சாலைப் பயணம்
எல்லோருக்கும் தேவையானது
சாலைப் பயணம்
எல்லோருக்கும் அவசியமானது
குழந்தைகள்
பள்ளிக்கூடத்திற்குச் செல்ல
இளைஞர்கள்
கல்லூரிக்குச் செல்ல
பெரியவர்கள்
வேலைக்குச் செல்ல
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சாலையும்
லட்சக் கணக்கானவர்களைச்
சுமந்து கொண்டிருக்கின்றன
வீட்டிலிருந்து புறப்பட்டு
சாலையை அடைந்ததும்
சிறகுகள் முளைப்பதை
என்னைப் போலவே
நீங்களும் உணர்ந்திருக்கலாம்
எப்பேர்ப்பட்ட துயரத்தையும்
ஒரு சாலைப் பயணம்
இருந்த இடம்தெரியாமல்
துடைத்து அழித்துவிடும்
எப்பேர்ப்பட்ட பாரத்தையும்
ஒரு சாலைப்பயணம்
ஒன்றுமில்லாமலாக்கிப்
பறக்கச் செய்துவிடும்
ஏனென்றால்
ஒவ்வொரு பயணத்திலும்
உலகமே
நம் கண்முன்னால்
விரிந்து கிடக்கிறது
ஒவ்வொரு பயணத்திலும்
ஒவ்வொரு விதமான அனுபவங்கள்
நமக்கு முன்னே
கொட்டிக் கிடக்கின்றன
அப்படியோர்
அனுபவத்தை
அனகாபுத்தூரிலிருந்து
பல்லாவரம் செல்லும்போது
அனுபவிக்க நேர்ந்தது
இத்தனை வருடங்களில்
எத்தனையோ சாலைகளில்
பயணித்திருந்தாலும்
நான்கு கிலோமீட்டர் வரையிலும்
நடனமாடிக் கொண்டே
செல்லும் அனுபவம்
புதியதாக
புத்தம்புதியதாக இருந்தது
என்னோடும்
எனக்கு எதிரிலும்
மேடும் பள்ளமுமான
அந்தச் சாலையில்
நடனமாடியபடியே
வந்து கொண்டிருந்த
வாகன ஓட்டிகளைப் பார்த்தேன்
உண்மையைச் சொன்னால்
அந்தச் சாலை நடனம்
யாருக்கும்
மகிழ்ச்சியைத் தரவில்லை
ஒவ்வொரு முகத்திலும்
அதிகாரத்தின் மீதான
கோபமும்
அதிருப்தியும்
ஆத்திரமும் மட்டுமே
நிறைந்திருந்தது
மாண்புமிகு யாராவது
ஒருதரம்
இந்தச் சாலையில்
பயணம் செய்தால்
ஒருவேளை
சாலை உயிர்த்தெழலாம்
செய்வீர்களா!
ஜோசப் ராஜா