குயிலின் மரணம்

குயிலின் குரலைக்

காலநேரம் பாராமல்

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கே

தெரியும்

குயிலின் மரணம்

எவ்வளவு கொடுமையானதென்று

 

குயிலின் குரலைக்

கடவுளின் குரலாக

நம்பிக் கொண்டிருந்தவனுக்கே

தெரியும்

குயிலின் மரணம்

ஏற்றுக் கொள்ளமுடியாததென்று

 

குயிலின் மரணம்

ஒரு குயிலின் மரணம்

ஒரே ஒரு குயிலின் மரணம்

கோடிக்கணக்கான கண்களைக்

குளமாக்குவதையும்

கோடிக்கணக்கான இதயங்களை

இரணமாக்குவதையும்

எபடித் தாங்கிக் கொள்வது

 

னி பாடமாட்டாயா சகோதரி

இனி பாடமாட்டாயா சகோதரி

இனி பாடவேமாட்டாயா சகோதரி

எங்கோ தொலைதூரத்தில்

வனாந்திரத்திற்குள்ளிருந்து புறப்பட்டு

எனக்காகப் பறந்துவந்த

உன்னுடைய குரலை

இழந்திருக்கிறேன்

என்பதுதான் உண்மையல்லவா

இதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்டு

காதுகளில் இனிமையாய் நுழைந்த

எந்தப் பிசிறும் இல்லாத

அந்தக் குரலை இழந்திருக்கிறேன்

என்பதுதான் உண்மையல்லவா

 

த்தனையோ காயங்களுக்கு

மருந்திட்ட குரல்

எத்தனையோ கண்ணீரைத்

துடைத்திட்ட குரல்

எத்தனையோ காதல்களை

மலரச்செய்த குரல்

தன்னுடைய சொந்தக்காரியை

இழந்திருக்கிறது

 

னபோதிலும்

இரவு முழுவதும்

ஒலித்துக் கொண்டிருந்த

உன்னுடைய பாடலை

நிலவோடும் நட்சத்திரங்களோடும்

கேட்டுக் கொண்டிருந்தேன்

ஓய்வுகொள் சகோதரியே

உன்னுடைய பாடலுக்கும்

இந்தக் கவிதைக்கும்

மரணமிருக்கிறதா என்ன!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment