காஸாவின் புகைப்படங்கள்
உலகத்தின் மனசாட்சியை
உலுக்கி விட்டதாகச் சொல்கிறார்களே
அப்படியென்றால்
இந்த உலகத்திடம்
மனசாட்சி என்பது இன்னும் இருக்கிறதா
விழுந்த குண்டுகளில்
எரிந்தும் எரியாமலும்
உயிர்பிடித்து ஓடிய
அந்த வியட்நாம் சிறுமியின்
புகைப்படம் கூட
ஒருகாலத்தில் உங்களை
உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில்
குழந்தைகளைத் தேடித்தேடி
மருத்துவமனைகளிலும் பள்ளிக்கூடங்களிலும்
போடப்பட்ட குண்டுகளில்
சிதறிக் கிடந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் கூட
ஒருகாலத்தில் உங்களை உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே
இஸ்ரேலின் ஏவுகணைகள்
காஸாவின் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும்
குறிபார்த்து விழுந்ததில்
குதறி எறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும் கூட
இப்போது உங்களை உலுக்குவதாகத்தான் சொல்கிறீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே
சிரியாவின் அய்லானின் பெயரால்
வியட்நாமின் கிம்புக்கின் பெயரால்
ஈழத்துக் குழந்தைகளின் பெயரால்
காஸாவின் குழந்தைகளின் பெயரால்
இந்த உலகத்திற்கு
இன்னும் நீங்கள் காட்டாத
புகைப்படங்களில் இருக்கும்
குழந்தைகளின் பெயரால்
உங்களுடைய மனசாட்சியை
சந்தேகிக்கிறேன் நான்
யுத்த பின்னணியில்
எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தவிர
பசித்துப் பசித்து நகர முடியாமல் நகரும்
சூடானின் எலும்புச் சிறுமியும் காத்திருக்கும் கழுகும்
போபால் விஷவாயு தாக்கியதில்
புதைக்கப்பட்ட குழந்தையின் முகமும் என
எத்தனையோ புகைப்படங்கள்
இந்த உலகத்தில்
புகைப்படங்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை
ஒவ்வொரு புகைப்படமும்
ஒருவாரத் தலைப்புச் செய்திகளே
ஒவ்வொரு புகைப்படமும்
ஒருகணம் திகைப்பூட்டூம் காட்சிகளே
எல்லா தேசத்தின் எல்லாக் கதவுகளும்
எந்தவொரு வியாபாரிக்கும்
எப்போதும் திறந்தே இருக்கிறது
உலகமயமாக்கலோ முதலாளிகளுக்கு மட்டும்
எல்லைக்கோடுகளே இல்லாமல் செய்துவிட்டது
ஆனால்
இந்த அப்பாவி மக்களுக்கு
ஒரே ஒரு கணம்
ஆழமாய் உள்ளிழுத்து நிம்மதியாய் வெளிவிடும்
அந்த மூச்சுக்காற்றுக்காக
இத்தனை பரிதவிப்பா இத்தனை அலைக்கழிப்பா
ஒவ்வொரு நாட்டின்
எல்லைக் கோடுகளுக்குப் பக்கத்திலும்
பயணக் களைப்பில்
வாழ்க்கையின் மீதான பெரும் விருப்பத்தில்
உடல்சோர்ந்து உயிர்சுமந்து நின்றுகொண்டிருக்கும்
அந்த அகதிக்கூட்டங்களின் முகங்களை
ஒருகணம் உற்றுப்பாருங்கள்
இதயங்களின் குமுறல்களைக் கேட்டாலும் கேட்பீர்கள்
குண்டுபோட்டு கொல்லப்பட வேண்டியவர்கள்
அப்பாவிக் குழந்தைகளா
அலைக்கழிக்கப்பட்டு படுகொலை செய்யப்படவேண்டியவர்கள்
அந்தக் காஸாவின் குழந்தைகளா
என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்
இன்னும் பார்ப்பீர்கள்
இதைவிடக் கொடூரமான காட்சிகளை
ஏனென்றால்
ஆயுதங்கள் தீர்ந்துவிடவில்லை
அணுகுண்டுகள் பயன்படுத்தி முடியவில்லை
ஏவுகணைகளுக்கு வெறி குறையவில்லை
பணத்தாசை நாடுபிடிக்கும் வெறி
வல்லரசுக் கனவு எண்ணைப் பசி
எதுவும் அடங்கிவிடவில்லை
காஸாவின் புகைப்படங்களைப் பார்த்துப்பார்த்து
புலம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்களா
காஸாவின் குழந்தைகளைப் பார்த்துப்பார்த்து
கண்ணீர் வடிக்கப் போகிறீர்களா
ஏவுகணைகளுக்கும் எறிகுண்டுகளுக்கும் தப்பித்த குழந்தைகள்
நாளை கேள்விகள் கேட்பார்கள்
என்ன பதில் சொல்வீர்கள்?
ஜோசப் ராஜா / 25.10.2023
2 comments
”பணத்தாசை நாடுபிடிக்கும் வெறி / வல்லரசுக் கனவு / எண்ணைப் பசி / எதுவும் அடங்கிவிடவில்லை” என்பது என்றென்றைக்குமான உண்மைதான் தோழர். காஸாவின் புகைப்படங்களும் இதற்கு முன் நாம் கண்டு கண்ணீர் சிந்திய புகைப்படங்களுடன் இணைந்துவிட்ட படிமங்கள் தான்… ஆனாலும் இப்படிமம் வெறும் காட்சியாக இருந்துவிடுமா? நெஞ்சை தெய்த உணர்ச்சி முட்களாக இது அவ்வபொழுது அவரவர் சுயநலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் சுட்டி எதிர்முனை பாய்ச்சலை நிகழ்த்தாதா? என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் மீதம் இருக்கவே செய்கிறது. ஆனாலும் கவிதையின் இறுதியில் ”ஏவுகணைகளுக்கும் எறிகுண்டுகளுக்கும் தப்பித்த குழந்தைகள்/ நாளை கேடுகும் கேள்விகளுக்கு” பதில் என்று மட்டும் சொல்ல ஒன்றுமில்லை என்பதே நிசப்தமான உண்மை. ஒன்றுமறியாத குழந்தைகளுக்கு நேர்ந்த சுதந்திரமின்மைக்கு யார்வந்து பதில் சொல்லப் போகிறார்கள். இனி இப்படியான கேள்விகள் குழந்தைகள் வசமிருந்து எழுப்பப்படாதவாறு வாழ வேண்டி முயற்சிப்பதை தவிர வழியொன்றுண்டோ? அர்த்தமும் அழுத்தமும் மிக்க வரிகள்… வாசகர்களின் மனங்களுக்குள் சென்று பல மாற்றங்களை செய்ய வேண்டியனவும் கூட….
இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் போரில் தப்பிப் பிழைத்த குழந்தைகள் கேட்கும் கேள்விகளை அடுக்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
அக்கேள்விகள் அத்தனையும் நியாயமானவை!
அக்கேள்விகள் அத்தனையும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைப்பவை
கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
என்ன செய்யப் போகிறோம் நாம்?
சொல்லுங்கள்.