பயணத்தை முடிவு செய்துவிட்டால் போதும்
எண்ணம் முழுவதும் எதிர்காலத்திற்குச் சென்றுவிடும்
எப்படித் தொடங்குவது பயணத்தை
எப்படித் தொடர்வது பயணத்தை
எப்படி முடிப்பது பயணத்தை
என்ற எண்ணங்கள்
மூளை நரம்புகளின்
இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும்
அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும்
தந்தி அடித்துக் கொண்டிருக்கும்
பயணம் ஒருவகையில்
சுதந்திரத்தை உணரச்செய்யக் கூடியது
பயணம் ஒருவகையில்
புத்துணர்வைக் கொடுக்கக் கூடியது
பயணம் ஒருவகையில்
சிறகுகளை நினைவூட்டக் கூடியது
அதனால் தான்
அதனால் தான்
ஒவ்வொரு உயிரும்
பயணத்தை விரும்புகிறது
குறிப்பாக மனிதர்கள்
பயணிக்க விரும்புகிறார்கள்
சில பயணங்கள்
காயங்களுக்கு மருந்திடும்
சில பயணங்கள்
காதலை மலரச்செய்யும்
சில பயணங்கள்
ஞானத்தைப் பரிசளிக்கும்
சில பயணங்கள்
வாழ்க்கையைப் புரியவைக்கும்
சில பயணங்கள்
மன்னிக்கக் கற்றுக்கொடுக்கும்
சில பயணங்கள்
மறக்கச் சொல்லிக்கொடுக்கும்
நானல்ல
நீங்களுமல்ல
இல்லையென்று யாருமே சொல்லமுடியாது
சில பயணங்கள்
சில அனுபங்களைக்
கொடுக்கத்தான் செய்யும்
கொதித்துக் கொண்டிருக்கும் இதயங்களில்
குளிரை நிறைத்த பயணங்களை
கேள்விப்பட்டிருக்கிறேன்
குழம்பிக் கொண்டிருந்த நெஞ்சங்களில்
விடையை நிறைத்த பயணங்களைக்
கேள்விப்பட்டிருக்கிறேன்
வெறுப்பால் நிறைந்த மனிதர்களை
சில பயணங்கள்
அன்பால் நிறைத்து அனுப்பியிருக்கிறது
பயணங்கள்
புதிய காட்சிகளால் மட்டுமல்ல
புதிய காட்சிகள் உருவாக்கிடும்
புதிய உணர்வுகளாலும் நிறைக்கப்படுகின்றன
வீடு சிறையாகத் தோன்றும் சிலநேரம்
யோசிக்கவே கூடாது வெளியேறிவிட வேண்டும்
மீண்டும் வீட்டிற்கு வந்துவிடலாம்
”அப்டியே வெளில எங்கயாவது போய்ட்டு வரலாமா?”
”காத்தாட கொஞ்சம் நடந்துட்டு வருவோமா?”
”அந்த மலையுச்சில ரெண்டுபேரும் கையப்பிடிச்சிட்டு நடந்தா
எப்டி இருக்கும்?”
”அப்டியே கடலப் பாத்துக்கிட்டு ஓன் தோள்ல
சாய்ஞ்சிருந்தா போதும்னு இருக்கு!”
என்ற குரல்கள்
எப்போதும் அடக்கக்கூடாத குரல்கள்
எப்போதும் தவிர்க்கக்கூடாத ஆசைகள்
அது அவனுக்கும் புரிந்திருந்தது
அதனால் தான்
அவர்களுக்குப் பிடித்த
அநேகமுறை அவர்கள் சென்று வந்திருந்த
அந்த மலையுச்சிக்குப் போகலாம் என்று கேட்டதும்
எதுவும் சொல்லாமல் ஒத்துக்கொண்டான்
இரண்டுபேர் மட்டும் பயணிக்க
ஏற்பாடுகள் என்ன இருக்கப்போகிறது
புறப்பட்டு விட்டார்கள் மலையை நோக்கி
மலையை நினைத்தவுடன் குளிரத் தொடங்கியது
கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார்கள்
இரவு முழுக்கப் பயணித்தாக வேண்டும்
விடியும்போது
கட்டிடக் காடுகளிலிருந்து
கந்தக நெடியிலிருந்து
அடைந்து கிடக்கும் அடுக்ககச் சிறையிலிருந்து
சிரிக்க மறந்த மனிதர்களின் அருகாமையிலிருந்து
கைப்பேசிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
பேச மறந்தவர்களிடமிருந்து
தப்பித்து விடலாம் என்ற எண்ணங்கள்
இதயத்தை தட்டித்தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன
கண்களை மூடிக் கணவனின் தோளில்
சாய்ந்து கொண்டாள்
அவளுக்காக உயரத்தைக் குறைத்துக் கொண்டான்
காதலித்துக் கொண்டிருக்கும் போது
பேருந்துப் பயணத்தில்
தோள்களில் சாய்ந்து தூரங்களை மறந்த
