ஒளியும் அழகும் உண்மையும்

கவிதைக்கான காரணத் தொடக்கம் : பாலஸ்தீனத்தின் பேரழிவின் உண்மையைச் சொன்ன அல் ஜசீரா செய்திச் சேனலை இஸ்ரேல் அரசாங்கம் தடை செய்திருக்கிறது.

ண்மைகள்

எதற்காகத் தடை செய்யப்படுகின்றன

உண்மைகள்

எதற்காக மூடி மறைக்கப்படுகின்றன

உண்மைகள்

எதற்காகச் சிறையில் அடைக்கப்படுகின்றன

உண்மைகள்

எதற்காகப் படுகொலை செய்யப்படுகின்றன

உண்மைகள்

எதற்காகத் திசைதிருப்பப் படுகின்றன

உண்மைகள்

எதற்காக வெறுத்து ஒதுக்கப்படுகின்றன

பதில்

உங்களுக்குத் தெரிந்ததுதான்

பதில்

உங்களுக்குப் புரிந்ததுதான்

பதில்

உங்களுக்குள் இருப்பதுதான்

ஒருவகையில்

உண்மையின் இரத்தம்

சிந்தப்படும் ஒவ்வொரு பொழுதுக்கும்

நீங்கள் ஒத்துக் கொண்டாலும்

இல்லவே இல்லையென்றாலும்

நீங்கள்தான்

நீங்களேதான்

சாட்சியாக இருக்கிறீர்கள்

 

ங்கள் கண்முன்னால்தான்

இனப்படுகொலைகள்

அரங்கேறிக் கொண்டிருக்கின்றன

உங்கள் கண்முன்னால்தான்

அந்தக் கொடூரமான கொலைகள்

இன்னும் வேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன

குழந்தைகள்

பால்மறவாத குழந்தைகள்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்

இன்னும் பிறக்காத

கருவறைக் குழந்தைகள் என

ஆயிரமாயிரம் குழந்தைகள்

துடிதுடிக்கக் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை

செய்தியாக

வெறும் செய்தியாக கடக்கிறோம் என்பதை

இல்லையென்று சொல்வீர்களா

இதோ

அந்தச் செய்திகளுக்கும் கூட

தடைவிதிக்கும் இஸ்ரேல் அரசாங்கத்தை

எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்

 

ப்படித்தான்

உண்மைகளைக்

குழிதோண்டிப் புதைத்துவிட்டுப்

உரத்த குரலில்

பொய்களைப்

பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்

சர்வாதிகாரிகள்

உங்களைப் போலத்தான்

முட்டாள்களின் வார்த்தைகளை

நம்பிக் கொண்டிருக்கும்

உங்களைப் போலத்தான்

சர்வாதிகாரிகளின் வார்த்தைகளை

நம்பிக் கொண்டிருந்தார்கள்

அந்தக் காலத்தின் மக்கள்

ஆனால்

நீண்டகாலம் நீடிக்கவில்லை

அந்தப் பொய்யான நம்பிக்கை

கடவுளை நிறுத்திப் பார்த்தும்

இனப்பெருமையை இழுத்துப் பார்த்தும்

தேசியவெறியை ஊட்டிப் பார்த்தும்

உண்மையைத் தேடத் தொடங்கினார்கள்

உண்மையை விரும்புகின்ற மக்கள்

உண்மையைத் தேடிக் கண்டடைந்தவர்கள்

சர்வாதிகாரிகளின்

இருள் நிறைந்த

பொய்களுக்கு முன்னால்

ஒளியை

உண்மையின் ஒளியை

எடுத்து வைத்தார்கள்

அந்த ஒளிக்கு முன்னால்

அந்த உண்மைக்கு முன்னால்

பொய்கள் மட்டுமல்ல

சர்வாதிகாரிகளும் கூட

பொசுங்கிப் போனார்கள்

எப்போதும்

உங்களுக்கு ஞாபகப்படுத்துவது

கவிஞனாக என்னுடைய

கடமையென்று நம்புகிறேன்

 

ங்களுக்கும் முன்னால்

மலைபோல் குவிந்திருக்கின்றன

பொய்கள்

உங்களுக்கும் முன்னால்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு விதமாய்ப்

புதுப்புதுப் பொய்கள்

புறப்பட்டு வரத்தான் செய்கின்றன

வாழவேண்டும் என்றால்

வேறு வழியில்லை

பொய்களை எதிர்க்கத்தான் வேண்டும்

வாழவேண்டும் என்றால்

வேறு வழியில்லை

பொய்களை வீழ்த்தத்தான் வேண்டும்

இருளைத் தாண்டி

ஒளியைத் தரிசிக்க

பொய்யைத் தாண்டி

உண்மையைக் கண்டுகொள்ள

அவலத்தைக் கடந்து

அழகை ஆராதிக்க

உங்களுக்கும் ஆசையிருக்கும்

அப்படியென்றால்

போராடத் தொடங்குங்கள்

ஓளிக்காக

அழகிற்காக

உண்மைக்காக!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 03/04/2024 - 4:03 PM

“ஒளியும் அழகும் உண்மையும்” கவிதை மூலம் மீண்டும் கவிஞர் ஜோசப் ராஜா போருக்கெதிரான போர் நடத்த கவிதை மூலம் அறைகூவல் விடுத்துள்ளார்.

படியுங்கள்
பரப்புங்கள் தோழர்களே.

Reply

Leave a Comment