சாதியெனும் மானுட இழிவு

ரவு

தாமதமாக

வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்

வாகனங்களால்

நிறைக்கப்படாத சாலைகள்

நாய்களால்

நிறைந்திருக்கும் தெருக்கள்

விளக்கை அணைத்துவிட்டு

கடைகளை

மூடிக்கொண்டிருக்கும் வியாபாரிகள்

தூரத்தில்

ஒளிர்ந்து கொண்டிருக்கும்

சில நட்சத்திரங்கள்

மெல்லிய வெளிச்சத்திலும்

பேரழகாய்க் காட்சிதரும்

அந்த நிலா

இதயத்தின் பாரத்தையெல்லாம்

இலேசாக மாற்றிக்கொண்டிருக்கும்

மெல்லிய காற்று என

இந்தப் பிரபஞ்சத்தில்

இயல்பாக இருக்கும் எல்லாமும்

இதயத்தில் மகிழ்ச்சியை

நிறையச் செய்தாலும்

காதலித்ததற்காக

ஒருவன் படுகொலை செய்யப்பட்ட

காட்சிகள்தான்

நிலவிலும் நட்சத்திரங்களிலும்

நீல வானத்திலும்

சாலையிலும் தெருக்களிலும்

மின்னலைப் போலத்

தோன்றித் தோன்றி

மறைந்து கொண்டிருக்கின்றன

எதையும் இரசிக்க முடியவில்லை

எதையும் பார்க்க முடியவில்லை

அந்த வலியை

வெட்டுண்ட நேரத்தின்

அந்த வலியை

இந்த இரவில்

உணர்கிறேன் நான்

நரம்புகள் துண்டாக்கப்பட்டதில்

இரத்தம்

ஆறாய்ப் பாய்ந்து கொண்டிருப்பதை

உணர்கிறேன் நான்

கனவுகள்

கண்முன்னே உடைந்து சிதறுவதை

உணர்கிறேன் நான்

காயங்களிலிருந்து

உடலெங்கும் நிறைந்திருக்கும்

ஒவ்வொரு காயங்களிலிருந்தும்

காதல் வழிந்து கொண்டிருப்பதை

உணர்கிறேன் நான்

இந்த வலியிலிருந்துதான்

இந்த உண்மையைச் சொல்கிறேன்

ஒரு வீரனால்தான்

காதலிக்க முடியும்

ஒரு கோழையால்

கொலைசெய்யத்தான் முடியும்

உங்களுக்குத் தெரியுமா

இதுவரையிலும்

இந்தப் பூமியில்

காதலித்ததற்காக

கோழைகளின் கரங்களால்

வெட்டப்பட்ட

ஒவ்வொரு உடலின் காயங்களும்

இன்னும் ஆறாமல்

என்னுடலெங்கும்

வலித்துக் கொண்டுதானிருக்கிறது

அந்தக் காயங்களோடுதான்

அந்த வலிகளோடுதான்

கவிதை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

என்ன செய்யலாம்

மானுட இழிவான

இந்தச் சாதியின் பெயரால்

ஒரு காதல்

வெட்டிச் சாய்க்கப்படுவதை

விரும்புகிறீர்களா நீங்கள்

மானுட இழிவான

இந்தச் சாதியின் பெயரால்

ஒரு காதல்

குழிதோண்டிப் புதைக்கப்படுவதை

விரும்புகிறீர்களா நீங்கள்

மனிதர்களாகிய நீங்கள்

மானுட இழிவான சாதியை

விரும்ப மாட்டீர்களென்று

நம்புகிறேன் நான்

ஆனபோதிலும்

சாதியை

எதிர்க்கிறீர்கள் என்றால்

இந்நேரம்

சாதி ஒழிந்திருக்க வேண்டுமே

இல்லையென்றால்

இன்னும் சரியாக எதிர்க்கவேண்டும்

என்றுதானே அர்த்தமாகும்

என்ன

இரண்டாயிரம்

வருடங்களுக்கும் முன்னிருந்தே

இருக்கிறதா சாதி

இருக்கட்டுமே

அம்மணங்கள்

ஆடைதரிக்கவில்லையா

காடுகள்

நகரங்களாகவில்லையா

அடிமைகள்

சங்கிலியை அறுத்திடவில்லையா

ஆண்டைகளின்

ஆட்டத்தை அடக்கிவிடவில்லையா

புரட்சிகள்

புதிய நம்பிக்கையைப் பிரசவிக்கவில்லையா

தேவைகளும் உரிமைகளும்

விளங்கிடவில்லையா

அறிவு

இல்லையென்று சொல்வீர்களா

சொல்லுங்கள்

சாதியை ஏன்

ஒழிக்க முடியவில்லை

முதலாளித்துவ சமூகத்தில்

சாதியை ஒழித்துவிட முடியுமா

பாரளுமன்ற ஜனநாயகத்தில்

சாதியை ஒழித்திட முடியுமா

சாதியைப் பாதுகாக்கும்

முதலாளித்துவத்தை ஒழிக்காமல்

சாதியைப் பாதுகாக்கும்

முதலாளித்துவ அதிகாரத்தை ஒழிக்காமல்

சாதியை ஒழித்துவிட முடியுமா

புரட்சியை விரும்பாத

உங்கள் சோம்பேறித்தனத்திற்கு

காரணங்களை

தேடிக்கொண்டு அலையாதீர்கள்

புரட்சியில் வென்ற போல்ஷ்விக்குகள்

நிலங்கள் பொதுவுடமையாக்கப்படும்

என்றார்கள்

நிலவுடமையாளர்கள்

வரிசையில் வந்து

கொடுத்துவிட்டுச் சென்றார்களா என்ன

கொடுத்தவர்களிடம் வாங்கிக் கொண்டார்கள்

கொடுக்க மறுத்தவர்களிடம்

எடுத்துக் கொண்டார்கள்

உங்களுக்குப் புரியும்

நம்புங்கள்

உங்கள் நம்பிக்கைதான்

இந்தப் பூமியில்

ஆணவக் கொலைகளை

இல்லாமல் செய்யும்

நம்புங்கள்

உங்கள் நம்பிக்கைதான்

இந்தப் பூமியில்

மாபெரும் புரட்சியை

நிகழ்த்திக் காட்டும்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment