அடர்ந்த கரும்புகை
அந்த நிலமெங்கும் சூழ்ந்திருக்கிறது
விமானங்கள் அங்குமிங்கும்
அவசரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன
மிச்சமில்லாமல்
எல்லாவற்றையும் பார்த்துவிட்ட பெரியவர்
இடிபாடுகளுக்கு நடுவில்
புகைப்பிடித்தபடி உட்கார்ந்திருக்கிறார்
அவரை நோக்கி
தளர்ந்த கால்களோடு
மெல்ல நடுங்கும் கைகளோடு
நெருங்கி வருகிறாள் ஒருத்தி
பெரியவரே
சிகப்புத் தொப்பியும்
வெள்ளைநிறக் காலணியும் அணிந்த
என் மகளை
எங்காவது பார்த்தீர்களா
என்று சொல்லி முடிப்பதற்குள்
அடக்க முடியாத அழுகை
பீறிட்டு வந்தது அவளுக்கு
உற்று நோக்கிய பெரியவர்
எந்தப் பதிலும் சொல்லவில்லை
சுற்றிலும் தேடும் கண்களோடு
மீண்டும்
நடக்கத் தொடங்கினாள்
கால்கள் துண்டாகிப்போன ஒருவனைத்
தூக்கிக் கொண்டு
ஓடி வந்தவர்களுக்கு
ஒதுங்கி வழிவிட்டாள்
அவர்களுக்குப் பின்னால்
துண்டான காலை
தூக்கி வந்தவனை நிறுத்தி
சிகப்புத் தொப்பியும்
வெள்ளைநிறக் காலணியும் அணிந்த
என் மகளை
எங்காவது பார்த்தீர்களா
என்று கேட்டாள்
நிற்க நேரமில்லாதவன்
பதிலே சொல்லாமல்
ஓடிப்போனான்
தூரத்தில் யாரோ
இருப்பதைப் பார்த்து
வேகமாக நடந்தாள்
வெள்ளைத் துணியில்
சுற்றப்பட்ட குழந்தையை
இறுக அணைத்தபடி
வெறித்த கண்களோடு
உட்கார்ந்திருந்தாள் தாயொருத்தி
எதுவும் கேட்காமல்
அவள் தலையில் கைவைத்து
ஆறுதலைத் தெரிவித்துவிட்டு
அவசரமாக நடக்கத் தொடங்கினாள்
எங்கும் இடிபாடுகள்
எங்கும் மரணஓலங்கள்
எங்கும் பிணக்குவியல்கள்
அவளையறியாமல்
அவளுடைய உதடுகள்
சிகப்புத் தொப்பியும்
வெள்ளைநிறக் காலணியும் அணிந்த
என் மகள்
என் மகள் என்று
முணுமுணுத்தபடியே இருந்தன
ஆனாலும் அவளுக்கு
நம்பிக்கை நிறைந்திருந்தது
பாதுகாக்கப்பட்ட பகுதி
என்றறிவிக்கப்பட்ட இடத்தில்
கூட்டமாக இருந்ததால்
விரைந்து சென்றாள்
இப்போதுதான்
குண்டுவிழுந்ததாகப்
பேசிக்கொண்டார்கள் அங்கே
இடிபாடுகளுக்குள்ளிருந்து
மனித உடலின் பாகங்களை
எடுத்துக் கொண்டிருந்தார்கள்
தோண்டுகிறவன்
தூக்கியெறிந்த பொருளொன்று
அவள் கால்களுக்குக் கீழே
விழுந்து கிடந்தது
வெள்ளை நிறக் காலணியல்ல
சிகப்பு நிறக் காலணியென்பதால்
அமைதியாக நின்று கொண்டிருந்தாள்
நீங்களே சொல்லுங்கள்
பெற்றவளுக்குத் தெரியாததா
கதறியழுதபடி
காலணியை எடுத்தவள்
வெறிபிடித்தவளைப்போல
இடிபாடுகளுக்குள்
தேடத் தொடங்கினாள்
எத்தனை தொப்பிகள்
எத்தனை காலணிகள்
அந்த ஆயுத வியாபாரிகளும்
அந்த யுத்த வெறியர்களும்
நாசமாய்ப் போவதாக!
ஜோசப் ராஜா