கனவுகளைச் சொல்லுங்கள்
என்று சொன்னால்
என்ன சொல்வீர்கள்
என்னவெல்லாம் சொல்வீர்கள்
காஸாவின் பெண்ணொருத்தி
சொல்வதைக் கேளுங்கள்
ட்ரோன்கள் பறக்காத
காஸாவின் வானத்தைக்
கனவு காண்கிறேன்
என்று சொன்ன
அந்தப் பெண்ணின் வார்த்தைகள்
முள்ளாய் முள்ளாய்
முள்ளாய் இதயத்தில்
குத்திக் கொண்டிருக்கின்றன
எந்தக் கனவுகளைக் காட்டிலும்
சுதந்திரத்தை நோக்கிய கனவுகள்
மதிப்புமிக்கவை என்று
நம்புகிறவன் என்பதால்
அந்தப் பெண்ணின் வார்த்தைகளில்
நிறைந்திருக்கும்
வலியும் வேதனையும்
ஆற்றாமையும் கோபமும்
அவளுக்குள் எப்படியோ
அதைப்போலவே
எனக்குள்ளும்
எரிந்து கொண்டிருக்கின்றன
இப்போதல்ல
எப்போதுமே
வலியுணரும் போதுதான்
வார்த்தைகளைத் துணைக்கழைக்கிறேன்
ட்ரோன்கள் என்றைக்கு
காஸாவின் வானத்திற்குள்
நுழையத் தொடங்கியதோ
அன்றைக்கே
காஸாவின் பறவைகள்
தொலைதூரமாகப்
பறந்து சென்றுவிட்டன
ட்ரோன்களின் தலையாய வேலை
ஒன்றுதான் ஒன்றே ஒன்றுதான்
எங்கே மக்கள்
கூட்டமாக இருக்கிறார்களோ
அந்த இடத்தைத்
துல்லியமாகத் தாக்கச்சொல்லி
ஏவுகணையின் காதுகளுக்குத்
தகவல் அனுப்புவதுதான்
மருத்துவமனைகளிலும்
அகதி முகாம்களிலும்
பள்ளிக்கூடங்களிலும்
தங்கியிருந்த
பாலஸ்தீனத்தின் குழந்தைகளை
குறிபார்த்துக் கொல்லச் சொன்னதில்
இந்த ட்ரோன்களுக்குப் பங்குண்டு
செயற்கை நுண்ணறிவின்
தொழில்நுட்பத்தை ஏந்திய
இந்தக் கொலைகார
ட்ரோன்களின் சத்தம்
காலையிலும் மாலையிலும்
இரவிலும் ஓயாமல் பறந்துபறந்து
பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு இதயங்களையும்
பதட்டத்திற்குள்ளாக்கியிருக்கிறது
மக்கள் இடம்பெயர இடம்பெயர
துரத்தி வந்திருக்கிறது ட்ரோன்கள்
கொல்லப்பட்டவர்கள்
எத்தனைபேர்
இன்னும் கொல்லவேண்டியவர்கள்
எத்தனைபேர் என்று
இனவெறி பிடித்து
இரத்தவெறி பிடித்து
பறந்தலைந்திருக்கிறது
அந்தக் கொலைகார ட்ரோன்கள்
சதா கண்காணிப்பின் கீழும்
வாழநேர்ந்த துயரத்தை
வார்த்தைகளில் சொல்லிவிட
முடியுமா தோழர்களே
ட்ரோன்கள் பறக்காத
காஸாவின் வானத்தைக்
கனவு காண்கிறேன்
என்று சொன்ன
அந்தப் பெண்ணின் வார்த்தைகளை
இப்போது நினைத்துப் பாருங்கள்
வலியுணர்வீர்கள்
கோபம் கொள்வீர்கள்
தொடர்ந்து இந்த யுத்தத்தை
எழுதிக் கொண்டிருப்பவனாக
எனக்கும் ஒரு கனவுண்டு
அடிக்கடி தூக்கத்தில் என்னைத்
தொந்தரவு செய்யும்
அந்தக் கனவைக் கேளுங்கள்
பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்
ஒன்றாய்ச் சேர்ந்து
ஒட்டுமொத்த ட்ரோன்களையும்
துரத்தியடிக்கும் காட்சிதான்
கனவாக கனவாக
நான் விரும்பும் கனவாக
நாளெல்லாம் இரவெல்லாம்
வந்து கொண்டேயிருக்கிறது!
ஜோசப் ராஜா
