குடிநீரில் மலம்கலந்த மானுடப் பேரவலம்

சில வார்த்தைகளைக் கேட்பதற்கு

உங்கள் காதுகள் கூசலாம்

ஆனால்

நீண்டகாலங்களாக அவர்கள்

நிறையக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சில காட்சிகளைப் பார்க்கமுடியாமல்

உங்கள் கண்கள் திரும்பலாம்

ஆனால்

நீண்டகாலங்களாக அவர்கள்

நிறையப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

சில துயரங்களின் ஆழம்

நீங்கள் அறியாததாக இருக்கலாம்

ஆனால்

நீண்டகாலங்களாக அவர்கள்

நிறைய அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்

சில இடங்களில் வாழ்வதைப்பற்றி

நீங்கள் நினைத்துக்கூடப்

பார்க்காமல் இருக்கலாம்

ஆனால்

நீண்டகாலங்களாக அவர்கள்

அங்கேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

சில அவமானங்களை

உங்கள் வாழ்நாளில்

அறிந்திருக்காமல் கூட இருக்கலாம்

ஆனால்

அவர்களின் வாழ்க்கையோ

அவமானங்களால் மட்டுமே நிறைந்திருக்கிறது

உங்களைப் போன்ற

மனிதர்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

உங்கள் மொழிபேசுகிறவர்கள்தான்

உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்

உங்கள் நிலத்தில் வாழ்கிறவர்கள்தான்

ஒரே ஒரு வித்தியாசமென்றால்

உங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்

உங்களால் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

சாதி அடுக்குகளில் கீழிருப்பவர்கள்

சமூகப் பொருளாதாரத்தில் கீழிருப்பவர்கள்

 

சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் குடிக்கும்

சுத்தமானவர்களே!

பாதுகாக்கப்பட்ட தண்ணீர் குடிக்கும்

பரிசுத்தவான்களே!

மலம் கலக்கப்பட்ட

தண்ணீர் குடிப்பதைப்பற்றி

என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

மலம் கலக்கப்பட்ட தண்ணீரைக்

குடிக்க நேர்ந்தவர்களைப் பற்றி

என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

இந்த வார்த்தைகள்

உங்களுக்கு அசெளகரியத்தை உண்டாக்கலாம்

இந்த உண்மைகள்

உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்

ஆனால்

உங்களைச்சுற்றி

இந்தப் பாவச்செயல்கள்தான்

இந்தப் பெருங்குற்றங்கள்தான்

இந்த மனிதத்தன்மையற்ற செயல்கள்தான்

தினந்தோறும் தினந்தோறும்

ஒவ்வொரு திசையிலும் நடந்து கொண்டிருக்கின்றன

 

இன்னும் எத்தனை காலம்

இந்த மானுட இழிவுகளை

வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?

இன்னும் எத்தனை காலம்

இந்த மானுட அசிங்கத்தை

அனுமதித்துக் கொண்டிருப்பீர்கள்?

இந்த தேசம்

எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை

எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?

ஒருபக்கம்

பணக்காரர்கள்

பெரும்பணக்காரர்களாக

மாறிக்கொண்டிருக்கிறார்கள்

இன்னொருபக்கம்

ஏழைகள்

பரம ஏழைகளாக

மாறிக்கொண்டிருக்கிறார்கள்

இந்த உண்மை

உங்களை ஒன்றுமே செய்யவில்லையா?

 

மனிதர்கள் குடிக்கும் நீரில்

மலத்தைக் கலப்பது என்பது

அவ்வளவு சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியதா?

மனிதர்கள் குடிக்கும் நீரில்

மலத்தைக் கலப்பது என்பது

கண்டும் காணாமல் இருந்துவிடக்கூடியதா?

அந்த எளிய மக்களின் இடத்தில்

அந்தப் புறக்கணிக்கப்பட்ட மக்களின் இடத்தில்

அந்தக் கைவிடப்பட்ட மக்களின் இடத்தில்

ஒருநாளாவாது

உங்களைப் பொருத்திப் பாருங்கள்

அவர்களின் அன்றாட வலிகளை

உங்களின் வலிகளாக

ஒருகணமாவது உணர்ந்து பாருங்கள்

பண்பாட்டிற்கான

எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தீர்களே!

