காந்தள் மலரும் கார்த்திகை வாழ்த்தும்

காந்தள் மலரை தன்னுடைய தூரிகையால் மலரச் செய்த ஓவியர் மாதேஷ் க்கு அன்பின் வாழ்த்துகள்!

சங்கக் கவிஞர்கள்

அதிகம் பாடியது
காந்தள் மலரைத்தான்
மலையுச்சியில்
மலையடிவாரங்களில்
அடர் காடுகளுக்குள்
மலர்ந்த அந்த மலரை
சலிக்கச் சலிக்கப்
பார்த்திருக்கிறார்கள்
சங்கக் கவிஞர்கள்
பார்த்துப் பார்த்துச் 
எழுதியிருக்கிறார்கள்
சங்கக் கவிஞர்கள்
ஜப்பானில்
ஹைக்கூ எழுதுவதற்காகவே
பயணம் செல்வார்களாம்
கவிஞர்கள்
எல்லா நிலத்திலும்
கவிஞர்கள்
ஒரே மாதிரிதான் போல
காந்தள் மலரை
மீண்டும் மீண்டும்
பார்க்காமல்
ஓயாமல் இரசிக்காமல்
இப்படியெல்லாம் 
எழுத முடியுமா என்ன!
 
இதோ சில உதாரணங்கள்
 
“கணவிரி காந்தள்”
அதாவது
விரிந்து பரந்த
காந்தள் மலர்
என்கிறார் பரிபாடலில்
நல்லந்துவனார்
 
”நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள்”
அதாவது
“நீர் நிறைந்த இடத்தில்
தளிர்விட்டு விரிந்த காந்தள்”
என்கிறார் பரிபாடலில் கேசவனார்
 
”கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்”
அதாவது 
கை விரல்களைப் போலத்
தோற்றமளிக்கும் காந்தள் மலர்
என்கிறார் பரிபாடலில் நப்பண்ணனார்
 
“தோடார் தோன்றி குருதி பூப்ப”
அதாவது
குருதி போன்ற
சிவப்பு நிறத்தில்
பூத்துக் குலுங்கும் காந்தள்
என்கிறார் முல்லைப்பாட்டில் நப்பூதனார்
 
“முகை அவிழ்ந்த காந்தள்” 
அதாவது 
மொட்டுகள் விரிந்து
மலர்ந்த காந்தள்
என்கிறார் நற்றினையில் கம்பூர் கிழான்
 
“தீயின் அன்ன ஒண் செங் காந்தள்”
அதாவது
நெருப்பின் சுடரைப்போல் பிரகாசிக்கும்
சிவப்பு நிற காந்தள் மலர்
என்கிறார்  மலைபடுகடாம் கவிஞர்
 
“சுடர்ப்பூங் காந்தள்”
அதாவது
தீ போன்ற
சிவந்த நிறமுடைய
காந்தள் மலர்
என்கிறார் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்
 
இன்னும்
இன்னும் 
இப்படியான காட்சிகள்
இப்படியான வர்ணனைகள்
ஏராளம் இருக்கின்றன
கார்த்திகையை
காந்தளை
இதயத்திலிருந்து பார்த்த
நம் முன்னோடிக் கவிஞர்களின்
கரம்பற்றி
நானும் உங்களுக்கு
கார்த்திகை திருநாள்
வாழ்த்துகளைச்
சொல்லிக் கொள்கிறேன்
 
ஜோசப் ராஜா
 
 

Related Articles

Leave a Comment