கலீல் ஜிப்ரானின் காதல் பெய்ரூட்

ந்த அழகிய லெபனானையும்

அந்தப் பேரழகான பெய்ரூட்டையும்

கலீல் ஜிப்ரான் தான்

காட்டினார் எனக்கு

நிஜம் என்னவென்றால்

நான் மட்டுமல்ல

இந்த உலகமே

ஜிப்ரானின் வார்த்தைகளில்தான்

லெபனானைத் தரிசித்தது

அழகிய பெய்ரூட்டை

அழகான வார்த்தைகளால்

இன்னும் அழகாக்கினார்

கலீல் ஜிப்ரான்

தவிர்க்கவே முடியாத

தன்னுடைய

முறிந்த சிறகுகள் நூலில்

இப்படி எழுதியிருப்பார்

”ஓ! பெய்ரூட் நகரில்

சிதறிக்கிடக்கும்

இளம்பருவத்து நண்பர்களே

பைன் மரக்காட்டிற்குப்

பக்கத்தில் இருக்கும்

அந்தக் கல்லறையைக்

கடந்து செல்லும்போது

அமைதியாய் மெல்ல

நடந்து செல்லுங்கள்

அங்கே

ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்

என்னுடைய செல்மாவை

தொந்தரவு செய்யாதீர்கள்”

என்ற இந்த வரிகளை

மனப்பாடம் செய்யாதவன்

இந்த நூற்றாண்டில்

இல்லையென்றே சொல்லிவிடலாம்

ப்படிப்பட்ட

அந்த அழகிய பெய்ரூட்

தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டிருக்கும்

குண்டுகளால் அதிர்ந்து கொண்டேயிருக்கிறது

அழகிய அந்தப்

பைன் மரக்காடுகள்

எறியப்பட்டுக் கொண்டிருக்கும்

ஏவுகணைகளால் எரிந்து கொண்டேயிருக்கிறது

கல்லறைகளில்

ஆழ்ந்த உறக்கத்தில்

இருப்பவர்களை மட்டுமல்ல

வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர்களையும்

தொந்தரவுக்குள்ளாகிறது யுத்தம்

பாலஸ்தீனத்தின் இரத்தம் குடித்தும்

அடங்காத அந்த அட்டைகள்

லெபனானின் இரத்தம்குடிக்க

விரைந்து கொண்டிருக்கின்றன

கிடைத்ததை எடுத்துக்கொண்டு

தேசத்தின் ஒருமுனையிலிருந்து

இன்னொரு முனைக்கு

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள

ஓடிக்கொண்டிருக்கும்

லெபனானின் மக்களைப்

பார்க்க முடியவில்லை என்னால்

ஜிப்ரான் இருந்திருந்தால்

வார்த்தைகளில் கசிந்திருப்பார்

குழந்தைகளும் பெண்களும்

நிறைந்திருக்கும் குடியிருப்புப் பகுதிகள்

எப்படி

யுத்தத்திற்கான இடமாகும்?

என்ற கேள்விகள்

என்னைத் தொந்தரவு செய்கின்றன

இனி முடிவுசெய்ய வேண்டியது

அந்த யுத்த வெறியர்களல்ல

இரத்தம் குடிக்கும் அட்டைகளல்ல

நீங்கள்தான்

நீங்கள்தான்

நீங்களேதான்

குண்டுகளா

கவிதைகளா

என்ன வேண்டுமென்பதை

முடிவு செய்யுங்கள்!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 03/10/2024 - 8:16 PM

அழகிய லெபனானைக் காட்சிப்படுத்தி அதன் மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து உலகப் போர் மூளும் சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் மேலிடுவதையும் உணர்த்தியுள்ள கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

வாசியுங்கள் தோழர்களே.

Reply

Leave a Comment