புல்லட் ஓட்டியதற்காக
ஒருவன் வெட்டப்படுவானென்றால்
கபடி போட்டியில்
வெற்றிபெற்றதற்காக
ஒருவன் வெட்டப்படுவானென்றால்
நல்ல ஆடை அணிந்ததற்காக
ஒருவன் வெட்டப்படுவானென்றால்
நல்ல கல்வி கற்றதற்காக
ஒருவன் வெட்டப்படுவானென்றால்
நாகரீகத்தை நோக்கி
நடந்து கொண்டிருப்பதற்காக
ஒருவன் வெட்டப்படுவானென்றால்
சமகாலத்தின் மனநிலையை
சமகாலத்தின் சாதிவெறியை
சமகாலத்தின் குரூரத்தை
மானுட அவலத்தை
சமகாலத்தின் நோயை
கொஞ்சமும் தாமதிக்காமல்
சரிசெய்ய வேண்டிய
தேவையிருக்கிறது என்பது
எத்தனை பேருக்கு
விளங்குகிறது என்பதே
சந்தேகமாக இருக்கிறது
வெறுமனே
வேடிக்கை பார்த்துக்கொண்டு
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
வாழ்க்கை பழகிவிட்டதா என்ன
இருக்கட்டும்
எங்கும் நிறைந்திருக்கும்
கள்ளமெளனத்தைப் பற்றி
எனக்கெந்த கவலையுமில்லை
மனிதர்களை நோக்கி
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
பேசிக்கொண்டே இருப்பேன்
சிகிச்சையளிக்காமல்
சிகிச்சையளித்துக்
குணப்படுத்த முயற்சிக்காமல்
நோயை
மூடி மறைக்கவே
முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்
என்ற உண்மை
எப்போது புரிகிறதோ
அப்போதுதான் விடுதலையென்பதை
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
சொல்லிக்கொண்டே இருப்பேன்
பாருங்கள்
சக மனிதனை
சக மனிதன்தான் வெட்டுகிறான்
சக மனிதனின்
இரத்தத்தை
சக மனிதன்தான் குடிக்கிறான்
சகமனிதனின்
உயிர்வாதையை
சகமனிதன்தான்
இரசித்துக் கொண்டிருக்கிறான்
இப்படியாக
சக மனிதனுக்கு எதிராக
சக மனிதனை நிறுத்துகிற
இந்தச் சமூகமைப்பை
முற்றும் முழுவதுமாக
வேரோடும் வேரடி மண்ணோடும்
வெட்டிச்சாய்க்க முயற்சிக்காமல்
இதற்கெல்லாம் முடிவில்லையென்பதைப
இப்போதாவது
புரிந்து கொள்ளுங்கள்
உள்ளும் புறமும்
ஊடுருவிப் பார்த்ததிலிருந்து
நான் புரிந்து கொண்டது
இதுதான் தோழர்களே
தேர்தல் அரசியலுக்குள்
இதற்கான தீர்வில்லை
தீர்வேயில்லை
பாரளுமன்ற ஜனநாயகத்திற்குள்
இதற்கான தீர்வில்லை
தீர்வேயில்லை
அரசியல்வாதிகளின் கரங்களில்
இதற்கான தீர்வில்லை
தீர்வேயில்லை
இந்திய சமூகமைப்பை
இரண்டாய்ப் பிளக்காமல்
இதற்கான தீர்வில்லை
தீர்வேயில்லை
அப்படியென்றால்
ஆம் தோழர்களே
அதுதான்
அதுதான்
அதுவேதான் தீர்வு!
ஜோசப் ராஜா
1 comment
சமகால நிஜ நிகழ்வுகளின் அவலங்களைத் தமது நேர்த்தியான கவிதை மூலம் உணர்த்தியுள்ள கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையைப் படியுங்கள். அநீதிக்கெதிராக இயங்குங்கள்.