சில நாட்களாக
காஸாவின் வானத்தை
போர் விமானங்கள்
சூழாமல் இருந்ததால்
சில நாட்களாக
காஸாவின் நிலத்தை
ஏவுகணையின் குண்டுகள்
துளைக்காமல் இருந்ததால்
சில நாட்களாக
காஸாவின் தெருக்களை
இராணுவ வாகனங்கள்
நிறைக்காமல் இருந்ததால்
சில நாட்களாக
காஸாவின் ஆலிவ் மரங்கள்
ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களால்
வெட்டப்படாமல் இருந்ததால்
குண்டுச் சத்தத்தைக்
கேட்க முடியாமல்
கந்தக நெடியை
சுவாசிக்க முடியாமல்
சில நாட்களுக்கு முன்னால்
அரேபிய வானமெங்கும்
சிதறிப் பறந்த புறாக்கள்
இத்தனை காலம்
வாழ்ந்து கொண்டிருந்த
நிலத்தை நோக்கிப்
பறந்து வந்திருக்கின்றன
பிறந்த நிலத்தோடு
இருக்கும் பிணைப்பு
மனிதர்களுக்கு மட்டுமா
பிறந்த நிலத்தை நோக்கி
வளர்ந்த நிலத்தை நோக்கி
காதல் செய்த நிலத்தை நோக்கி
இனப்பெருக்கம் செய்த நிலத்தை நோக்கி
இரைதேடிப் பறந்த நிலத்தை நோக்கி
ஆசைஆசையாகத்
திரும்பி வந்திருக்கின்றன
காஸாவின் புறாக்கள்
மனிதனின் இன்னொரு பக்கத்தை
இன்னும் அறிந்திராத
அந்தப் புறாக்களின் இதயங்கள்
வானத்திலிருந்து இறங்கும் போதே
சிறகுகளைப் போலவே
படபடக்கத் தொடங்குகின்றன
யாராலும் சந்தேகிக்க முடியாத
தங்கள் நினைவாற்றலை
இன்னொருமுறை
பரிசோதித்துக் கொள்கின்றன புறாக்கள்
நாம் புறப்பட்டுச் சென்றது
இந்த நகரத்திலிருந்து தானா
என்பதை
நம்ப முடியவில்லை அவைகளால்
வீடுகளே இல்லாத காஸாவில்
கூடுகளைத் தேடித்தேடி
அங்கும் இங்குமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
அந்தப் புறாக்கள்
தரைமட்டமாக்கப் பட்டிருக்கும்
காஸாவின்
ஒவ்வொரு இடிபாடுகளின் மீதும்
இளைப்பாறுவதும் பறப்பதுமாக
இயங்கிக் கொண்டேயிருக்கின்றன
பரந்த வானத்தில்
நீண்ட தூரத்தைக்
கடக்கும் போதெல்லாம்
உணராத வலியை
இப்போது உணர்கின்றன
காஸாவின் புறாக்கள்
இன்னும் கொல்லப்படாத
காஸாவின் மனிதர்கள்
தங்கள் நகரம் அழிக்கப்பட்டதைக்
பெருகும் கண்ணீரோடும்
பெரும் கோபத்தோடும்
உலகத்திடம் பகிர்ந்து கொண்டிருப்பதை
வெறுமனே
வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கின்றன புறாக்கள்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால்
தீர்க்கமான குரலில்
இப்படிச் சொன்னார் கிறிஸ்து
” ஆகாயத்துப் பறவைகளுக்கு
கூடுகளுண்டு
மனிதகுமாரனுக்கோ
தலைசாய்க்கவும் இடமில்லை” என்று
தங்களுடைய கூடுகளெல்லாம்
சிதைக்கப்பட்ட ஆதங்கத்தில்
காஸாவின் ஆகாயத்துப் பறவைகள்
ஒருவேளை
கிறிஸ்துவின் வார்த்தைகளைக்
கேள்விக்குட்படுத்தினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை!
ஜோசப் ராஜா
2 comments
காஸா மீண்டும் பற்றி எரிகிறது. உயிர்க்கொலை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஒரு வார போர் நிறுத்தம் பதுங்கிப் பாய்வதற்கானது போல் ஆகிவிட்டது. இஸ்ரேலின் படுகொலை பாதகங்கள் அரங்கேறி வருகின்றன.
இத்துயரத்தை காஸாவின் புறா மூலம் நமக்கு உணர்த்துகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
காஸா புறாக்களின் துன்ப துயரங்கள் நமக்கில்லையா? ஆம் எனில் நம்மாலானதைச் செய்வோம். வாருங்கள்.
”மனிதனின் இன்னொரு பக்கத்தை / இன்னும் அறிந்திராத / புறாக்கள்” இயற்கை உயிரின் ஆக சிறந்த வளர்ச்சி மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் உள்ளுணர்வை இவ்வரிகளால் கேள்விக்குள்ளாக்குகின்றன.