கவிதைகளும் பாலஸ்தீனமும்

புகைப்படம் : மஹ்மூத் தார்விஷ் ( பாலஸ்தீனக் கவிஞர் )

போர்களைப்பற்றி

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்

போர்களைப்பற்றி

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்

போர்களின் கொடுமைகளைத்

தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்

ஏவுகணைகளிலிருந்தும்

பீரங்கிகளிலிருந்தும்

துப்பாக்கிகளிலிருந்தும்

வெடித்துச் சிதறும் குண்டுகளின் சப்தங்கள்

முடிவில்லாமல் என்னிதயத்தில்

எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன

காயம்பட்ட குழந்தைகளின் கதறல்கள்

உறவுகளை இழந்த பெண்களின் கூக்குரல்கள்

உறுப்புகளை இழந்த மனிதர்களின் ஓலங்கள்

பிணங்களையே பார்த்து பித்துப்பிடித்தவர்களின் முனகல்கள்

பறந்துவரும் ஏவுகணைகளுக்குப் பயந்து

பதுங்குக்குழிக்குள் பதுங்கியிருப்பவர்களின் மெளனங்கள்

எல்லாமும் எல்லாமும் எல்லாமும்

என் காதுகளை நிறைத்திருக்கின்றன

தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் குண்டுகளால்

தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினால்

உயர்ந்து எழுந்து அடர்ந்திருக்கும் அந்தக் கரும்புகை

நுரையீரலைச் சூழ்ந்துகொண்டு மூச்சுத்திணறச் செய்கிறது

என்னுடைய ஆச்சரியமெல்லாம்

உங்களால் எப்படி எல்லாவற்றையும்

அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான்

என்னுடைய ஆச்சரியமெல்லாம்

உங்களால் எப்படி எல்லாவற்றையும்

மெளனமாகத் தாங்கிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான்

என்னுடைய ஆச்சரியமெல்லாம்

உங்களால் எப்படி எல்லாவற்றையும்

கவனமாகக் கடந்துசெல்ல முடிகிறது என்பதுதான்

ஒருவேளை

அந்த அணுகுண்டுகள் உங்கள் தலைகளில் விழுந்தால்

ஒருவேளை

அந்த துப்பாக்கிகள் உங்கள் நெஞ்சைத் துளைத்தால்

ஒருவேளை

அந்த பாஸ்பரஸ் குண்டுகள் உங்களைப் பற்றியெரியச் செய்தால்

உங்கள் அமைதியின் மீது

ஆயிரமாயிரம் வெடிகுண்டுகளை வீசியெறிந்தால்

உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை

உங்களைச் சங்கடப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை

ஆனால்

அதுதான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது

ஆனால்

அதுதான் அந்தப் பாலஸ்தீனத்தில்

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது

இன்று நேற்றல்ல

கடந்த நூறு வருடங்களாக

சொந்த நிலத்திற்காகப்

போராடிக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனியர்கள்

இன்று நேற்றல்ல

கடந்த நூறு வருடங்களாக

நிம்மதியான வாழ்க்கைக்காகப்

போராடிக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனியர்கள்

யுத்தங்களுக்கு நடுவில்

எத்தனை தலைமுறைகளைக்

கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை

நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது நெஞ்சம்

இதோ மீண்டும் ஒரு பேரழிவின் காட்சி

கண்களைக் கலங்கச் செய்யும் வேளையில்

இதயத்தை இரணமாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்

அந்த தேசத்தின் விடுதலைக்காக

தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு கவிதையையும்

கவிதையின் ஒவ்வொரு சொற்களையும்

நினைத்துப் பார்க்கிறேன்

சிறையிலடைக்கப்பட்ட போதிலும்

நாடுகடத்தப்பட்ட போதிலும்

தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட போதிலும்

துப்பாக்கியை முகத்திற்கு நேராக நீட்டியபோதிலும்

பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காக

பாலஸ்தீனத்தின் நிம்மதிக்காக

பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக

பாலஸ்தீனத்தின் விடியலுக்காக

அன்றிலிருந்து இன்றுவரையிலும்

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு கவிஞனையும் நினைத்துப் பார்க்கிறேன்

