காஸாவின் விடியலுக்காகக் காத்திருக்கிறேன்

பொழுது புலர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

புலரும் பொழுதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

கூடடைந்த பறவைகள்

கூட்டமாகப் புறப்பட்டுச் செல்கின்றன

மொட்டை மாடியில்

நூற்றுக்கணக்கான காகங்களைக் கூட்டிவைத்துத்

தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதியவர் 

பூங்காக்கள் நிறைந்துவழிய

நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்

சூரியனின் ஒளிக்கற்றைகள்

பூமியை ஆசீர்வதிக்கத் தொடங்கியிருக்கின்றன

மெல்லிய காற்றில் மரங்களின் இலைகள்

ஒன்றோடொன்று முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன

ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும்

பூக்கத் தொடங்குகின்றன புதுக்கோலங்கள் 

தேநீர்க் கோப்பைகளிலிருந்து எழுகின்ற புகை

தூக்கத்தின் ரேகைகளை அழித்துக் கொண்டிருக்கிறது

தூக்கம் கலைந்த குழந்தைகளின் முகங்கள்

குட்டிச் சூரியனாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன

ஒவ்வொரு வீட்டின் சமயலறையில் இருந்தும்

ஓடோடி வருகின்றன ஒவ்வொரு விதமான வாசனைகள்

தூங்கி எழுந்த மகள்

அப்பா என்றழைத்தபடி இறுகப்பற்றிக் கொள்கிறாள்

ஒரேயொரு விடியல்தான்

எத்தனை எத்தனை காட்சிகள்

எத்தனை எத்தனை அனுபவங்கள்

இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதுதான்

இந்தக் காட்சிகள் எல்லோரும் பார்க்கக் கூடியதுதான்

இந்த நேரத்தில்

வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை நட்சத்திரம்

விடிவே இல்லாமல் இருளில் கிடக்கும் காஸாவை

ஞாபகப்படுத்துகிறது எனக்கு

ஆதிக்கத்தின் கரங்களால் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

காஸாவின் கதறல்கள்

என்னுடைய அமைதியை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது

நிம்மதியான இந்த வாழ்க்கையிலிருந்து

நிலைகுலைந்திருக்கும் அந்த வாழ்க்கையை

நினைத்துப் பார்க்கிறேன்

யுத்தத்தின் மீது ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது

யுத்தத்திற்குக் காரணமான பேராசையின் மீது

ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது

பேராசையைப் பற்றிக் கொண்டிருக்கும் முதலாளிகள் மீது

ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது

வீசப்பட்ட குண்டுகளில்

வெடித்துச் சிதறியிருக்கிறார்கள் குழந்தைகள்

எறியப்பட்ட ஏவுகணைகளால்

இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது கட்டிடங்கள்

தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் பாஸ்பரஸ் குண்டுகளால்

பாலஸ்தீனத்தின் நிலம் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது

அகதிமுகாம்களில் அப்பாவி மக்கள்

லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்

இதற்காகவே காத்திருந்த மரண வியாபாரிகள்

இதுவரையிலும் உக்ரைனின் பின்னால் ஒளிந்திருந்தவர்கள்

இதோ இஸ்ரேலை நோக்கி ஓடிவருகிறார்கள்

தீமை தீமையை அணைத்துக் கொள்கிறது

அநீதி அநீதியோடு இணைந்து கொள்கிறது

அவ்வளவுதான்

இயந்திரத் துப்பாக்கிகள் இன்னும் வேகமெடுக்கின்றன

ஏவுகணைகளின் பாய்ச்சல்கள் இன்னும் அதிகரிக்கின்றன

யுத்தத்தின் காட்சிகள் வேகமாக மாறுகின்றன

சொந்த நிலத்தில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் அந்த வேதனையை

இதயமெங்கும் நிறைந்திருக்கும் அந்தத் துயரத்தை

வார்த்தைப்படுத்த முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்

பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்

இரண்டு தோள்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும்

என் மகள்களைப் போல

காஸாவின் குழந்தைகளும் சிறகடிக்க முடியாதா

என்ற வேதனை

இந்த அதிகாலையின்மீது அணுகுண்டை வீசுகிறது

மானுட வரலாற்றைக் கூர்ந்து நோக்குகிறேன்

புரட்சியின் வரலாற்றைத் திடமாய் நம்புகிறேன்

நீங்களும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கும்

நிம்மதியான இந்த விடியலின் சுகத்தை

காஸாவின் மக்களும்

அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்

காஸாவின் விடியலுக்காகக் காத்திருக்கிறேன்!

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 16/10/2023 - 9:20 AM

காஸாவின் விடியலுக்காகக் கவிதை வடித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

ஆனால் வல்லான் வகுத்ததே வாய்க்காலென அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் வாலாய் பெரும்பாலான நாடுகள் வலதுசாரி இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன.

பாலஸ்தீனம் மீதான அளவுகடந்த ஆக்கிரமிப்புச் செய்த இஸ்ரேல் நாட்டின் அதிபதியாய் நேதன்யாகு காஸாவை முற்றாக அழித்தொழக்கப் போவதாய் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதோடு வேதனையாகவும் உள்ளது. என்ன செய்ய?

நம்மால் முடிந்த மட்டும் கவிஞர் ஜோசப் ராஜாவின் வழிநின்று நியாயத்தின் பக்கம் நிற்போம்.

அதேநேரம் போர்நிறுத்தம் ஒன்றே இப்போதைக்குத் தேவை என்பதை உயர்த்திப் பிடிப்போம்.

Reply
மைத்திரிஅன்பு 18/10/2023 - 4:02 PM

”போர் எப்பொழுதும் தேவைக்கானதல்ல. அது தீர்வும் அல்ல. அதன்வழி விளைவது அழிவே..” எந்த அதிகார அரசும் அதை உணரப் போவதில்லை. அவர்களுக்கு எப்படி உணர்த்துவது மனிதத்தை… உயிர்களின் உண்ணதத்தை… உழைப்பின் வழி அமைந்த வாழ்வை…?

Reply

Leave a Comment