

பெருகிப் போய்விட்டன

ஒரு மனிதன்

இன்னொரு மனிதனைத் தாக்குவதற்காக

காரணங்களைத் தேடி

வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறான்

மத உணர்வு திடீர்திடீரென்று

மதவெறியாக உருமாறி

பூமியைக் கருநிற மேகமாய்ச்

சுற்றிக் கொள்கின்றன

இந்த உலகத்தின் ஒரு மூலையில்

அச்சம் அகலாமல் இருக்கிறது

அன்பின் பாதை

முடிந்த வரையிலும்

முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது

மேய்ப்பனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு

வனாந்திரமெங்கும் சுற்றியலையும்

ஆடுகளைப் பாருங்கள்

ஒரே நேரத்தில் ஒரே சீராக

நடந்து செல்கின்றன ஆடுகள்

தாயின் மார்புகளில்

பாலருந்தும் குழந்தைகளாய்

அந்த ஆற்றின் முகத்துவாரத்தில்

வரிசையாக எவ்வளவு அழகாக

அவைகள் தாகம் தீர்த்துக் கொள்கின்றன

குழந்தைகளைப்

பார்த்துக் கொள்வதைப் போல

அக்கறையோடும் அன்போடும்

அவைகளை வழிநடத்திச் செல்கிறான்

அந்த மேய்ப்பன்

ஆடுகளுக்காக பேசுகிறான்

ஆடுகளோடு நடக்கிறான்

ஆடுகளுக்காக ஆடுகிறான்

ஆடுகளோடு இளைப்பாறுகிறான்

இளைப்பாறும் வேளையிலே

இடையில் சொறுகி வைக்கப்பட்டிருந்த

புல்லாங்குழலை எடுத்து வாசிக்கிறான்

வனாந்திரம் இசையால் நிறைந்து பெருகுகிறது

மலைமுகடுகளில் மலைச் சரிவுகளில்

புல்வெளிகளில் அடர்ந்த காடுகளில்

ஆறுகளில் குளங்களில்

எங்கும் எங்கெங்கும்

புல்லாங்குழல் ஓசை

ஓசையின் தாளகதியில்

ஒருமித்து ஆடுகின்றன

பிரபஞ்சத்தின் எல்லாமும்

இசை பிரபஞ்சமாக

இசையே பிரபஞ்சமாக

அந்த மேய்ப்பனின் இசையே பிரபஞ்சமாக

அந்த மேய்ப்பனின் இசையே பிரபஞ்சமாக

அப்படிப்பட்ட மேய்ப்பன் இல்லாத

அப்படிப்பட்ட மேய்ப்பனை பெறுகின்ற

பாக்கியம் இல்லாத

இந்த மனிதர்கள்

சுதந்திரமானவர்களாகவா இருக்கப் போகிறார்கள்

 

சுதந்திரத்தின் ருசியறியாதவர்கள்

சுற்றிலும் நிறைந்திருக்கிறார்கள்

வெறுப்பின் இதயங்கள்

எங்கும் எங்கெங்கும்

வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கின்றன

குழந்தைகளைக் கொல்லும்

யுத்தவெறியர்கள்

போர்விமானங்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்

இரத்தம் இரத்தம் இரத்தம்

நிலமெங்கும் இரத்தம்

பிசிபிசுத்துக் கொண்டிருக்கிறது

நீங்களே சொல்லுங்கள்

பயத்தில் பணிய வைத்து விடலாம்

அச்சத்தில் வெற்றி கொண்டு விடலாம்

அப்புறம்

ஒரு ஏவுகணை

ஒற்றைக் குண்டு

ஒரு நாட்டை அழித்துவிடலாம்

அப்புறம்

வலியது எளியதை வெல்லலாம்

இருப்பவன் இல்லாதவனைத் தின்னலாம்

துப்பாக்கிகள் கத்திகளை தாக்கலாம்

கத்திகள் வெறுங் கைகளை வெட்டலாம்

அப்புறம்

இறுதியாக இந்த உலகம்

நாசமாய்ப் போகாதிருப்பதற்காக

இசையையும் கவிதையையும்

தேடலாம் அல்லவா

அப்படியென்றால்

சுதந்திரத்திற்கான பாதை

இன்னும் இன்னும்

தொலைவாக இருக்கிறது என்பதை

சொல்லவும் வேண்டுமா நான்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment