உலகத்தின்
எந்தவொரு நாட்டின் சுதந்திரத்தையும்
ஒருபோதும் விரும்பாத அமெரிக்காவில்தான்
உலகத்தின்
எந்தவொரு தேசத்தின் விடுதலையையும்
எப்போதும் ஆதரிக்காத அமெரிக்காவில்தான்
சுதந்திரத்தின் தேவையைச்
சொல்லிக் கொடுப்பதற்காவே
உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
சுதந்திரதேவியின் சிலை
பேரழிவைப் பிரசவிக்கும்
எல்லாப் போர்களிலும்
நேரடியாகவோ மறைமுகமாகவோ
அமெரிக்கக் கரங்களில்
இரத்தம் தோய்ந்து கொண்டிருப்பதை
உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்
அந்தச் சுதந்திரதேவி
தாமிரமும் இரும்பும் மட்டுமல்ல
அந்தச் சிலையில் நிறைந்திருக்கும்
அந்தச்சிலை சொல்லிக் கொண்டிருக்கும்
சுதந்திரக் கருத்தே முக்கியமானது
அதனால்தான்
அதனால்தான்
எங்கள் பெயரைச் சொல்லிச்சொல்லி
பாலஸ்தீனர்களைப்
படுகொலை செய்யாதீர்கள்
காஸாவின் குழந்தைகளைக்
கல்லறைக்கு அனுப்பாதீர்கள் என்று
அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும்
யூதர்கள்
சுதந்திர தேவியின் காலடியில்
பேரழிவை நடத்திக் கொண்டிருக்கும்
இஸ்ரேலைக் கண்டித்தும்
எப்போதும்போல பின்னாலிருந்து
பேரழிவைத் தூண்டிக் கொண்டிருக்கும்
அமெரிக்காவைக் கண்டித்தும்
கடுங்கோபத்தோடும்
பெருந்துயரத்தோடும்
எதிர்ப்பின் பதாகைகளைப் பறக்கவிட்டு
எதிர்ப்பின் முழக்கங்களை எழுப்பியபடி
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களோடு சேர்ந்து
அந்தச் சுதந்திரதேவி சிலையும்கூட
பாலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்காகப்
போராடிக் கொண்டிருக்கிறது!
ஜோசப் ராஜா
1 comment
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுதந்திர தேவி சிலை க்கும் அமெரிக்காவின் அணுகுமுறைக்கும் துளியளவும் தொடர்பில்லை. அதற்குச் சான்று ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இஸ்ரேல் பாலஸ்தீனப் போரில்
அமெரிக்காவின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை.
ஐ.நா. பொதுச்செயலாளர் தொடர்ந்து வலியுறுத்தியும் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
உலக நாடுகளின் போர்நிறுத்த நிர்ப்பந்தம் இன்னும் வலுவடைவதன் மூலமே போர் நிறுத்தம் சாத்தியம். அதன் ஒரு கண்ணியாய் நாமும் கவிஞர் ஜோசப் ராஜாவின் வழி இணைந்து இருப்போம்.