நீண்ட நாட்களுக்கு முன்னால்

இதே போன்றதொரு யுத்தச் சூழலில்

பாலஸ்தீனத்தின் கவிதைகளில்

பாடுகளே நிறைந்திருக்கிறது

பாலஸ்தீனத்தின் பாடுகளே

கவிதைகளாக மாறியிருக்கிறது

என்பதைப் புரிந்துகொண்ட நேரம்தான்

நான் கவிதையையும் புரிந்துகொண்டேன்

அதனால்தான்

ஒரு மனிதனாக

பாலஸ்தீனத்தின் விடுதலையை விரும்புகிறேன்

ஒரு கவிஞனாக

பாலஸ்தீனத்திலிருந்து வரப்போகும்

மகிழ்ச்சியின் கவிதைகளுக்காகக் காத்திருக்கிறேன்!

Related Articles

3 comments

மைத்திரி அன்பு 11/10/2023 - 7:39 PM

ஆம் தோழர்…மக்களுக்கு எங்கு எவ்விதத்தில் இழப்பும் அழிவும் ஏற்பட்டாலும்…அவர்களின் வலியையும் விடுதலையை நோக்கி எழுத்துகள் ஒருவகை இலக்கியமாக வெளிப்படுதல் இயல்பே… காலந்தோறும் கவிதைகளும் அதற்கான இடத்தை தந்திருக்கின்றன. அவ்வகையில் தங்களின் எழுத்துகள் வழியே எழும் கேள்விகள்… சுயநலச் சிந்தனையுடன் ஓடியோடி உழைத்து ஒன்றுக்கும் உதவாத பொருளாதார சேமிப்புகளை அதிகரித்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்களை நோக்கி ஏவுகணைகளென எழுகிறது…அதற்கான பதிலுக்காகவும்… மாற்றத்திற்காகவும் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனாலும் காத்திருப்பின் காலத்திற்குள் இருக்கும் அத்தனையும் இழக்க கூடும் சூழலுக்காக அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது…

Reply
பெரணமல்லூர் சேகரன் 12/10/2023 - 9:34 AM

பாலஸ்தீன விடுதலைக்காகப் போரிடும் பாலஸ்தீனியர்களின் இழப்பும் வலியும் ரணமும் சொல்லில் வடிக்க முடியாதவை. எனவேதான் 2014 வரை இந்தியா அவர்களுக்கு ஆதரவளித்து வந்தது.

ஆனால் ஒன்றிய அரசு பாசிசக் கூட்டத்திடம் வந்தவுடன் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறிப்
போனது. அதன் விளைவாக இப்போது ஒன்றிய அரசு கொடூர வலதுசாரி இஸ்ரேல் நேதன்யாகு அரசை ஆதரிக்கிறது. என்னே கொடுமை!

இந்தியர்கள் பாலஸ்தீனியப் போராளிகளுக்கு ஆதரவாககக் குரல் தர வேண்டியது காலத்தின் அவசியம்.

கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையைப் படித்தால் புரியும்.படியுங்கள். பரப்புங்கள்.

Reply
Baskaran F T 14/10/2023 - 9:34 AM

தோழர் ஜோசப் ராஜா அவர்களின் கவிதையின் மூலமாக கண்முன்னே வந்து போகிறது பாலஸ்தீனத்தின் கரும்பு புகைகள்….
வீடு இழந்தவர்களும் வீதியில் வந்து நிற்கின்றார்கள்
வீடு உள்ளவர்களோ புதைகுழிக்குள் புதைந்து கொண்டிருக்கிறார்கள்.
உடலை இழந்தவர்கள்
உடலில் அடிபட்டவர்கள்
உயிரை இழந்தவர்கள் என அத்தனை பேரும் நம் கண் முன் காட்சிப்படுத்தப்படுகின்றது தோழர் ஜோசப் ராஜா அவர்களின் கவிதையின் மூலமாக….
தமிழ் பழமொழிபோலே சொல்லப்போனால் எருமை மாட்டில் மழை பெய்தது போல் நாம் இந்த நிகழ்வுகளை எல்லாம் கடந்து கொண்டு நமக்கான தேவைகளுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

Reply

Leave a Comment