ஏன் மிதக்கிறோம்

புரிந்துகொள்ள மறுத்தாலும்

புரியாததுபோல நடித்தாலும்

மீண்டும் மீண்டும்மீண்டும்

இயற்கை உணர்த்துவது

உண்மையை

உண்மையை மட்டும்தான்

இயற்கை சீற்றம்

பெருமழை

சூறைக்காற்று என

சொல்வதற்கு

ஆயிரம் இருக்கலாம்

ஆனபோதிலும்

சொல்லாமல்

விடப்பட்ட உண்மை

வெளிப்படாமல் போகுமா

நீர் நிலைகளின் மீது

எழுப்பப்பட்ட நகரம்

நீரில் மிதக்காமல்

என்ன செய்யும்

ஏரிகளின் மீது

கட்டப்பட்ட கட்டிடங்கள்

வெள்ளத்தில் மூழ்காமல்

என்ன செய்யும்

ஆற்றங்கரைகளின் மீது

எழுப்பப்பட்ட பெருநிறுவனங்களைத்

தண்ணீர் சுற்றிவளைக்காமல்

என்ன செய்யும்

திட்டமிடப்படாத

நகர அமைப்பிற்குள்

தொடர்ந்து

பெருகும் கட்டிடக் காடுகள்

மூச்சு முட்டாமல்

என்ன செய்யும்

என்ற உண்மைகள்

என்ற உண்மைகள்

முகத்தில் அறைகிறது

 

தோ

இன்னும் வடியாத

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்

மானுடத் திரளின் கண்ணீர்

கலங்கச் செய்கிறது

இதோ

இன்னும் குறையாத தண்ணீரில்

தத்தளித்துக் கொண்டிருக்கும்

மானுடத் திரளின் புலம்பல்கள்

அதிரச் செய்கிறது

 

ன்பின் கரங்களை

விரியச் செய்யுங்கள்

பாதுகாப்பாக இருப்பவர்கள்

பரிதவிப்பர்களுக்கு கைகொடுங்கள்

ஒருவருக்கு ஒருவர்

உதவிக் கொள்வதன் மூலமாகத்தான்

எத்தனையோ பேரழிவுகளைக்

கடந்து வந்திருக்கிறோம்

இதையும் கடப்போம்

 

னால்

அனுபவித்த துயரத்திலிருந்து

கற்றுக்கொள்வோம்

நாம் கேட்க வேண்டியது

ஒரே கேள்விதான்

ஏன் மிதக்கிறோம்

நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது

ஒரே கேள்விதான்

ஏன் மிதக்கிறோம்

கேள்விகள்தான்

சமூக மாற்றங்களைச்

சாத்தியமாக்கியிருக்கிறது

கேள்விகள்தான்

பெரும் புரட்சிகளை

உந்தித் தள்ளியிருக்கிறது

 

ல்லாவற்றையும்

எதிர்கொள்ள நம்மால் முடியும்

அப்படிப்பட்ட சமூக அமைப்பை

நாம் உருவாக்கும் பட்சத்தில்

தோழமைகளே

இந்த வேளையில்

அன்பையும்

நம்பிக்கையையும்

வலிமையையும்

வாரிக்கொடுக்கிறேன் இதயத்திலிருந்து

பெற்றுக்கொள்ளுங்கள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 07/12/2023 - 10:45 AM

அன்பையும் நம்பிக்கையையும் வலிமையையும் தம் கவிதை வரிகளால் அள்ளிக் கொடுத்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

அவற்றை உடலாலும் உள்ளத்தாலும் வாங்கிப் பரப்புவோம் மனித நேயத்தை.

அதன்மூலம் இயன்றவரை காப்போம் மனிதர்களையும் மனிதத்தையும்.

Reply
Baskaran F T 16/12/2023 - 10:31 AM

அதிகாரமும் ஆசையும் நம்மை மிதக்க வைக்கிறது…..
காடு அழிப்பு மழையை கெடுக்கும்…
வயல் குளங்கள் அழிப்பு நம்மை தண்ணீரில் மிதக்க வைக்கும்……

Reply

Leave a Comment