ஒங்கள நம்பிதான வந்தோம்

தெருவில்

படுகொலை செய்யப்பட்டுக்

கிடக்கும்

தகப்பனின்

உடலருகே நின்றுகொண்டு

கதறித்

துடித்துக் கொண்டிருக்கிறாள்

மகள்

அநீதியை எதிர்த்து

ஆக்கிரமிப்பை எதிர்த்துக்

குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்

கொல்லப்பட்டுக் கிடக்கிறார்

அதிகாரத்தின்

அனைத்துக் கதவுகளையும்

தட்டிப் பார்த்துவிட்டு

உண்மையைச் சொல்லி

தான் கொல்லப்படலாம் என்று

உறுதியாகச் சொல்லி

முகநூலில்

காணொளியும் வெளியிடுகிறார்

ஜாஹிர் உசைன்

அதையும் பார்த்த

இந்தச் சமூகம்

அவர் பிணமாகக் கிடக்கும்

காணொளியையும்

பார்த்துக் கொண்டிருக்கிறது

ஒன்றுமில்லை

எல்லாக் காணொளிகளையும்

பார்த்துக் கொண்டிருப்பது போல

அந்தக் காணொளியையும்

பார்த்துக் கொண்டிருக்கிறது

இது நல்லதல்ல

நல்லவர்களெல்லாம் கொல்லப்படுவது

நல்லதல்ல

நில ஆக்கிரமிப்பிற்கு

எதிராகப் போராடுகிறவர்கள்

கல் குவாரிகளுக்கு

எதிராகப் போராடுகிறவர்கள்

கனிமவளக் கொள்ளைக்கு

எதிராகப் போராடுகிறவர்கள்

மணல் திருட்டுக்கு

எதிராகப் போராடுகிறவர்கள்

என

எல்லா நல்லவர்களும்

கொல்லப்பட்டால்

இந்தப் பூமியில்

எஞ்சியிருப்பவர்கள்

யாராக இருப்பார்கள்

இந்த அச்சம்

இந்நேரம் உங்களை

உறங்கவிடாமல்

செய்திருக்க வேண்டும்

படுகொலை

செய்யப்பட்டுக் கிடக்கும்

தந்தையின்

உடலருகே நின்றுகொண்டு

அதிகாரத்தின்

காவலாட்களைப் பார்த்துக்

கடுங்கோபத்தோடு

ஒங்கள நம்பித்தான வந்தோம்

ஒங்கள நம்பித்தான வந்தோம்

ஒங்கள நம்பித்தான வந்தோம்

என்று

அரற்றிக் கொண்டிருக்கும்

அந்த மகளின்

வலி நிறைந்த வார்த்தைகள்

இதயத்தைக்

குத்திக் கிழிக்கின்றன

அந்த மகளுக்கு

அந்த மகளின் கண்ணீருக்கு

அந்த மகளின் கோபத்திற்கு

என்ன பதில்

சொல்லப் போகிறோம்

ஒங்கள நம்பித்தான வந்தோம்

என்ற வார்த்தைகளுக்கு முன்னால்

நீங்கள்

நான் என

எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்

என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment