கழிவறைக் காகிதத்தை
எதற்காகப் பயன்படுத்துவதென்று
எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
ஆனால்
வேலைசெய்யும் நிறுவனத்திற்கு
வேலையிலிருந்து வெளியேறுகிறேனென்று
கடிதம் எழுத
கழிவறைக் காகிதத்தைப்
பயன்படுத்தியிருக்கிறார்
ஒரு தொழிலாளி
அந்தக் காகிதத்தில்
அவர் எழுதியிருந்த
வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளல்ல
உங்களால்
உணர்ந்துகொள்ள முடியுமென்றால்
உங்கள் இதயத்தை
சுக்குநூறாக
உடைக்கக்கூடிய வார்த்தைகள்
உங்களால்
புரிந்துகொள்ள முடியுமென்றால்
முதலாளித்துவச் சமூகத்தின்
நேரச் சுரண்டலை
உணர்வுச் சுரண்டலை
உழைப்புச் சுரண்டலை
இரத்தமும் சதையுமாக
உணர்த்தக்கூடிய வார்த்தைகள்
வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளல்ல
என்பதற்கு உதாரணமாக
கழிவறைக் காகிதத்தில்
எழுதப்பட்ட
அந்த தொழிலாளியின்
வார்த்தைகளைப் பாருங்கள்
”இந்த நிறுவனம்
என்னை
கழிவறைக் காகிதத்தைப் போல
நடத்தியதற்காக
என்னுடைய ராஜினமாக் கடிதத்தைக்
கழிவறைக் காகிதத்தில்
எழுத முடிவெடுத்தேன்
நான் விலகுகிறேன்”
என்ற வார்த்தைகளை
கசப்பின் உச்சத்தில்
கோபத்தின் உச்சத்தில்
ஒரு தொழிலாளி
ஒரே ஒரு தொழிலாளி
எழுதியிருக்கலாம்
ஆனபோதிலும்
எனக்குத் தெரியும்
ஒவ்வொரு தொழிலாளியும்
ஒவ்வொரு நாளும்
எழுத நினைக்கும்
வார்த்தைகள்தான்
என்ன செய்யலாம்
உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்!
ஜோசப் ராஜா