குழந்தைகளின் மீதான யுத்தம்

மீண்டும் மீண்டும்

முளைத்துக் கொண்டே இருக்கின்றன

கல்லறைகள்

மீண்டும் மீண்டும்

கேட்டுக் கொண்டே இருக்கின்றன

மரண ஓலங்கள்

ஒன்று நூறு ஆயிரமென

கொல்லப்பட்ட குழந்தைகளை

எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

மரண வியாபாரிகள்

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

அவர்களுக்குப் பசி அடங்கவில்லை

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

அவர்களுக்கு வெறி அடங்கவில்லை

 

இந்த மனிதகுலத்திற்குப்

போர்கள் புதிதல்ல

உண்மையைச் சொன்னால்

ஒவ்வொரு போர்களிலும்

படுகொலை செய்யப்பட்ட

பல்லாயிரக்கணக்கான மனிதர்களின்

இரத்தவாடையை முகர்ந்துகொண்டேதான்

நகர்ந்து கொண்டிருக்கிறது மனிதகுலம்

 

ஆனபோதிலும்

வரலாற்றின் கரும்புள்ளியாக

குழந்தைகளின் மீது தொடுக்கப்பட்ட

மன்னிக்க முடியாத இந்த யுத்தத்தை

குழந்தைகளைத் தேடித்தேடி வேட்டையாடும்

சகிக்க முடியாத இந்த யுத்தத்தை

அசைக்கமுடியாத பொறுமையோடு

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

இந்த மனிதகுலம்

 

யாரும் பார்க்காமல் இல்லை

இந்த இனப்படுகொலை

அப்படியொன்றும்

இரகசியமாகவும் நடக்கவில்லை

உலகத்தின் ஒவ்வொரு கண்களும்

பார்த்துக் கொண்டிருக்கத்தான்

உலகத்தின் ஒவ்வொரு காதுகளும்

கேட்டுக் கொண்டிருக்கத்தான்

வீடுகளிலிருந்து அகதி முகாம்களுக்கும்

அகதிமுகாம்களிலிருந்து மருத்துவமனைகளுக்கும்

மருத்துவமனைகளிலிருந்து பள்ளிக்கூடங்களுக்கும்

அடைக்கலம் தேடி ஓடிய குழந்தைகளை

தேடித்தேடி ஓடிஓடி

கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்

 

இத்தனைக்கும்

அந்தக் குழந்தைகளின் கைகளில்

பொம்மைத் துப்பாக்கி கூட இல்லை

அந்தக் குழந்தைகள்

எவன் ஒருவனையும்

எதிர்த்து நிற்கக்கூட இல்லை

குழந்தைகளின் கைகளில்

உடைந்த மரக்கிளையோ

சிறு கல்லோ எதுவுமேயில்லை

ஆனாலும்

குழந்தைகளின் உடல்களை

துளைக்கின்றன துப்பாக்கிக் குண்டுகள்

குழந்தைகளின் உடல்களை

கட்டிட இடிபாடுகளுக்குள்

உயிரோடு புதைக்கின்றன

ஏவுகணைகளிலிருந்து எறியப்பட்ட குண்டுகள்

 

பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மட்டுமல்ல

அந்த தேசத்தின் எதிர்காலம்

படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது

பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மட்டுமல்ல

அந்த தேசத்தின் கனவுகள்

படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது

பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மட்டுமல்ல

அந்த தேசத்தின் நம்பிக்கைகள்

படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது

 

ஆனபோதிலும்

குழந்தைகளின் மீது

தொடுக்கப்பட்டிருக்கும் இந்த யுத்தத்தில்

ஒலிவ மரமொன்றில் ஒளிந்தபடி

கட்டிட இடிபாடுகளுக்குள் மறைந்தபடி

தப்பிப் பிழைத்த பாலஸ்தீனக் குழந்தைகள்

அழிந்து கொண்டிருக்கும் தங்களின் தேசத்தை

கண்களாலும் இதயத்தாலும் உற்றுப்பார்த்துக்கொண்டே

அகதிகளாகப் புறப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகள்

நிச்சயமாக நாளை கட்டியெழுப்பத்தான் போகிறார்கள்

அவர்களுடைய தேசத்தை

அவர்களுக்கான தேசமாக

அதுவரையிலும்

அவர்களோடு நானும்

நடந்து கொண்டிருப்பேன்

சூரியனை நோக்கி!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 16/11/2023 - 1:21 PM

குழந்தைகள்
மீதான யுத்தம் கொடூரமானது. சாதாரண மனிதர்களால் இத்தகைய யுத்தத்தை நிகழ்த்த முடியாது. இன அழிப்பு வெறியர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.
ஏதுமறியா மழலைகள் என்ன பாவம் செய்தார்கள்?

“குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்றார் வள்ளுவர். யுத்த வெறியர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

குழந்தைகளை அழிப்பது எதிர்காலத் தலைமுறையை அழிப்பது. அத்தகைய கொடுஞ்செயல் குறித்துத் துன்பப்பட்டு துயரப் பட்டு கவிஞர் ஜோசப் ராஜா கவிதை வடித்துள்ளார்.

படியுங்கள்
பரப்புங்கள்.

Reply

Leave a Comment