கார்த்திகை தீப மாவளி – ஆவணப்படம்

ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பில் நண்பர் விஜய் அவர்கள் இயக்கியிருக்கும் கார்த்திகை தீப மாவளி என்ற ஆவணப்படத்தை இன்று காலையில் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் பேராசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில், திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் இருக்கும் அவருடைய கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாவளிகளைச் செய்து கொண்டுவந்தார் விஜய். அந்தத் தீபத் திருநாளை எல்லோரும் மாவளி சுற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். இந்த ஆவணப்படத்திற்கான விதை அன்றே விழுந்திருக்கும் என்று எண்ணுகிறேன். முதல் படைப்பை முழுமையான படைப்பாகக் கொண்டு வந்ததற்காக வாழ்த்துகள் விஜய்.

வாடைக்காற்று வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் கார்த்திகை மாதத்தை, அதன் பனியை, அதன் குளிரை நக்கீரனாரின் நெடுநல்வாடையில் காணலாம். இந்த ஆவணப்படத்தின் முதல் பதினாறு நிமிடங்கள் காட்சிக் கவிதையான நெடுநல்வாடையைக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். அந்தக் காட்சிகள் அற்புதமாகவும் வந்திருக்கிறது. எங்கள் பேராசிரியர் அண்ணாதுரை அவர்களின் நீண்டநாள் கனவு, நெடுநல்வாடையைக் காட்சிப்படுத்த வேண்டுமென்பது. விஜய் தன்னுடைய சக்திக்கு மீறி அதை நிறைவேற்ற முயற்சி செய்திருக்கிறார். மாவளி சுற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல், தீபம் ஏற்றுதல் என கார்த்திகை மாதமானது தீபங்களால் நிறைந்தது. கார்த்திகை மாதமென்பது ஒளியால் நிறைந்தது. ஒளியைக் காட்சிப்படுத்துவதென்பது ஒருவகையில் ஒளியாகவே மாறுவதற்குச் சமமானதுதான்.

ஒளியைப் பார்த்துக் கொண்டே இருந்தால், ஒளியாகவே மாறிவிடுவீர்கள். முதன்முதலில் ஒளியைத் தரிசித்த அந்த ஆதிமனிதனின் இதயத்துடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்களேன். இறைவன் ஒளியாகப் பார்க்கப்படுவதும், ஒளி இறைவனாகப் பார்க்கப்படுவதும் ஏனென்ற காரணம் புரியக்கூடும். கிறிஸ்து பிறப்பை ஒளிரும் வால்நட்சத்திரம் உலகிற்குச் சொல்கிறது, நபிகளின் வானத்தில் பிறை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. சிவன் ஒளியாகவே காட்சி தருகிறார். ஒளிக்கும் மனிதகுலத்திற்குமான பிணைப்பு வாழ்க்கையோடு இணைந்தது. ஒளியில்லாமல் பிரபஞ்சம் இல்லை. ஒளியில்லாமல் ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஒளி வணங்கப்படுகிறது. இந்த ஆவணப்படத்தில் தங்கள் நிலத்திற்கு விளக்கேற்றும் காட்சியைப் பார்க்கும்பொழுது எழுந்த உணர்வு விவரிக்க முடியாதது.

ஒளிரும் நட்சத்திரங்கள் பரவசம் கொடுக்கக்கூடியது. ஒளிரும் விளக்குகள் இருளை மட்டுமல்ல இதயத்தையும் விழிப்படையச் செய்யக்கூடியது. நிலவொளி, சூரியஒளி, நட்சத்திரங்களின் ஒளி என இந்தப் பிரபஞ்சமே ஒளிமயமானதுதான். இந்தப் பிரபஞ்சம் ஓயாமல் விளையாடும் விளையாட்டும் ஒளி விளையாட்டுதான். மாவளி சுற்றுதல் கூட, இந்த மண்ணின் உழைக்கும் மக்களால் நீண்ட காலங்களாகக் கடைப்பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஒளி விளையாட்டுதான். சில பாறை ஓவியங்களில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது இந்த ஒளி விளையாட்டு. இந்த ஆவணப்படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் நீளும் அந்த ஒளி விளையாட்டு, அந்தக் காட்சிக் கவிதை நிச்சயமாக உங்களை உற்சாகப் படுத்துமென்று உறுதியாக நம்புகிறேன்.

