ஒவ்வொரு உதடுகளிலும் உயிர்த்தெழுவாய் நீ

படம் : திரையிசைக் கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

யாருமற்ற இரவை

நிசப்தமான இரவை

முற்றும் முழுவதுமாக

நிறைத்திருக்கிறாய் நீ

எல்லாத் திசைகளிலிருந்தும்

என் காதுகளை நோக்கி

எழுந்து வருகிறது உன் குரல்

கடலின் அலைகளைப் போல

ஓய்வே இல்லாமல்

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

காற்றின் இயக்கத்தைப் போல

இடைவெளியே இல்லாமல்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது

இந்த நடுநிசியில்

மெல்லிய காற்றில்

மேனியில் இறங்கும்

பனியைப் போல

ஸ்வரங்களோடும் தாளங்களோடும்

உந்தன் ஒப்பற்ற குரலால்

ஆன்மாவின் ஆழத்திற்குள்

இறங்குகிறது உன்னுடைய இசை

பறவையின் சிறகைப் போல

காற்றில் அலைந்து கொண்டிருக்கிறேன்

எடையில்லாப் பொருளைப் போல

தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறேன்

இசையால் நிறைந்திருக்கிறது இந்த அறை

இசையால் நிறைந்திருக்கிறது இந்த இரவு

எல்லாக் கருவிகளும் இசையைச் சுரக்கிறது

உன்னுடைய குரலுக்காக காத்திருக்கிறேன்

உன்னுடைய ஆலாபனைகளால்

ஓராயிரம் பூக்கள் மலர்கிறது இதயத்தில்

உன்னுடைய ஆரோகணங்களின் வழியாக

உயரமான சிகரங்களில் எளிமையாக ஏறுகிறேன்

உன்னுடைய அவரோகணங்களின் வழியாக

நீண்ட புல்தரையில் பனி சறுக்குகிறேன்

உன்னுடைய பாடல்களின் வழியாக

வாழ்வின் சோகங்களை தொலைத்து தீர்க்கிறேன்

 

ண்ணிலடங்கா பாடல்கள்

எண்ணிலடங்கா உணர்வுகள்

ஒரு வாழ்வின் ஒவ்வொரு தருணங்களுக்கும்

ஒத்துப் போகும் உன் பாடல்

எல்லாக் காதுகளும் விரும்பும் ஓசை நீ

எல்லா இதயங்களும் விரும்பும் இசை நீ

எத்தனை காதலுக்கு

தூது போயிருக்கும் உன் பாடல்

எத்தனை காதலை

சேர்த்து வைத்திருக்கும் உன் பாடல்

எவ்வளவு கண்ணீரை

துடைத்து எறிந்திருக்கும் உன் பாடல்

எவ்வளவு காயங்களை

ஆற்றுப் படுத்தியிருக்கும் உன் பாடல்

எத்தனை பிரிவுகளை

கடந்திடச் செய்திருக்கும் உன் பாடல்

எத்தனை தனிமைகளை

தாங்கச் செய்திருக்கும் உன் பாடல்

மனிதர்கள் நன்றி மறவாதவர்கள்

மறக்க மாட்டார்கள் உந்தன் பாடல்களை

மானுடத்திரள் இருக்கும் வரையிலும்

தலைமுறை தலைமுறைகளாக

கடத்தப்படும் உன் பாடல்கள்

அப்படித்தான்

என் மகள்களுக்கும் நான் பாடுகிறேன்

உன் பாடல்களை

 

முழு வாழ்வு முழுவதும்

உழைத்திருக்கிறாய் நீ

உனக்கு எல்லாம் கொடுத்த சமூகத்திற்கு

முடிந்தவரையிலும் மூச்சைக் கொடுத்திருக்கிறாய்

கொள்வதும் கொடுப்பதும் தானே

கலைஞனுக்கு அழகு

உன் பாடல் முணுமுணுக்கப்படும்

ஒவ்வொரு உதடுகளிலும் உயிர்த்தெழுவாய் நீ

உன் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு திசையிலும் உயிர்த்தெழுவாய் நீ

உன் பாடல் பரிமாறிக் கொள்ளப்படும்

ஒவ்வொரு காதலிலும் உயிர்த்தெழுவாய் நீ

உன் பாடல் நிறைந்திருக்கும்

ஒவ்வொரு சமயலறையிலும் உயிர்த்தெழுவாய் நீ

உன் பாடலால் உடைந்து வழியும்

ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும் உயிர்த்தெழுவாய் நீ

உன் பாடலால் சிலிர்க்கும் ஒவ்வொரு உடலிலும்

உன் பாடலால் ஓளிசிந்தும் ஒவ்வொரு விழியிலும்

உன் பாடலால் பனிசிந்தும் ஒவ்வொரு முகத்திலும்

உன் பாடலால் உறங்கும் ஒவ்வொரு குழந்தையிலும்

உன் பாடலால் இயங்கும் ஒவ்வொரு இதயத்திலும்

உயிர்த்தெழுவாய் நீ

ஒப்பற்ற கலைஞனே

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

உயிர்த்தெழுவாய் நீ  !

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment