ஏவுகணைகள்
பறந்து கொண்டேயிருக்கும் வானத்தில்
பறவைகள் என்ன செய்யும்
என்று கேட்கும் குழந்தைகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கும்
போர் விமானங்களால் சூழப்பட்ட வானத்தில்
பட்டங்களை எப்படிப் பறக்கச் செய்வோம்
என்று கேட்கும் குழந்தைகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்தப்பட்ட ட்ரோன்கள்
ஒவ்வொரு திசைகளிலும்
ஓயாமல் பறந்து கொண்டிருக்கும் போது
ஒளிந்து விளையாடும்
கண்ணாம்பூச்சி விளையாட்டை
எப்படி விளையாடுவோம்
என்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
பூங்காக்களைப்
பீரங்கிகளாலும்
இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய
வெறியூட்டப்பட்ட இராணுவ வீரர்களாலும்
முழுவதுமாக நிறைத்துவிட்டால்
எங்கே சென்று விளையாடுவோம்
என்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
எங்கள் பள்ளிக்கூடங்களின் மீது
எதற்காக அணுகுண்டுகளை எறிந்தீர்கள் என்று
வாஞ்சையோடு புத்தகங்களை
நெஞ்சோடு அணைத்தபடி கேட்கும் குழந்தைகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
எங்கள் வீடுகளை
எதற்காகத் தரைமட்டமாக்கினீர்கள்
எங்கள் நண்பர்களை எதற்காகத்
துண்டுதுண்டாக்கிக் கொன்று போட்டீர்கள்
எங்கள் சகோதரிகளை வலுக்கட்டாயமாக
எதற்காகத் தூக்கிச் சென்றீர்கள்
ஆசையோடு நாங்கள் வளர்த்துக்கொண்டிருந்த
பூச்செடிகளின் மீது
எதற்காக வெடிகுண்டை வீசினீர்கள்
எங்களுடைய சின்னஞ்சிறு மீன்குஞ்சுகள்
உங்களை என்ன செய்தன
எதற்காக அவைகளைக் கொன்று போட்டீர்கள்
எங்கள் நகரத்தின் மீதும்
எங்கள் எதிர்காலத்தின் மீதும்
எதற்காக அந்தக் கரும்புகையை
நிலையாகப் பரப்பி வைத்திருக்கிறீர்கள்
என்று கேட்கும்
என்று கேட்டுக் கொண்டேயிருக்கும்
காஸாவின் குழந்தைகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
எங்கள் ஏமாற்றங்களை
எங்கள் துயரங்களை
எங்கள் கண்ணீரை
எங்கள் மரணங்களை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்
உங்களுக்கும்
அந்தக் கொலைகாரர்களுக்கும்
என்ன வித்தியாசம் இருக்கிறது
என்று கேட்கும் குழந்தைகளுக்கு
பெரியவர்களாகிய உங்களிடம்
என்ன பதில் இருக்கிறது
ஆனபோதிலும்
எல்லாவற்றிற்குமான பதிலை
நாங்களும்கூட தெரிந்துதான் வைத்திருக்கிறோம்
எங்கள் தாய் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்
எங்கள் தந்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்
இந்த உலகத்தின் பெரியவர்களுக்கு
நாங்கள் சொல்லிகொள்வது இதுதான்
இத்தனை பேரழிவுகளுக்குப் பின்னாலும்
நாங்கள் என்னசெய்வோம் என்று சந்தேகிக்க வேண்டாம்
எங்கள் நிலத்திற்காகவும் எங்கள் இருப்பிற்காகவும்
எங்கள் முன்னோர்கள் போராடியதைப்போல
நாங்களும் போராடத்தான் போகிறோம்
எங்களின்மீது பேரழிவிற்கான ஆயத்தங்கள்
தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில்
காஸாவின் குழந்தைகளாகிய நாங்கள்
உங்களிடம் சொல்லவிரும்புவது இதுமட்டும்தான்
பெரியவர்களாயிருப்பது என்பது
பெரியவர்களாக மட்டுமே இருப்பதல்ல!
3 comments
இஸ்ரேல் பாலஸ்தீன ப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகி யுள்ள குழந்தைகளின் கேள்விக்கணைகளைத் தமது கவிதைகளால் அடுக்கி உள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா. போர் அழிவுகளுக்குக் காரணமான போர் வெறியர்களைக் கண்டிக்க வேண்டியது நமது தலையாய கடமைதானே!
உயிரை உடமையை உறவுகளை இழந்து தவிக்கும் மனிதர்கள் மீதான இரக்கமே இல்லாமல் தொடர்ந்து நிகழ்த்தும் போரை முடிவுக்குக் கொண்டு வர நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவோம்.
படியுங்கள்.
பரப்புங்கள்.
மனிதகுலம் மிகக் கொடூரமான அழிவுகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. முதலாளிகள் வாழ சாமானியர்களின் உடலும் உழைப்பும் மூலதனமானதைப் போல, இன்று உயிரும் மூலதனமாகிவிட்டது. நமக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
பெரியவர்களாயிருப்பது என்பது பெரியவர்களாக மட்டுமே இருப்பதல்ல! என்ற வரிகளில் தான் எத்தனை எத்தனை உள்ளர்த்தங்கள்.. வாழ்த்துகள் கவிஞரே..
”பெரியவர்களாயிருப்பது என்பது / பெரியவர்களாக மட்டுமே இருப்பதல்ல” இது குழந்தைகள் சொல்ல விரும்பும் வார்த்தை மட்டுமல்ல. பெரியவர்கள் என்று எண்ணிக்கொள்ளும் அனைவரும் உளப்பூர்வமாக உணர வேண்டிய வார்த்தை. இங்கு நாம் மிக மகிழ்ச்சியாக வண்ணம் பூசப்பட்ட கொலு பொம்மைகளை அடுக்கி அழகுப்பார்த்து – அதையே கல்வி நிலையங்களிலும் செய்து கொண்டு – காலம் கழிக்கிறோம். இப்படி ஒரு குழந்தைகளுக்கான உலகம் அழிய தொடங்கி இருக்கும் அரசியலை – அதிகாரத்தை பார்க்கவும் பகிரவும்.. அதற்காக கொஞ்சமும் கவலைப்படவும் கூட முடியாத / நேரமில்லான / சூழற்ற சூழல் என்று மாறுமோ… அதிகாரம் எப்பொழுது நியாயமாக இல்லாமல்… எதிர்கால வாழ்வியல் கனவுகளை முகவரியற்ற நிலையில் கரைசேர்த்திருக்கிறது. இது நாடுகளுக்கு இடையில் நடக்கும் போரல்ல. மனிதர்களுக்கு இடையில் எழுந்திருக்கும் சண்டை… மனிதம் என்ன ஆகுமோ? உணர்வுக்கு தலைவணங்குகிறேன் தோழர்