ஞாபகங்கள்
எதிர்காற்றில் அலைந்து கொண்டிருக்கும்
முடிகளைப்போல
எல்லாப் பக்கமும் அலைந்து கொண்டிருந்தன
சில நேரங்களில்
அவன் வருகைக்காக இரவெல்லாம் விழித்திருந்து
தோள்களில் தூக்கிப்போனதை நினைத்து
உள்ளூர மெல்லச் சிரித்துக் கொண்டாள்
தோள்களில் அவளைத் தாங்கிக்கொண்டு
அவன்மட்டும் என்னசெய்யப் போகிறான்
அவளைப் பார்த்த முதல் நாளை
அவளிடம் பேசிய முதல் வார்த்தையை
அவளிடம் காதலைச் சொன்ன அந்த நொடியை
அவள் சம்மதம் சொன்ன உன்னதத் தருணத்தை
நினைத்து நினைத்து
நினைத்து நினைத்து
காதலில் மூழ்கிக் கொண்டிருந்தான்
கலைந்த முடிகளை ஒதுக்கியபடி எழுந்தவள்
அவன் தலையைப் பிடித்துத் தோளில் சாய்த்துவிட்டு
தொலைதூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நிலவோடு
உரையாடத் தொடங்கினாள்
நிலா அவளின் வார்த்தைகளுக்குச்
செவிசாய்க்கத் தொடங்கியது
காரணங்கள் ஏதுமில்லாமல்
அவனைப் பார்த்ததும் காதலிக்கத் தொடங்கியதை
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும்
அவனுக்காக அவன் காதலுக்காக
அள்ளிஅள்ளிக் கொடுத்ததை
பரவசம் நிறைந்த வார்த்தைகளால் சொல்லச்சொல்ல
கேட்டுக்கொண்டிருந்த நிலா
இன்னும் ஒளிரத் தொடங்கியது
ஆனால் காதலென்பது மகிழ்ச்சி மட்டுமல்ல
துயரமும்தான் என்றவள் சொல்லும்போது
நிலா மேகத்திற்குள் மறைந்து கொண்டிருந்தது
காதலென்றால் என்னவென்று கேட்டால்
அவள் போராட்டம் என்றுதான் சொல்லுவாள்
காதலித்ததை விடவும்
காதலித்ததை விடவும்
அந்தக் காதலுக்காக
அவள் போராடியதுதான் அதிகம்
ஆம் போராடியதுதான் அதிகம்
அவன் வேறு சாதி என்றார்கள்
அவனைக் காதலிக்கிறேன் என்றாள்
அவனுக்கும் நமக்கும்
ஏணிவைத்தாலும் எட்டாது என்றார்கள்
அவனையே காதலிக்கிறேன் என்றாள்
எவ்வளவு அடிவிழுந்திருக்கும்
எண்ணிப்பார்க்கவில்லை
எவ்வளவு வசைச்சொற்கள்
எதற்கும் கலங்கவுமில்லை
காதலில் உறுதியாக இருந்தாள்
நீண்டநாள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும்
ஓயாமல் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தாலும்
எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை
அந்த மலையைப் போல
சில நேரங்களில்
அந்த மலையைக் காட்டிலும் உறுதியாக இருந்தாள்
வேறு வழியில்லாமல்
ஒரு நல்ல நாளில்
ஒழிந்து போ என்று காதலனோடு அனுப்பப்பட்டவள்
இரண்டு வருடமாகியும்
இன்னும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை
கதைகேட்டுக் கொண்டிருந்த நிலா
கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தது
தன்னைவிடவும் ஒளிசிந்திக் கொண்டிருக்கும்
அந்த அழகு முகத்தை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது நிலா
யாருக்கும் தெரியாமல்
அவள் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு
விடைபெற்றுச் சென்றது நிலா
மலையின் அடிவாரத்தில் நின்றுகொண்டு
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்
மலை கொஞ்சம் சிறுத்துப்போனதுபோல் இருந்தது
கற்களை ஏற்றிக்கொண்டு சாரைசாரையாக
வண்டிகள் இறங்கிக் கொண்டிருந்தது
இதயத்தைப் பிடுங்கி எடுத்துச்செல்வது போலிருந்தது
என்ன செய்ய
தன்னுடய தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும்
மகத்தான முட்டாள்களிடம்
