சாப்ளின் : யுத்தத்திற்கு எதிரான பெருங்கலைஞன்

கள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில் புன்னகை நிரந்தரமாகத் தங்கியிருக்கிறது. நானோ, சாப்ளினை என் மகள்களின் முகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். கலை உண்மைக்கு நெருக்கமாகவும், சமூகப் பொறுப்புணர்வோடும், தார்மீகக் கோபத்தோடும், நியாயமான விமர்சனத்தோடும் உருவாக்கப்பட்டால் காலத்தால் அழியாமல் இன்னும் அதிகமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். சாப்ளினிடம் தெரிந்து கொண்டது போக, மிச்சத்தைத் தேடி ஓடிவந்த மகள் ஹிட்லரைப்பற்றி கேள்விகளை அடுக்கினாள். கதைசொன்ன சாப்ளினிலிருந்து கதையை முடித்த சோவியத்தின் செஞ்சேனை வரைக்கும் அவளுக்குச் சொல்லிமுடித்தபோது வரலாற்றின் மீது பிரமிப்பு உருவானதைப் பகிர்ந்துகொண்டு உற்சாகமாக உறங்கச் சென்றாள்.

சாப்ளினைப்பற்றி நினைக்கத் தொடங்குகிறேன். இதயத்தின் ஆழத்திற்குள்ளிருந்து காலத்தால் அழிக்கமுடியாத காட்சிகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன. எளிய மனிதர்களின் பக்கம் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், கணப்பொழுதில் சிரிப்பை வரவைத்தாலும் மறுகணம் கண்ணீரைத் தோண்டி இழுப்பதை இல்லையென்று சொல்லமுடியாது. உழைக்கும் மக்களின் வலிகளையும், வேதனைகளையும், தோல்விகளையும், எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையின் மீதான அவர்களின் பெரும் வேட்கையையும் என சாப்ளின் எடுத்துக்கொடுத்த காட்சிகள் விழித்திரையில் அங்குமிங்கும் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் இயந்திரத்தின் பற்சக்கரங்களுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளியைக் காட்டிய அந்தக் காட்சி வெறும் சிரிக்க வைப்பதற்காக எடுக்கப்பட்டதா என்ன? இலாபமே குறிக்கோளாய் அலைந்து கொண்டிருக்கும் நவீன முதலாளிகளின் மீது ஒரு கலைஞன் எழுப்பிய கடுமையான விமர்சனமில்லையா!

ஒரு நாயோடு சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் சாப்ளின், வீடில்லாமல் எங்காவது முடங்கிக் கிடக்கும் சாப்ளின், துயரத்தின் எந்தத் தருணத்திலும் சிரிக்கத்தெரிந்த சாப்ளின், தவறி விழவைக்கப்படும் சாப்ளின், உடனே எழுந்துகொள்ளும் சாப்ளின், காதலியின் கரம்பற்றிக்கொண்டு அடிவானத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் சாப்ளின், ஒருவேளை சாப்பாட்டிற்காகக் கடுமையாக உழைக்கும் சாப்ளின், எளிய மனிதர்களோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் சாப்ளின், அன்பிற்காக ஏங்கும் சாப்ளின், மானுட அன்பை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் சாப்ளின் என காட்சிகள், இரத்தமும் சதையுமான காட்சிகள் இந்த இரவை நிறைத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ளினைப்பற்றி புதிதாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? எல்லோருக்கும் தெரிந்த சாப்ளினைப்பற்றி தெரியாத எதையும் சொல்லிவிட முடியுமா?

சாப்ளினை வழிபடும் திரைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். சாப்ளினை வாய்வலிக்கப் பேசிக்கொண்டிருப்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன். சாப்ளினை வெறும் நகைச்சுவைக் கலைஞன் என்ற கட்டத்திற்குள் அடைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தோழர்களே, தி கிரேட் டிக்டேட்டரைப் போல இன்றளவும் யாரும் எதையும் எடுத்துவிடவில்லை. இந்த உலகம், இந்தக் கலைஞர்கள் சாப்ளினை வழிபடுகிறார்கள் என்பது உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை பெரிய திரையில் அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா! தி கிரேட் டிக்டேட்டர் வெறும் திரைப்படமல்ல! ஒரு கலைஞனின் கடும்கோபம். ஒரு கலைஞனின் பேரன்பு. ஒரு கலைஞனின் ஈவுஇரக்கமற்ற விமர்சனம். சாதாரண ஒரு கவுன்சிலரைக்கூட விமர்சிக்கமுடியாத துயரத்தோடு ஹிட்லரை, உலகமே பார்த்தும், கேள்விப்பட்டும் அஞ்சிக்கொண்டிருந்த ஹிட்லரை எள்ளி நகையாடிய சாப்ளினை நினைத்துப் பாருங்கள்.

1939 ல் போலந்தைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதின் மூலமாக இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி வைக்கிறான் ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிட்லர். ஏற்கனவே யூதர்களைத் தேடித்தேடிக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது ஒருபுறமென்றால், இன்னொருபுறம் போலந்து போன்ற அண்டை நாடுகளை யுத்தம் என்ற பெயரில் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறான் ஹிட்லர். ஜெர்மனியிலும் அதனுடைய ஆளுகைக்கு உட்பட்ட அண்டை நாடுகளிலும் நாஜிக்களின் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. மக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தச் சட்டம். நகைச்சுவையைக் கட்டுப்படுத்த சட்டம், ஜாஸ் இசை தடைசெய்யப்படுகிறது. பள்ளி கல்லூரிகளின் பாடப்புத்தங்களின் நாஜிக்கருத்துக்கள் ஊடுவுகின்றன.

