இன்றைய குழந்தைகள்
பெற்றோர்களின்
பந்தயப் பொருட்களாக
மாற்றப் பட்டிருக்கிறார்கள்
என்பதை
இல்லையென்று சொல்லமுடியாது
வெற்றி பெறுவது மட்டுமே
வாழ்க்கையில் முக்கியமானது
என்று போதிக்கப்பட்டு
வெற்றியை நோக்கி
வேகவேகமாக
ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை
வேதனையோடு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தங்களின் தோல்விகளையும்
தங்களின் நிராசைகளையும்
குழந்தைகளைக் கொண்டு
நிறைவேற்றத் துடிக்கும்
பைத்தியக்காரர்களை நினைத்தால்
ஆத்திரம் வரத்தான் செய்கிறது
நீங்கள் அறிவீர்களா?
படைப்பாற்றலின் உச்சம்
குழந்தைப் பருவம்தான்
கிட்டத்தட்ட
ஒவ்வொரு குழந்தையிடமிருந்தும்
பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
படைப்பாற்றல்
நான்கு சுவர்களுக்குள்
நான்கு சுவர்களுக்குள் மட்டும்
என்னவாகும் வாழ்க்கை
பிஞ்சுப் பாதங்கள் படாமல்
ஏங்கிக் கிடக்கின்றன
மைதானங்கள்
கதைகேட்க
வாய்ப்பில்லாத குழந்தைகள்
கண்டதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருக்கின்றன
சுற்றி நடக்கும்
எதையும் பார்க்காமல்
எந்தக் கேள்வியும் கேட்காமல்
அடிமையைப் போல
அழிந்துவிட்டுப் போங்கள்
ஆனால்
குழந்தைகளை விட்டுவிடுங்கள்
அவர்கள்
சுதந்திரமாக வாழட்டும்
அவர்கள்
சுதந்திரமாக சிந்திக்கட்டும்
குழந்தைகள் வாழ்க
குழந்தைகள் வாழ்க!
ஜோசப் ராஜா
குழந்தைகள் வாழ்க
previous post