வேறென்ன எதிர்பார்க்க முடியும்
மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறார்கள்
அந்த மலைக்காற்று
அந்த மலைவாசனை
அந்தப் பசுமைக் காட்சிகள்
அந்தக் குளிர்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என
அவர்களை இன்னும் நெருக்கமாக்கிக் கொண்டிருக்கிறது
இறந்தகாலம் இல்லை
எதிர்காலம் இல்லை
வாழ்விற்கான போராட்டங்கள் இல்லை
அவர்களுக்கு முன்னால் அதைச்செய்திட வேண்டும்
இவர்களுக்கு முன்னால் இதைச்செய்திட வேண்டும்
என்ற அற்பத்தனங்கள் எதுவுமில்லாமல்
அந்த நொடியை அந்தக் குளிரை
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்
பரந்து கிடக்கும் அந்தப் பச்சைப் புல்வெளி
எப்போதும் உட்காரும் இடத்தில் உட்கார்கிறார்கள்
வானத்தின் நீலமும்
மலையின் பசுமையும் தவிர எதுவுமில்லை
இரண்டே நிறங்கள்தான்
அழகைச் சொல்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன
அவள் விரும்பியதுபோல
அந்த ஒத்தையடிப்பாதையில்
கரம்கோர்த்து நடந்து செல்கிறார்கள்
அப்படியே இந்தப் பாதை வானத்தில் ஏறிவிடுமோ
என்றுதான் தோன்றும் எல்லோருக்கும்
அவனுக்குப் பிடித்த அந்த ஆறோடு
அவர்களும் நடந்து பார்த்தார்கள்
அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி
வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டேயிருந்தது ஆறு
அன்னையின் மார்பில் பாலறுந்தும் குழந்தையைப்போல
ஆற்றுநீரைப் பருகினார்கள் இருவரும்
பறவைகளைப் போல பறந்துகொண்டிருந்தார்கள்
அந்த மலைச்சிகரத்தில்
எங்கெங்கு செல்ல வேண்டுமோ
அங்கெல்லாம் சென்று வந்தார்கள்
அவர்கள் காதலைப் பகிர்ந்து கொண்ட
அந்தக் கூழாங்கள் ஆறுதான் கடைசி

கூழாங்கள் ஆற்றில் எதையும் மறைக்க முடியாது
கண்ணாடிபோல் காட்டக்கூடியது
அன்று காதலைக் காட்டியது போல
இன்று துயரத்தைக் காட்டிக் கொண்டிந்தது
அழுதழுது வீங்கியிருந்த அவனுடைய கண்கள்
உப்புத்தண்ணீர் வழிந்து
கோடுகளாயிருக்கும் அவளுடைய கன்னங்கள்
ஆயிரமாயிரம் வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும்
அந்தக் கூழாங்கள் ஆற்றிற்குள்
ஆயிரமாயிரம் வருடங்களாக
தெரிந்து கொண்டிருக்கும் கூழாங்கற்களைப்போல
இப்போது இரண்டு இதயங்களும்
தெரிந்து கொண்டிருக்கின்றன
வலியால் துடித்துக் கொண்டிருக்கும் இதயங்களை
கூழாங்கல் ஆறு ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது
குழப்பத்தில் நின்று கொண்டிருக்கிறார்களா
முடிவெடுத்துவிட்டுத் தெளிவாக வந்திருக்கிறார்களா
குழம்பிப் போயிருக்கிறது கூழாங்கல் ஆறு
மனித இதயத்தின் வேதனையைப்
புரிந்துகொள்ள முடியாதவளா என்ன
இருவரையும் இறுக அணைத்துக் கொள்கிறாள்
அந்த ஆதித்தாய்
அந்த வனாந்திரமெல்லாம் எதிரொலிக்கிறது
ஆதாம் ஏவாளின் அழுகை
அந்த உடைந்த இதயங்களின் பாடலை
அந்தப் பறவைகள் வாங்கிக்கொண்டு
தொலைதூரத்திற்குப் பறந்து செல்கின்றன
துயரப்படுவதற்கே பிறந்திருக்கிறார்கள் போல
இந்த மனிதர்கள் என்று
தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் இரண்டு குருவிகள்
தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன
பிரபஞ்ச இயக்கம் நின்றுபோனதைப் போல
நிசப்தம் நிலைகொள்ளத் தொடங்கியது
”இங்கருந்தே பிரிஞ்சி போய்ருவோமா!”