இந்த மானுடப் பண்பாட்டின்

மன்னிக்க முடியாத கொடூரத்தை

ஏனென்று கேட்க மாட்டீர்களா?

அரசியலுக்கான

எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தீர்களே

அரசியலிலிருந்து மட்டுமல்ல

வாழ்க்கையிலிருந்தே அன்னியப்படுத்தப்பட்டிருக்கும்

இந்த எளிய மக்களுக்காக

உயர்த்த மாட்டீர்களா கைகளை?

குழந்தைகளும் குடிக்கும் குடிநீரில்

வயதானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும்

குடிக்கும் குடிநீரில்

மலம் கலந்த முட்டாளை விடவும்

உங்கள் மெளனம்

மன்னிக்க முடியாததாய் இருக்கிறது

உங்களுடைய பாராமுகம்

பரிகசிக்கக் கூடியதாக இருக்கிறது

 

இனி தாகமெடுக்கும்

ஒவ்வொரு முறையும்

இந்தக் கொடுஞ்செயலின் நினைவுகள்

மேலெழுந்து வரும்போது என்ன செய்வார்கள்

என்ற எண்ணங்கள்

என்னை உள்ளும் புறமும்

ஓயாமல் தாக்கிக் கொண்டிருக்கின்றன

ஒரு மனிதனாக இருப்பதின் அவமானம்

ஒரு கவிஞனாக இருப்பதின் வேதனை

தூங்க விடாமல் செய்கிறது

துரத்திக் கொண்டலைகிறது

 

கள்ள மெளனத்தை உதறித்தள்ளி

உரக்கப் பேசுங்கள்

போலிப் பெருமிதங்களைப் புறந்தள்ளி

உண்மையைப் பேசுங்கள்

இறையூர்

இந்தியாவில்தான் இருக்கிறது என்பதையும்

இந்தியாவில்

ஏராளமான இறையூர் இருக்கிறதென்பதையும்

ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்

ஒருபோதும் மறைக்கவிடாதீர்கள்

சாதி உணர்வு என்பது

மனித உணர்வே இல்லை என்பதற்கு

இறையூரைப் போல ஓராயிரம் உதாரணங்கள்

நிறைந்திருக்கும் போது

இன்னும் எத்தனை காலம்

அந்தச் சாக்கடையைப்

பாய்ச்சிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஒத்துக் கொள்ளுங்கள்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்

மூளையின் ஏதோ ஒரு ஓரத்தில்

ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது சாதியுணர்வு

அதனால்தான்

அதனால்தான்

இன்னும் நீடிக்கிறது இந்தியாவில் சாதிகள்

இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு எதிராகப்

பெரும்பணக்காரர்களா பேசப்போகிறார்கள்?

அரசியல்வாதிகளா பேசப்போகிறார்கள்?

நீங்கள்தானே பேசவேண்டும்

பேசுங்கள் தோழர்களே

மனித உரிமைகளைப்பற்றி

வாய்கிழியப் பேசும் போதெல்லாம்

வசதியாய் இவர்களை மறந்துவிடுவது

சகிக்கமுடியாததாக இருக்கிறது

மனித உரிமைகளுக்காக உலகெங்கும்

மாபெரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்

மன்னிக்கவே முடியாத இதுபோன்ற மானுட இழிவுக்கு எதிராக

எதுவுமே நடக்காதது எதேச்சையானது அல்ல

எதுவுமே நடக்காதது தற்செயலானது அல்ல

நிறைந்த வலியோடு நேரடியாகக் கேட்கிறேன்

தோழர்களே

முதலாளித்துவம்

சாதியை ஒழித்துவிடுமென்று நம்புகிறீர்களா?

இல்லையென்றால்

முதலாளித்துவத்தை ஒழிப்பதை விட்டுவிட்டு

என்ன செய்யப் போகிறீர்கள்?

Related Articles

1 comment

Ram 20/01/2023 - 11:25 AM

மனக் கனக்கச் செய்யும் வரிகள் நிறைந்த கவிதை. கவிஞரின் சொன்னதுபோல மனித உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் நாம் எல்லோருமே இந்த இழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அசிங்கமாக இருக்கிறது. சாதிய உணர்வு மனித உணர்வே அல்ல!

Reply

Leave a Comment