கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தந்தையின் நினைவுகளும்

கிறிஸ்துமஸ்

நெருங்கிக் கொண்டிருப்பதால்

மகள்கள்

நட்சத்திரம் கட்ட

ஆசைப்பட்டார்கள்

தூரத்திலிருக்கும்

நெருங்கமுடியாத

அந்த நட்சத்திரத்தை

நம்முடைய வீட்டில்

கைக்கெட்டும் தொலைவில்

கட்டிக் கொள்வதும்

கண்டு இரசிப்பதும்

அழகானதல்லவா!

மகள்களுக்குப் பிடித்த

சிகப்பு நட்சத்திரம்

ஒளிரத் தொடங்கியதும்

அந்த ஒளிச்சிதறல்களின்

பக்கத்தில் இருந்து

புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்

இளையவளோ

சிறிதுநேரம்

நட்சத்திரத்தின் பக்கத்திலேயே

உட்கார்ந்திருந்தாள்

இரண்டு நட்சத்திரங்களையும்

இமைக்காமல்

பார்த்துக் கொண்டிருந்தாள்

மனைவி

மெல்லிய காற்றில்

அசைந்து கொண்டிருக்கிறது

நட்சத்திரம்

நட்சத்திரத்தின் ஒளி

நடனமாடிக் கொண்டிருக்கிறது

இடமிருந்து வலமாக

வலமிருந்து இடமாக

ஒளியின் நடனத்தைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

நட்சத்திரத்தை

வீட்டிற்குக் கொண்டுவந்த

மகிழ்ச்சியில்

நிம்மதியாகத்

தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்

மனைவியும் குழந்தைகளும்

நானோ நட்சத்திரத்தைப்

பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்

நட்சத்திரத்தின்

பக்கத்திலேயே இருக்கிறேன்

நட்சத்திரத்தோடு

பேசிக் கொண்டேயிருக்கிறேன்

இந்த இரவு

போதுமா என்று தெரியவில்லை

நட்சத்திரத்திற்கும் எனக்கும்

அவ்வளவு இருக்கிறது பேசுவதற்கு

ஆடைகளைத் தாண்டி

உடலைத் தொட்டுக் கொண்டிருக்கும்

இந்தக் குளிர்

இங்கிருந்து என்னை

தொலைதூரம் அழைத்துச் செல்கிறது

உங்களுக்குத் தெரியுமா

நட்சத்திரமென்றால்

உடனே ஞாபகம் வருவது

என் தந்தை தான்

நட்சத்திரத்தில்

எப்போதும் நான் பார்ப்பது

அவர் முகத்தைத் தான்

நான் சிறுவனாக இருக்கும்போது

முதன்முதலில்

ஒளியூட்டப்பட்ட நட்சத்திரத்தை

என் கையில் கொடுத்துவிட்டு

என்னையே பார்த்துக் கொண்டிருந்த

என் தந்தையின் முகம்

எல்லா நட்சத்திரங்களிலும்

பதிந்திருக்கிறதைப் பார்க்கிறேன்

சின்னச்சின்ன வட்டங்களாகத்

துளையிடப்பட்ட

அந்த நட்சத்திரத்தின்

ஒளிச் சிதறல்கள்

நாற்பது வயதிலும்

நிறம் மாறாமல் எனக்குள்

நிழலாடிக் கொண்டிருக்கின்றன

உங்கள் ஆலயத்திற்குள்

எனக்கு எந்த வேலையுமில்லை

என்று சொன்னபோது

வற்புறுத்தவில்லை அவர்

என் நம்பிக்கையை

உனக்குள் திணிக்கமாட்டேன்

என்று ஒதுங்கிக்கொண்டார்

ஒரு சிறுவனின் முடிவுகளுக்கு

முடிந்தவரையிலும் மதிப்பளித்தார்

என் காதலைச் சொன்னபோதும்

எதிர்ப்பின் எந்த அறிகுறியுமில்லாமல்

உன்னுடைய மகிழ்ச்சி

எனக்குப் போதும் என்றார்

அவரைப்பற்றியும்

அவரைப்போன்ற

உழைப்பாளிகளைப் பற்றியும்

நான் எழுதிய கவிதைகளை

எழுத்துக்கூட்டிப் படித்து மகிழ்ந்தார்

என்னை நம்பினார்

எல்லாவற்றிலும் முழுமையாக நம்பினார்

எல்லாச் சுதந்திரத்தையும்

எனக்குக் கொடுத்த

அந்த நம்பிக்கைதான்

முழுமையான அந்த நம்பிக்கைதான்

ஒருவகையில் என்னை

எல்லா வகையிலும் ஒழுங்குபடுத்தியது

என்பதை

உணர்ந்து கொள்கிறேன் இப்போது

மீண்டும் வீசுகிறது காற்று

மீண்டும் ஆடுகிறது ஒளி

இந்த நேரத்தில்

ஒளியைவிட உற்சாகம் தரக்கூடிய

எதுவும் இல்லையென்றுதான்

நம்புகிறேன் நான்

நட்சத்திரத்தை அறிமுகப்படுத்தியவர்

நட்சத்திரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்

இந்த அன்பின் ஒளியை

இந்த மகிழ்ச்சியின் ஒளியை

இந்தச் சுதந்திரத்தின் ஒளியை

ஓ தந்தையே

காலமெல்லாம் பற்றிக்கொள்வேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

S.Lokesh 20/12/2024 - 11:12 AM

எனது மகன் அலமாரியில் இருக்கும் நட்சத்திரத்தைக் கட்டச் சொல்லி அடம் பிடித்துக் கொண்டுள்ளான். நாளை கட்டிக் கொடுத்து விடுகிறேன்…நல்ல கவிதை…

Reply

Leave a Comment