என்ற அவளின் உறுதியான வார்த்தைகள்
கூழாங்கல் ஆற்றின்மீது குண்டை வீசியது
காலில்தான் விழவில்லை அவன்
அவள் கைகளைப் பற்றிக்கொண்டு
”மலையிலிருந்து இறங்கிரலாமே” என்று கெஞ்சினான்
வரம் கேட்க நிற்பவனைப்போல வளைந்து நின்றான்
கொடுத்தே பழகியவள் கடைசி வாய்ப்பையும் கொடுத்தாள்
பயணம் தொடங்கியது செங்குத்தாக
அதே காற்று
அதே காட்சிகள்
அதே வாசனை
அதே குளிர்
எதுவும் இணைக்கவில்லை
இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தார்கள்
இருவர் பார்வையும்
வெளியில் பதிந்திருந்தாலும்
உள்ளுக்குள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்
இந்த அருகாமை இனி வாய்க்காது என்பது
இருவருக்குமே நம்ப முடியாததாகத்தான் இருந்தது
வாழ்க்கையைத் தொடங்கும்போது இருந்த காதல்
கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கியதற்கான காரணம்
இருவருக்குமே இன்னும் புரியவில்லைதான்
அன்பு எங்கே அறுபட்டுப் போனது
காதல் எங்கே காணாமல் போனது
இத்தனை கோபம் எங்கிருந்து வந்தது
சகிப்பும் மன்னிப்பும் எங்கே தொலைந்தது
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
யாரும் யாரையும் பிரிந்து போகமாட்டார்கள்
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
யாரும் யாரையும் குற்றம் சொல்லமாட்டார்கள்
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
மனித இதயங்களுக்குத் தீர்ப்பெழுதாமல்
நீதிமன்றங்கள் மெளனமாகியிருக்கும்
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளையும்
தூங்கச் செய்வதற்கான மாத்திரைகளையும்
கோடிக்கணக்கில் தயாரித்து வைத்திருப்பவர்கள்
எதுவும் விற்காமல் நஷ்டத்தைச் சந்தித்திருப்பார்கள்
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
போலிச் சாமியார்களின் ஆன்மீகக் கூடாரங்கள்
ஆளில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்துவிட்டால்
மனித இதயங்கள் குண்டுவெடித்துச் சிதறாமல்
அமைதியாக இருக்கும்
வெப்பத்தின் உணர்வு மேலோங்கத் தொடங்குகிறது
இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்
இறங்கிவிட்டார்கள் முழுவதுமாக
இறுகக் கரம்பற்றிக் கொண்டார்கள்
விரல்கள் ஒடிந்துவிடும் போலிருந்தது இருவருக்கும்
என்ன செய்ய
இவ்வளவு நேரமும் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தது
உடைந்த கண்ணாடியைத்தான்
இவ்வளவு நேரமும் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது
சோக கீதத்தைதான்
காதலில் தொடங்கிய வாழ்க்கை கசப்பில் முடிகிறது
இரண்டு வருடங்கள்தான்
இரண்டு பேராலும் இணைந்திருக்க முடியவில்லை
இந்தச் சமூகம் வாழ்வதற்கான சமூகமில்லை
அப்படியென்றால் வாழ்வதற்கான அந்தச் சமூகம் எது
இந்தச் சமூகம் சேர்ந்திருப்பதற்கான சமூகமில்லை
அப்படியென்றால் சேர்ந்திருப்பதற்கான அந்தச் சமூகம் எது
கேள்விகள் கேட்பதற்கோ
விடைகளைத் தேடுவதற்கோ
யாருக்கும் நேரமில்லை
உண்மையிலேயே இந்தச் சமூகத்தில்
காதலோடு இருப்பவர்கள்
போற்றுதலுக்குரியவர்கள் என்ற குரல்கள்
உடைந்த இதயங்களிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன
கடைசிப் பார்வை
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஓராயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தாலும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்
கடைசி முத்தம்
ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்
ஓராயிரம் முரண்கள் உள்ளுக்குள்ளிருந்தாலும்
ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்
கடைசி அணைப்பு
ஒருவரையொருவர் இறுகப் பற்றிக்கொள்கிறார்கள்
ஓராயிரம் இறுக்கங்கள் இருந்தபோதிலும்
ஒருவரையொருவர் இறுகப் பற்றிக்கொள்கிறார்கள்
இணையாமல் பிரிந்துசெல்லும் இரண்டு பாதைகள்
முதலில் அவள் தொடர்ந்து அவன்
வேகம் குறைந்தால் திரும்ப நேருமோ
என்ற வேகத்தில் விரைந்து செல்கிறார்கள்
வேறென்ன செய்ய
என்னுடைய தோழர் நெருடாவின் கவிதையைக்
காற்றில் எழுதுகிறேன் இப்படியாக
“பிரிவுதான் காதலின் திருவிழா
ஏனென்றால்
அது மீண்டும் காதலிக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது.”
ஜோசப் ராஜா