கடைசி அணைப்பு

கடைசி அணைப்பு

கண்களைக் கலங்கச்செய்யக் கூடியது

கடைசி முத்தம்

இதயத்தை இரணமாக்கக் கூடியது

கடைசி வார்த்தை

வாழ்வெல்லாம் எதிரொலிக்கக் கூடியது

பாருங்கள்

பாலஸ்தீனத்தின் குழந்தைகளை

பாருங்கள்

பாலஸ்தீனத்தின் தாய்மார்களை

உயிரற்ற கனவுகளைச்

சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள்

உயிரற்ற ஆசைகளைச்

சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள்

உயிரற்ற நம்பிக்கைகளைச்

சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள்

உயிரற்ற எதிர்காலத்தைச்

சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள்

உயிரற்ற குழந்தையைச்

சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள்

 

தாங்கமுடியாத

மானுட துயரத்தையன்றி

ஏற்றுக்கொள்ளமுடியாத

மானுட இழப்பையன்றி

ஒரு யுத்தம்

எதைக் கொடுத்துவிடும்

என்று நினைக்கிறீர்கள்

இதுவரையிலும்

நடந்த ஒவ்வொரு யுத்தமும்

இழப்பைத் தவிர

வேறெதையும் கொடுக்கவில்லை

கண்ணீரைத்தவிர

வேறெதையும் காட்சிப்படுத்தவில்லை

இதுவரையிலும்

இந்த உலகத்தின் கண்களுக்கு

காட்டப்பட்ட

யுத்தங்களைப்பற்றிய

எத்தனையோ புகைப்படங்கள்

அதைத்தான்

அந்த வலியை மட்டும்தான்

அந்த வேதனையை மட்டும்தான்

இப்போதுவரையிலும்

சொல்லிக் கொண்டிருக்கின்றன

 

இந்த ஆண்டின்

சிறந்த புகைப்படமாகத்

தேர்ந்தெடுக்கப்பட்ட

இந்தப் புகைப்படத்தை எடுத்த

பாலஸ்தீன நாட்டைச்சேர்ந்த

முப்பத்திஒன்பது வயதான

முகம்மது சலேம் சொல்கிறான்

சொல்லமுடியாத

அந்த வேதனையை

ஒரு புகைப்படத்தின் வழியாக

இந்த உலகத்திற்குச்

சொல்ல நினைத்தேன் என்று

இப்படிப்பட்ட புகைப்படங்களும்

இப்படிப்பட்ட கவிதைகளும்

யுத்தத்தின் வேதனையை

உலகிற்குச் சொல்லத்தான் செய்கின்றன

இப்போது

என்னுடைய கேள்வியெல்லாம்

இந்த உலகம்

வேதனைப்படுகிறதா இல்லையா

என்பதுதான்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 22/04/2024 - 3:22 PM

போர் பாதிப்புக்களை அன்றாடம் எண்ணி எண்ணிக் கவலைப்பட்டு கவிதைகளை வடிப்பவர் கவிஞர் ஜோசப் ராஜா.

அவ்வாறு எழுதியுள்ள “கடைசி அணைப்பு” கவிதை நெகிழ்ச்சிக் கவிதை.

அத்தகைய நெகிழ்ச்சி நமக்கும் ஏற்படும்.‌ அதற்கான
கவிதை வாசிப்பும் மனித நேயமும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

வாசியுங்கள்
கண்ணீர் சிந்துங்கள்
நீங்களும் கவிதைகளை
கட்டுரைகளை
இன்ன பிற படைப்புகளைப் படைக்கலாம்.

Reply

Leave a Comment