காஸாவில்
வீடுகள் இல்லை
காஸாவில்
பள்ளிக்கூடங்கள் இல்லை
காஸாவில்
தெருக்கள் இல்லை
காஸாவில்
பறவைகள் இல்லை
காஸாவில்
அமைதி இல்லை
காஸாவில்
நிம்மதி இல்லை
காஸாவில்
உணவு இல்லை
காஸாவில்
தண்ணீர் இல்லை
ஆனால்
யுத்தம் தொடங்கியதிலிருந்தே
காஸாவில்
வெள்ளைக்
காடாத்துணிகளுக்கு மட்டும்
பஞ்சமேயில்லை
கொல்லப்பட்ட குழந்தையை
வெள்ளைத்துணியில் சுற்றி
நெஞ்சோடு ஏந்திக்கொண்டு
அடக்கம் செய்யும்
இடத்தை நோக்கி
நடந்து கொண்டிருக்கிறான்
காஸாவின் தகப்பனொருவன்
மருத்துவமனையில்
உயிரிழந்த குழந்தையை
வெள்ளைத் துணியில் சுற்றி
மடியில் ஏந்தியபடி
அல்லாவிற்கு கேட்கும்படி
அழுதுகொண்டிருக்கிறாள்
காஸாவின் தாயொருவள்
அகதி முகாம்களில்
மருத்துவமனைகளில்
உணவு வழங்குமிடத்தில்
கொத்துக் கொத்தாகக்
கொல்லப்பட்ட குழந்தைகள்
வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு
வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்
உறவினர்களும்
அக்கம் பக்கத்தினரும்
இன்னும் உயிரோடிருப்பவர்களும்
அந்தக் குழந்தைகளுக்காக
கடைசியாக ஒருமுறை
கண்ணீரோடு வேண்டிக்கொள்கிறார்கள்
கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து
கண்டெடுக்கப்பட்ட
குழந்தையின் உடல்
அவசர அவசரமாக
வெள்ளைத் துணியில்
சுற்றப்படுகிறது
இப்படியாக
காஸாவின் குழந்தைகள்
கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது
இதயத்தின்
மூலை முடுக்குகளிளெல்லாம்
வெடிகுண்டை வெடிக்கச்செய்து
இரத்தத்தை சூடாக்குகிறது
வெள்ளைத் துணிகளை
வெள்ளை நிறத்தை
பார்க்கும் போதெல்லாம்
வெள்ளைத் துணியில்
சுற்றப்பட்டு
ஒவ்வொருநாளும்
புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
காஸாவின் குழந்தைகள்தான்
கண்களுக்கு முன்னால்
நிறைந்திருக்கிறார்கள்
காஸாவில்
இன்னும் எவ்வளவு
காடாத்துணிகள் இருக்குமோ
என்றெண்ணி அச்சப்படுகிறேன்
அந்தக் குழந்தைகளின் அளவிற்கு
அந்தக் காடாத்துணிகள்
வெட்டப்படுமோ
என்றெண்ணிக் கோபமடைகிறேன்
இதயத்தின் ஒருபக்கம்
இந்தத் துயரமும்
இதயத்தின் இன்னொரு பக்கம்
அடங்காத கோபமும்
நிறைந்தபடி
அங்குமிங்கும்
அலைந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
வெண்ணிறக் காடத்துணிகள்
கண்களுக்கு முன்னால்
அசைந்து அசைந்து
என்னை
அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது!
ஜோசப் ராஜா
