யுத்தம்
விரிவடைந்து கொண்டிருக்கிறது
பலிகள்
அதிகமாகிக் கொண்டிருக்கிறது
நகரங்கள்
சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
குழந்தைகள் கூட
பிஞ்சுக் குழந்தைகள் கூட
ஏதுமறியாக் குழந்தைகள் கூட
இதயமில்லாமல்
இரக்கமில்லாமல்
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எனக்குத் தெரியும்
பதட்டத்தோடுதான்
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருப்பீர்கள்
வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருக்கும்
குழந்தைகளின்
உயிரற்ற உடல்களைத்
கடைசியாகத்
தாங்கியிருக்கும் தாய்மார்களின்
உயிரற்ற முகங்கள்
உங்கள் இதயத்தைக்
குத்திக் கிழித்திருக்கும்
எனக்குத் தெரியும்
பசித்த வயிறோடு
உணவுக்காக
அலைந்து கொண்டிருக்கும்
குழந்தைகளின்
வாடிய முகங்கள்
உங்களை
உள்ளும் புறமும்
அரித்திருக்கும்
ஆனால்
உங்களைப் போலல்ல
அந்த
ஆயுத வியாபாரி
பேரழிவுகளைப்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறான்
பேரழிவுகளைப்
பார்த்துப் பார்த்து
இரசித்துக் கொண்டிருக்கிறான்
யுத்தத்தின் வேகம்
அதிகமாக அதிகமாக
தன்னுடைய
ஆயுத உற்பத்தியின் வேகத்தை
அதிகரிக்கிறான்
யுத்தத்தில் கொல்லப்படும்
ஒவ்வொரு உடலையும்
பார்த்துப் பார்த்துத்
தன்னுடைய ஆயுதங்களின்
அழிக்கும் திறனை
எண்ணி எண்ணிப்
பெருமை கொள்கிறான்
கொத்துக் கொத்தாக
கொல்லப்படும்
குழந்தைகளைப் பார்த்துப்பாத்துச்
சிரிக்கிறான் ஆயுத வியாபாரி
தாக்குகிறவனுக்கும்
தற்காத்துக் கொள்கிறவனுக்கும்
ஆயுதங்கள்
தேவைப்படுகிறது
பக்கத்தில் இருப்பவனுக்கும்
பாதுகாத்துக் கொள்வதற்கு
ஆயுதங்கள்
தேவைப்படுகிறது
இல்லையென்றாலும்
தேவை உருவாக்கப்படுகிறது
போருக்கு எதிராக
குரல் கொடுக்கும்
தோழர்களே
சொல்லுங்கள்
ஆயுத வியாபாரியை
என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
ஆயுத வியாபாரிகளுக்கான
இந்தச் சமூக அமைப்பை
என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
