எப்படி மறக்க முடியும்
அந்த விடியலை
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும்
எனக்காகப்
பூபாளமிசைத்த அந்த விடியல்
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும்
எனக்காக
நடனமாடிய அந்த விடியல்
ஒளிபுக வழியில்லாத
மேகக்கூட்டங்களை விலக்கியபடி
நீ நெருங்கி வந்த
அந்த விடியல்
என்னுடைய
ஏராளமான அற்புத விடியல்களில்
முதன்மையானதுமாய் முக்கியமானதுமாய்
மாறிப்போனதில் ஆச்சரியமேதுமில்லை
இந்த வாழ்க்கையில்
இந்தப் பயணத்தில்
ஒருகணங்கூட
குழப்பமடைந்ததில்லை நான்
காரணம் நீ
இந்த வாழ்க்கையில்
இந்தப் பயணத்தில்
ஒருகணங்கூட பயந்ததில்லை நான்
காரணம் நீ
சிகரங்களில் ஏறவும்
சமவெளிகளைக் கடக்கவும்
எப்போதுமே களைத்துப் போனதில்லை நான்
காரணம் நீ
அசைக்க முடியாதவனாய்
அழிக்க முடியாதவனாய்
கம்பீரமாய் நான் அமர்ந்திருக்கும்
சக்தி பீடம் நீ
உன்னைச் சந்திக்கும் வரையிலும்
கொஞ்சமாகத்தான் இருந்தது
காதலைப் பற்றிய
என்னுடைய ஞானமும்
வாழ்க்கையைப் பற்றிய
என்னுடைய ஞானமும்
மிகையொன்றுமில்லை
நீதான் ஞானமூட்டினாய்
எத்தனை போராட்டம்
எத்தனை அலைக்கழிப்பு
எத்தனை அவமதிப்பு
அத்தனையிலும் அத்தனையிலும்
விடாது பற்றிக்கொண்ட
உன் நங்கூரப் பாய்ச்சலை
வாழ்வு முழுவதும் மறக்கமாட்டேன்
நேற்றும் இன்றும் நாளையும்
என் கவிதைகளின்
இயக்க சக்தியாய்
இருந்தாய்
இருக்கிறாய்
இருப்பாய்
நீ ஊட்டிய ஞானத்தால்
நீ ஊட்டிய வலிமையால்
நீ ஊட்டிய பேரன்பால்
இந்தச் சமூகத்தைச்
சமப்படுத்தாமல் ஓயமாட்டேன்
இந்தச் சமூகத்தை
புதுப்பிக்காமல் போகமாட்டேன்
ஜோசப் ராஜா
1 comment
காரணம் நீ எனும் நம்பிக்கை கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
இது ஒரு நம்பிக்கைக் கவிதை மட்டுமல்ல. தோழமை கவிதையும் கூட.
வாசியுங்கள். பரப்புங்கள்.