”இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக” தொகுப்பிலிருந்து . . .
எத்தனை வழிபாடுகளில்
எத்தனை வாழ்த்துப்பாடல்களில்
குழந்தைகளும் தெய்வங்களும்
ஒன்று என்று
ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்
தெய்வங்களல்லவா கற்பழிக்கப்படுகின்றன
தெய்வங்களல்லவா கொலைசெய்யப்படுகின்றன
தெய்வங்களல்லவா எரிக்கப்படுகின்றன
குழந்தைகளைப் பற்றிய பெருமிதங்களை
ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோமே
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளையும்
குதூகலமாய் ரசித்துக் கொண்டிருக்கிறோமே
குழந்தைகளின் பொக்கைவாய்ச் சிரிப்பை
பார்த்துப்பார்த்து மகிழ்கிறோமே
குழந்தைகளின் மழலைச் சொற்களை
தேனைப் போலப் பருகுகிறோமே
ஆனபோதிலும் ஆனபோதிலும்
நாம்தான் நம்மில் ஒருவன் தான்
குழந்தைகளைச் சீரழிக்கவும் செய்கிறோம்
ஒருவனும் ஒதுங்கிக்கொள்ள முடியாது
ஒருபோதும் ஒளிந்துகொள்ள முடியாது
இது நாகரீகமா
இதுதான் கலாச்சாரமா
ஊழலைப் போல
பாலியல் பலாத்காரங்களும்
இந்தச் சமூகத்தின்
அன்றாட நடவடிக்கைகளாய்
குற்றவுணர்வில்லாத செயல்களாய்
நடந்து கொண்டிருக்கின்றன
தீண்டாமையைப் போல
பாலியல் பலாத்காரங்களும்
இந்தச் சமூகத்தின்
மாற்றமுடியாத ஒன்றாய்
மாற்ற விருப்பமில்லாத ஒன்றாய்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன
புத்தகச் சுமையோடு கூடவே
பேரச்சத்தையும் சுமந்தபடி
கூனிக்குறுகிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளுக்குச் சொல்ல
என்ன இருக்கிறது நம்மிடம்
நாம்தான்
வார்த்தைகளைத் தொலைத்தே
நெடுங்காலம் ஆகிவிட்டதே
குழந்தைகள்
அச்சங் கொண்டலைகிறார்கள்
குழந்தைகளின் மனநிலை
சிதைக்கப்பட்டிருக்கிறது
என் மகளாயிருந்தால் என்ன
உங்கள் மகளாயிருந்தால் என்ன
குழந்தைகள் குழந்தைகளல்லவா
குழந்தைகள்
மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்களல்லவா
குழந்தைகள்
வாழ்க்கையின் நம்பிக்கையல்லவா
குழந்தைகளும் தெய்வங்களும்
ஒன்று என்றால்
என்ன செய்யப் போகிறோம்
தெய்வங்களை!
ஜோசப் ராஜா
1 comment
இந்தியச் சுதந்திரம் பவள விழாவை முடித்தாயிற்று. இந்தியக் குடியரசின் பவளவிழாவும் நெருங்குகிறது.
ஆயினும் பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே அவமானம்.
பெண்களும் குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது மிகுந்த வேதனையைத் தருகிறது.
அதன் வலிகளை வழக்கம்போல் உணர்வுப்பூர்வமாய் வடித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
வாசியுங்கள்.
பரப்புங்கள்.