படம் : காஸாவின் புத்தாண்டுக் காட்சி
உலகத்தின்
பெரும்பாலான மனிதர்களுக்கு
கடற்கரைகளிலும்
பூங்காக்களிலும்
பண்ணை வீடுகளிலும்
நட்சத்திர விடுதிகளிலும்
அலங்கரிக்கப்பட்ட தெருக்களிலும்
அடுக்குமாடிக் குடிருப்புகளிலும்
பிறந்த இந்தப் புத்தாண்டு
காஸாவின் மக்களுக்கு மட்டும்
வித்தியாசமாக இருந்தது
காஸாவின் குழந்தைகளுக்கு மட்டும்
விசித்திரமாக இருந்தது
தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளிலிருந்து
தப்பிப் பிழைத்து
தெருக்களிலும் கூடாரங்களிலும்
தங்கியிருக்கும் காஸாவின் மக்கள்
என்ன நினைத்திருப்பார்கள்
இந்தப் புத்தாண்டு தினத்தில்
மாவிற்காகவும்
நீருக்காகவும்
மருந்திற்காகவும்
அத்தியாவசியமான
ஒவ்வொரு பொருட்களுக்காகவும்
நீண்ட நேரமாக
நீண்ட வரிசையில்
காத்துக் கொண்டிருக்கும்
காஸாவின் மக்கள்
என்ன நினைத்திருப்பார்கள்
இந்தப் புத்தாண்டு தினத்தில்
கொல்லப்பட்ட
ஆயிரமாயிரம் குழந்தைகளின்
நினைவுகளோடு தொடங்கியிருக்கிறது
பாலஸ்தீனத்தின் இந்தப் புத்தாண்டு
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட
ஆயிரமாயிரம் வீடுகளுக்குள்
புதைந்திருக்கும் நிராசைகளோடு
தொடங்கியிருக்கிறது
பாலஸ்தீனத்தின் இந்தப் புத்தாண்டு
கணவனை இழந்த
கணக்கற்றப் பெண்களோடு
குடும்பத்தை இழந்த
ஏராளமான ஆண்களோடு
குழந்தைகளைப் பறிகொடுத்த
எண்ணிலடங்கா தாய்மார்களோடு
கைவிடப்பட்ட உணர்வுகளோடும்
தனித்துவிடப்பட்ட தவிப்புகளோடும்
ஈடுசெய்ய முடியாத இழப்புகளோடும்
அழுதழுது வற்றிப்போன கண்களோடும்
படபடக்கும் இதயங்களோடு
தொடங்கியிருக்கிறது
பாலஸ்தீனத்தின் இந்தப் புத்தாண்டு
யாராலும்
ஏற்றுக்கொள்ளவே
முடியாத யுத்தம்
எல்லோரும்
வெட்கப்பட வேண்டிய யுத்தம்
குழந்தைகளின் மீதான யுத்தம்
மருத்துவமனைகளின் மீதான யுத்தம்
வழிபாட்டுத்தலங்களின் மீதான யுத்தம்
இப்படித்தான்
இப்படித்தான்
இனப்படுகொலையோடு
தொடங்கியிருக்கிறது
பாலஸ்தீனத்தின் இந்தப் புத்தாண்டு
இந்தப் புத்தாண்டின்
ஒவ்வொரு வாழ்த்துகளிலும்
பாலஸ்தீனத்தின்
கூக்குரல்களைத்தான் கேட்டேன்
இந்தப் புத்தாண்டின்
ஒவ்வொரு செய்திகளிலும்
நான் பாலஸ்தீனத்தின்
பேரழிவைத்தான் பார்த்தேன்
எல்லோரையும் போல
அந்தப் பாலஸ்தீனர்களும்
அவர்களது நிலத்தில்
அவர்களது ஆலிவ் மரங்களுக்கு கீழ்
அவர்களது தெருக்களில்
அவர்களது கடற்கரையில்
அவர்களது வழிபாட்டுத்தலங்களில்
அவர்களது பள்ளக்கூடங்களில்
அவர்களது வீடுகளில்
அவர்களது சொந்த மண்ணில்
அடுத்த புத்தாண்டைக்
கொண்டாட வேண்டுமென்றும்
சுதந்திரமான மூச்சுக்காற்றை
அந்தப் பாலஸ்தீனக் குழந்தைகள்
சுவாசிக்க வேண்டுமென்றும்
ஒலிவமரக் கிளையொன்றை ஒருகையிலும்
கவிதையை இன்னொரு கையிலும்
ஏந்தியபடி காத்திருக்கிறேன்!
ஜோசப் ராஜா
