காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

82 வயதாகும் பாப் டைலான், கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய இதயத்திலிருந்து வழியும் இசையால் அமெரிக்கா மட்டுமல்ல உலகத்தின் இசை ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அமெரிக்காவின் அதிகாரத் திமிரிலிருந்து தொடங்கப்பட்ட வியட்நாம் யுத்தம் தொடங்கி, போருக்கு எதிராகத் தொடர்ந்து பாடியவர். மூச்சிறைக்க ஜனநாயகம் பேசும் அமெரிக்க சமூகத்தில் எங்கும் பரவியிருந்த கறுப்பின மக்களின் பிரச்சனைகளைத் தன்னுடைய இசையில் வெளிப்படுத்தியவர். ஒரு கலைஞனாகத் தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் தன்னுடைய இசையில் பிரதிபலிக்கச் செய்தவர்.

ஒருகையில் கிட்டாரோடும், கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஹார்மோனிகாவோடும் ஆழமாக ஊடுருவும் கண்களைக் கொண்ட டைலானின் புகைப்படத்தை முதல்முறையாகப் பார்த்த நினைவுகள் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கின்றன. முதலாளித்துவத்தின் கோரத்தை, முதலாளித்துவத்தின் கோர விளைவுகளை, சமூக வாழ்க்கையின் மீது முதலாளித்துவம் தொடுத்த யுத்தத்தை உரக்கப் பாடியவர் பாப் டைலான்.

இப்போதும் இந்த உலகம் யுத்தத்தில்தான் நின்று கொண்டிருக்கிறது. இப்போதும் இந்த தேசத்தில் கலவரங்கள்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மானுடத்திரளின் துயரங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன. மாற்றத்திற்கான ஏக்கப் பெருமூச்சுகள் எங்கும் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

விசை செலுத்தப்படாமல் எதுவும் நிகழாது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இதோ தன்னுடைய கிட்டாரின் நரம்புகளிலிருந்து ஒவ்வொரு மனிதனின் நரம்புகளுக்குள்ளும் பாப் டைலான் செலுத்திய விசையைப் பாருங்கள். 1962 ல் வெளியிடப்பட்ட அவருடைய புகழ்பெற்ற படைப்பான ”காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன” என்ற பாடலின் வரிகளைப் படித்துப் பாருங்கள்,

வெறுப்பிற்கு எதிராக அன்பையும், பிரிவினைக்கு எதிராக ஒற்றுமையையும், கள்ள மெளனத்தை உடைத்தெறியும் கவிதைகளையும் கைப்பற்றிக்கொள்ளுங்கள். எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் வாழத்தான் விரும்புவீர்கள் என்று.

காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன - பாப் டைலான்

நீ மனிதனென்று ஒத்துக் கொள்வதற்காக

அந்த மனிதன் இன்னும் எவ்வளவு தூரம் நடந்தாக வேண்டும்

ஒரு கடற்கரை மணலில் இளைப்பாறுவதற்காக

அந்த வெண்புறா இன்னும் எத்தனை கடல்களை தாண்டியாக வேண்டும்

தடைசெய்யப் படுவதற்கு முன்னால்

அந்த பீரங்கிகள் இன்னும் எத்தனை குண்டுகளைப் பொழிந்தாக வேண்டும்

தோழனே, விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

 

கடல்நீரால் அழிக்கப்படும் வரை

அந்த மலைகள் இன்னும் எத்தனை காலம் நிலைத்திருக்கும்

முழுமையான விடுதலையைப் பெறுவதற்கு

சில மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் இருக்க வேண்டும்

பார்க்கவேயில்லையென்று பாசாங்கு செய்வதற்கு

ஒரு மனிதன் எத்தனை காலம் முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டும்

தோழனே, விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

 

வானத்தை நேராகப் பார்ப்பதற்கு

ஒருவன் எத்தனை முறை தலையை உயர்த்த வேண்டும்

மனிதர்களின் அழுகுரலைக் கேட்பதற்கு

ஒரு மனிதனுக்கு இன்னும் எத்தனை காதுகள் வேண்டும்

கொத்துக் கொத்தாக மனிதர்கள் செத்துப் போன பின்பும்

உனக்கு விளங்குவதற்காக இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ வேண்டும்

தோழனே, விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

விடைகள் காற்றில் சுழன்று கொண்டிருக்கின்றன

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 02/08/2023 - 9:24 AM

காற்றில் சுழன்று கொண்டிருக்கும் விடைகளைப் பிடிக்க பயணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

காலம் கடத்துதல் காரணகர்த்தாக்களுக்கு அனுகூலமாகி
தவறுகள் சங்கிலித் தொடராக பயணிக்கும்.

விடைகளைக் காற்றில் காணலும் அவ்விடைக்கேற்ப
இயங்குவதும் காலத்தின் அவசியம் என்பதை வழக்கம்போல் சிறப்பாக இயம்புகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

படியுங்கள்
பரப்புங்கள்
இயங்குங்கள்.

Reply

Leave a Comment