யுத்தத்தின் காரணமாக
சொந்த நிலத்திலிருந்து
துரத்தப்பட்டவர்கள்
யுத்தத்தின் காரணமாக
சொந்த வீட்டிலிருந்து
வெளியேற்றப்பட்டவர்கள்
எங்கெங்கோ
அலைந்து திரிந்து
ஏவுகணைகளுக்குத் தப்பித்து
அகதி முகாம்களின்
கூடாரங்களுக்குள்
பசியோடும் தாகத்தோடும்
உயிர்பிடித்துக் காத்திருந்த
காஸாவின் மக்கள்
யுத்தம் நிறுத்தப்பட்ட
செய்தி கேட்டவுடன்
எஞ்சியிருக்கும்
கொஞ்சம் பொருட்களோடு
வயதானவர்களை
அழைத்துக் கொண்டு
குழந்தைகளை
அழைத்துக் கொண்டு
அந்த இடிபாடுகளுக்குள்
அந்தக் கட்டிடக் குவியல்களுக்குள்
நரகமாக்கப்பட்டிருக்கும்
அந்த நகரத்திற்குள்
நடுங்கும் இதயத்தோடு
நடந்து வருகிறார்கள்
நம்முடைய காஸாவா
என்ற சந்தேகம்
எழத்தான் செய்கிறது
அருங்காட்சியகத்தில்
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்
பதப்படுத்தப்பட்ட
எலும்புக் கூடுகளைப்போல
நின்று கொண்டிருக்கும்
வீடுகளின் எச்சங்களை
உறைந்த கண்களோடும்
உடைந்த இதயத்தோடும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
நீண்டகால உழைப்பு
நீண்டகால சேமிப்பு
நீண்டகால விருப்பம்
நீண்டகாலக் கனவு
சுக்குநூறாகச் சிதறிக்கிடப்பது
எத்தனை துயரமானதுதென்பது
மனிதனாக இருக்கும் யாவரும்
உணர்ந்துகொள்ளக் கூடியதுதான்
உயிரோடு இருப்பவர்கள்
ஒருவரையொருவர் உவயோடு
கட்டியணைத்துக் கொள்கிறார்கள்
காணாமல் போனவர்களின்
குரல் கேட்கிறதா என்று
இத்தனை மாதங்கள் கழித்து
இடிபாடுகளுக்குள்
காதுகளை நுழைத்துக்
சோதித்துப் பார்க்கிறார்கள்
நம்பிக்கையை
என்ன செய்ய முடியும்
வீடுகளின் மீதும்
தெருக்களின் ஓரங்களிலும்
இன்னும் வெடிக்காத குண்டுகள்
மெளனமாகக் கிடப்பதை
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பாலஸ்தீனமெங்கும் சிதறிக்கிடக்கும்
வெடிக்காத குண்டுகளை
முழுமையாக அப்புறப்படுத்த
பலவருடங்கள் தேவைப்படுமென்று
ஐக்கிய நாடுகள் சபையின்
அமைதியின் தூதுவர்கள்
அறிவித்திருக்கிறார்கள்
யாருக்கும் தெரியவில்லை
காஸாவைக் கட்டமைக்க
காஸாவாசிகளின்
வாழ்க்கையை மீட்டெடுக்க
எத்தனை வருடங்கள்
தேவைப்படும் என்று
யாருக்கும் தெரியவில்லை
ஆக்குவதைப் போலல்ல
அழிப்பது சுலபமானது
அழித்துவிட்டார்கள்
ஆனாலும் பாருங்கள்
எத்தனையோ பேரழிவுகளிலிருந்து
எழுந்துவந்த பாலஸ்தீனம்
இப்போதும் எழுந்துவரும்
தங்களுடைய பிஞ்சுக் கைகளால்
பாலஸ்தீனக் குழந்தைகள்
இடிபாடுகளைச்
சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்!
ஜோசப் ராஜா