ஹிட்லர் படங்கள் ஜெர்மனியின் பொதுக்கழிப்பிடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உங்களுக்கு வேறு யாராவது ஞாபகம் வரலாம், சர்வாதிகாரிகள் அப்படித்தான் சுயமோகிகளாக இருப்பார்கள் தோழர்களே! தோராயமாக அந்தக் காலத்தில் 1600 செய்தித்தாள்கள் நாஜிக்களால் மூடப்பட்டிருக்கின்றன. அதிகமாகவும், வேகமாகவும் கொலைசெய்வதற்காகப் போலந்தின் ஆஷ்விட்ஸ் போன்று வகைவகையாக வதைமுகாம்கள் திறக்கப்பட்டுகின்றன. அங்கு கோடிக்கணக்கான கொலைகள் இரக்கமேயில்லாமல் அரங்கேற்றப்படுகின்றன. மதம் சாதி இனம் போன்ற பெருமைகளெல்லாம் மண்டைக்குள் நிறைந்துகொண்டால் எப்படிப்பட்ட குற்றங்களுக்கும் காரணம் சொல்லிக்கொண்டு கடந்து செல்லலாம் என்பதற்கு அழுத்தமான உதாரணம் நாஜிக்களின் பைத்தியக்காரத்தனங்கள்.

1941 லிருந்து 1945 வரையிலும் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா அணுகுண்டு போட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகியைக் காட்டிலும் ஹிட்லரின் கொலைக்கரங்களால் கொல்லப்பட்டவர்கள் அதிகமென்று ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இத்தனையையும் ஏன் சொல்கிறேனென்றால், இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதுதான், இதையெல்லாம் பார்த்து உலகமே மெளனத்தில் அறையப்பட்டிருக்கும் நேரத்தில்தான் சாப்ளின் என்ற அந்த உன்னதக் கலைஞன், அந்தச் சர்வாதிகாரியை, அந்த மனிதகுல விரோதியை, அந்த மானுடக் கறையை எள்ளி நகையாடித் திரைப்படம் எடுக்கிறார். அவருக்குத் தெரியும் யாரும் தயாரிக்க முன்வர மாட்டார்கள் என்று. சொந்தப்பணத்தில் எடுக்கத் துணிகிறார். அந்தத் துணிச்சல்தான், அந்த வைராக்கியம்தான் இந்த இரவிலும் அந்தக்கலைஞனை எழுதச்சொல்லி துரத்திக் கொண்டிருக்கிறது.

தோழர்களே! ஒருவகையில் தி கிரேட் டிக்டேட்டர், ஹிட்லருக்கு எதிரான படமென்பதால், போருக்கு எதிரான படமும் கூட. திரைப்படத்தின் கடைசிக்காட்சியில் வருகின்ற சாப்ளினின் உரை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மனிதர்களுக்கு வேலை வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும், முதியவர்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கும் உலகத்திற்காகப் போராடுவோம். இவற்றையெல்லாம் தருவதாகக் கூறித்தான் இந்த மிருகங்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் பொய் சொல்கிறார்கள்! அவர்கள் ந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை! சர்வாதிகாரர்கள் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். மக்களை அடிமைப்படுத்துகிறார்கள். என்றதாகச் செல்லும் நீண்ட அந்த உரை அன்றும் இன்றும் பொருந்தக்கூடியதுதான். ஒவ்வொரு கலைஞனும் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய உரை. மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சாப்ளினைப் போன்ற உண்மையான கலைஞர்கள் உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

நெருக்கடியான நேரங்கள் மட்டுமே உன்னதமான கலைஞர்களைப் பிரசவித்துவிடாது. உலகத்தின் நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு அதைக் கலையில் நேர்மையாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திய கலைஞர்கள்தான் காலத்தை நீட்டித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் பீத்தோவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படித்தான் கார்க்கி கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறான். அப்படித்தான் பாரதி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறான். அப்படித்தான் சாப்ளினும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கும் கூட உன்னதங்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஆசைகள் இருப்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். சர்வாதிகாரிகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் இன்னும் இனப்படுகொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் இன்னும் மானுடத்திரளுக்கு விரோதமான காரியங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். உங்களால் முடியுமென்றால் அவர்களைச் சந்திசிரிக்க வையுங்கள். இந்த உலகத்தின் முன்னால் அவர்களை அம்பலமாக்குங்கள். ஹிட்லர் கோபப்படுவான், பழிவாங்கத்துடிப்பான் என்று தெரிந்தும் சாப்ளின் படமெடுத்தாரல்லவா!

கலை மானுட அச்சங்களுக்கு அப்பாற்பட்டது. கலைஞன் மானுடக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டவன். சர்வாதிகாரிகள் அழியட்டும். கலையும் கலைஞர்களும் காலம்தாண்டி வாழட்டும்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 12/12/2024 - 8:24 AM

சார்லி சாப்ளின் என்னும் சிறந்த திரைக்கலைஞரின் அற்புதமான சேவையைத் தொகுத்து வழங்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

சார்லி சாப்ளின் இன்றும் தேவைப்படுகிறார் என்பதை நவீன ஹிட்லரான போர் வெறி கொண்ட நேதன்யாகு கொடுங்கோல் ஆட்சி புரிந்து வருவதிலிருந்து புலனாகின்றது.

சார்லி சாப்ளினைக் கற்கவும் அவர் வழியில் இயங்கவும் இப்பதிவுகள் துணை நிற்கும்.

Reply

Leave a Comment