கம்யூனிஸ்ட் என்ற சொல்

சில சந்திப்புகள்

இதயத்தில்

கோடிப் பூக்களைக்

கொட்டிவிட்டுச் செல்லும்

சில உரையாடல்கள்

நாடி நரம்புகளிளெல்லாம்

நம்பிக்கையை

ஊற்றிவிட்டுச் செல்லும்

அப்படி

ஒரு சந்திப்பை

அப்படி

ஓர் உரையாடலை

இப்போது உங்களிடம்

பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்

 

இரண்டு நாட்களுக்கு முன்னால்

மாலை வீடு திரும்புவதற்காக

எப்போதும் காத்திருப்பதைப் போல

கோடம்பாக்கம்

இரயில் நிலையத்தில்

அங்கும் இங்கும் நடந்தபடி

காத்திருந்தேன்

ஒரு கடைக்குள்ளிருந்து

”தோழர்” என்ற குரல்

அழைக்க

அருகில் சென்றேன்

”நீங்கள் கம்யூனிஸ்ட் தானே?”

ஆம் என்றேன்

”பாலஸ்தீனத்திற்காக

காத்திருக்கும் சாவிகள் புத்தகம்

எழுதியது நீங்கள் தானே?”

ஆம் என்றேன்

அவ்வளவுதான்

அன்பை அள்ளிக்கொடுத்தார்

அள்ளிஅள்ளிக் கொடுத்தார்

பாரமேயில்லை

பெற்றுக்கொண்டேன் முழுவதுமாக

”இதே இரயில் நிலையத்தில்

பத்து வருடங்களுக்கும் மேலாக

கடை வைத்திருக்கிறேன்

பத்து வருடங்களாகவும்

உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”

என்று சொல்லி

கரம்பற்றிக் கொண்டார் வாஞ்சையாக

”உங்கள் புத்தகம்

கிடைக்குமா தோழர்?” என்றார்

மறுநாள் புத்தகம் கொடுத்தேன்

வாசிக்கிறேன் தோழர்

என்று சொல்லிவிட்டு

”கம்யூனிஸ்ட்களின் மீது

எப்போதும் எனக்கு

அளவு கடந்த அன்பும்

அளவு கடந்த மரியாதையும்

இருக்கிறது தோழர்”

என்று சொன்னவர்

சிறிதுநேரம் இடைவெளிவிட்டு

”கம்யூனிஸ்ட்”

என்று

அழுத்தமாகச் சொல்லிக்கொண்டே

இரண்டு கைகளையும்

என்னை நோக்கி நீட்டினார்

ஒருகணம்

விளங்கவில்லை எனக்கு

கடைக்குள்ளிருந்து

இன்னும் கொஞ்சம் பக்கம்வந்து

”கம்யூனிஸ்ட்”

என்று

அழுத்தமாகச் சொல்லிக்கொண்டே

இரண்டு கைகளையும்

என்னை நோக்கி நீட்டினார்

தோழர்களே

இரண்டு கைகளிலும்

மொத்த முடிகளும் எழுந்துநின்று

புல்லரித்துப் போயிருப்பதைப் பார்த்தேன்

அந்தக் கைகளை

அழுத்தமாகப் பற்றிக்கொண்டேன்

 

கம்யூனிஸ்ட் என்ற சொல்

அந்த முகத்திலும் கூட

பேரொளியைப் படரச் செய்திருந்தது

அந்த இரவிலும்

அந்த இரயில் நிலையத்தை

ஒரு பெருஞ்சூரியன்

ஒளிரச் செய்து கொண்டிருந்ததை

உணர்ந்தேன் நான்

கடகடகடவென

கடகடகடவென

கடகடகடவென

வேகமாகச் சென்ற

ஒரு இரயிலின்

சத்தத்தையும் தாண்டி

சர்வதேச கீதம்

எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது

எப்போதும்

எந்த நிலையிலும்

நம்பிக்கை இழக்காதவன் நான்

ஆனாலும்

அற்புதமான

அந்த மனிதனைச் சந்தித்தது

இன்னும் எனக்குள்

நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது

என்னருமைத் தோழர்களே

என்னருமைக் கம்யூனிஸ்ட்டுகளே

காலம்

உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது

முன்னேறிச் செல்லுங்கள்

முன்னேறிச் செல்லுங்கள்!

 

ஜோசப் ராஜா

11.09.2025

(கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தோழர்.சதீஷிற்கு சமர்ப்பணம்)

Related Articles

Leave a Comment