ஒரு மரணம்
எவ்வளவு துயரமானது என்பதை
நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை
ஆனால்
அப்படி மரணித்தவரை
இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது
சாதியின் பெயரால் பாதை மறிக்கப்படுவதை
சாதியின் பெயரால் பயணம் தடுக்கப்படுவதை
அப்படி மறிக்கப்படுவதிலும்
அப்படித் தடுக்கப்படுவதிலும்
நிறைந்திருக்கும் வலியை வேதனையை
நீங்கள் புரிந்துகொள்ள
இன்னும் எத்தனை காலம் தேவைப்படும்
இன்னும் எவ்வளவு உரையாடல் தேவைப்படும்
மரணத்தின் துயரத்தைத் தாங்கிக்கொண்டு
பிணத்தைத் தூக்கிச் செல்கிறவர்கள்
இழப்பின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு
இறந்தவரை எடுத்துச் செல்கிறவர்கள்
பாதை மறுக்கப்படும் துயரத்தை
பாதை மறிக்கப்படும் பாரத்தை
எப்படித் தாங்கிக் கொள்வார்கள்
காலங்காலமாக வேடிக்கை பார்ப்பவர்களே
காலங்காலமாக அமைதியாக இருப்பவர்களே
காலங்காலமாக கள்ளமெளனம் காப்பவர்களே
காலங்காலமாக சாதியே இல்லையென்று சாதிப்பவர்களே
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும்
மோத்தக்கல் கிராமத்தில்
சுடுகாட்டுப்பாதைக்கு வழிசொல்லுங்கள்
நல்லவர்களே
நாகரீகத்தின் பாதையில்
நடைபோட வேண்டாமா நாமும்!
ஜோசப் ராஜா
1 comment
“ஒரே நாடு ஒரே தேர்தல்” என முழங்கும் ஆளும் வர்க்க முகம் கிழிந்து தொங்குகிறது ஒரே சுடுகாட்டில்.
இந்திய சுதந்திரப் பவளவிழா முடிந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. ஆயினும் சுடுகாட்டுப் பிரச்சனை சுடும் உண்மையாகத் தொடர்கிறது. இதைத்தான் கவிஞர் ஜோசப் ராஜா பாதிக்கப்பட்டவர்களின் குரலாகத் தமது கவிதையில் குறிப்பிடுகிறார்.
படியுங்கள்
பரப்புங்கள்.