சினிமா என்பது அவ்வளவுதான் தோழர்களே, எளிமையும், உண்மையும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இடத்தில்தான் உன்னதமான காட்சிகளும், கவிதைகளும் அறுவை சிகிச்சை இல்லாமல் பிரசவிக்கப்படும். அப்படி வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பைப் பாருங்கள். எளிய ஆழமான இந்த முயற்சியை எல்லோருக்கும் பகிருங்கள். நீங்களும் கூட அடுத்த கார்த்திகைக்கு அந்த மாவளியை வாங்கிச் சுற்றிப்பாருங்கள். சுற்றுச்சூழலுக்கும் உங்கள் இதயத்திற்கும் உகந்ததாக இருக்கும்.

நம்புங்கள் இருள் நிலத்தில் பூக்கும் அந்தத் நெருப்புப் பூக்கள் உங்களைப் பரவசமடையச் செய்யும். காற்றில் பறக்கும் அந்தக் கங்குத் துகள்கள் உங்களைக் களிப்படையச் செய்யும். ஒளியோடு விளையாடுங்கள். ஒளிர்ந்திருங்கள். ஒளியால் ஆசீர்வதிக்கப்படுவதைத் தவிர வேறெதும் வேண்டுமா என்ன!

வாழ்த்துகள் விஜய். இன்னும் நிறையப் படைப்புகளைக் கொடுக்க இதயத்தின் ஆழத்திலிருந்து அன்பின் பூக்களை அள்ளித்தருகிறேன்.

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 26/01/2024 - 1:37 PM

கார்த்திகை தீப மாவளிப்படம் அருமை.

அதைவிட அதை அறிமுகப்படுத்திய கவிஞர் ஜோசப் ராஜாவின் அறிமுகம் அருமை.

கண்டு களியுங்கள்.

Reply
மைத்திரிஅன்பு 31/01/2024 - 11:53 AM

வணக்கம் தோழர். தீப மாவளி என்னும் இந்த ஆவணத்தை நான் காஞ்சியில் நேரடியாக திரையிடப்படும் பொழுது கண்டேன். அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மாலை நேரம் இப்படம் திரையிடப்பெற்றது. முழுமையாக பார்த்து பரவசம் அடைந்தேன். இலக்கிய பாடல் வரிகளுடன் சின்ன சின்ன கிராமிய காட்சிகளாகத் தொடங்கிய படம் – படிப்படியாக என் பாலிய நினைவுகளை ”இருள் விளக்கிய வெளிச்சமாய்” மீட்டெடுத்தது மறக்க முடியாத நினைவாகும். படத்தில் தீப ஒளி திருநாளை முன்னிட்ட சில பண்பாட்டுப் பதிவுகளும் சிறார்களும் மகளீரும் மாவளியை தயாரிக்கும் காட்சிகளும் எனக்குள் சிறுவதில் என்னை விட பெரிய வயது கொண்ட அண்ணன்களுடன் நான் கண்ட காட்சியை மீட்டெடுத்தது. அவசியமான பதிவு. விளையாட்டாக இன்று காஞ்சி நகரில் பலரும் மாவளியை காசு கொடுத்து வாங்கி – சுற்றுவதையும் படம் பார்ப்பதற்கு சில தினங்களுக்கு முன் கவனித்தேன். வீம்புக்கானதுதான் அது என்பதில் ஐயமில்லை. அதையே கிராமிய சூழலில் வாழும் மக்கள் – தானா தயாரித்து – அதற்காக அன்று முழுவதும் உழைத்து – மாலை நேரம் வந்ததும் அதனை வீதியில் சுற்றுவதில் இருக்கும் ஆனந்தத்தை காசால் – நரகவாசிகள் இமியளவும் அடைய வாய்ப்பில்லை. உழைப்பின் உன்னதத்தை உணர்ந்து உள்வாங்குவதில் இருக்கும் மகிழ்ச்சியையும் வரலாற்றையும் இப்படம் பார்வையாளர்களுக்குள் கடத்தும் நுண்மையையும் மறுப்பதற்கில்லை. சிறப்பாக கண்ணோட்டத்துடன் தோழர் ஜோசப் ராஜா அவர்களின் பார்வையோடு என் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி தோழர்

Reply

Leave a Comment