எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வாய்த்திருக்கலாம் அந்தக் காலம்.
நான் மட்டுமல்ல, எல்லோரும் கடந்திருக்கத்தான் வேண்டும், காலம் நகர மறுத்த அந்தத் தருணங்களை.
கடிகார முள் சுற்றுகிறதா, இல்லையா என்ற சந்தேகம்!
நாட்காட்டி கிழிக்கப்படுகிறது சரி, நாட்கள் நகர்கிறதா இல்லையா என்ற சந்தேகம்!
இந்த உலகம் நம்முடைய பாதையில் மட்டும்தான் முட்களை அள்ளிக் கொட்டுகிறதா?
இல்லை, சிரித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் ஒவ்வொருவரும் முட்களின் மீதுதான் நடந்து கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம்!
அன்பின் இதயத்தைப் புரிந்துகொள்ளாமல், இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள்?
மனிதனை நேசிக்காமல் இந்த மனிதர்கள் எதற்காக மதத்தையும், சாதியையும் பைத்தியக்காரர்களைப் போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபம்!
இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தும் எப்படி இந்த முதலாளித்துவச் சமூகம் இத்தனை காலம் நீடித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி!
ஒரு காதலுக்காகக் காத்திருப்பதும், ஒரு புரட்சிக்காகக் காத்திருப்பதும் உண்மையிலேயே ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தாலும், காத்திருப்பின் வலி தாங்க முடியாததாகத்தான் இருக்கிறது.
வாழ்க்கை அவ்வளவு எளிமையாக இல்லைதானே?
அப்படியாக எனக்கும் கூட வாழ்க்கை எளிமையாக இல்லாத காலமொன்று இருக்கத்தான் செய்தது.
ஒரு வறண்ட குளத்தைப் போல, வாழ்வின் ஒட்டுமொத்த வசந்தங்களும் வறண்டிருந்த நேரம்.
இப்போதும் ஞாபகமிருக்கிறது, அந்த வானத்தில் நட்சத்திரங்களே இல்லாமல் இருந்தது. நிலவும் ஒளிசிந்தாமல் ஒளிந்திருந்தது.
துயரங்களிலிருந்து தப்பிக்க இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இசை கைவிடவில்லை! தூய ஒலியால் என்னைத் தழுவிக்கொண்டது மட்டுமல்லாமல், தாயைப்போல அரவணைத்துக் கொண்டது.
மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, இசையாலும், கவிதையாலும்கூட பிழைத்திருக்க முடியும் என்று என்னை நானே சோதித்து உணர்ந்து கொண்டிருந்த நேரம்.
காதலை அடைவதற்கு இவ்வளவு போராட வேண்டுமா என்று கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டே, ஒரு காதலன் போராளியாக மாறிக்கொண்டிருந்த காலம்.
இப்போதா இல்லை எப்போது இதயம் உடைந்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறதா என்று யோசித்ததெல்லாம் அந்த நேரம்தான்.
நமக்கு முன்னால் இருக்கும் தடைகளைப்போல், எத்தனை பேருக்கு எவ்வளவு தடைகள் தகர்க்கப்படாமல் இருக்கும்?
இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன், கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
கேவலம் இந்தச் சமூகத்திற்காகக் காதலைப் பலிகொடுத்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள், இரவைக் கண்ணீரால் மூடிக்கொண்டிருப்பார்களா?
காதலுக்கு எதிரான சமூகம் மானுட குலத்திற்கே எதிரானதுதான் என்று பிரகடன் செய்வேன் நான்.
பிரிவைப்பற்றித் தோராயமாக இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நமது கவிஞர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? மானுட உறவு ஒரு பிரிவில்தான் வேர்பிடிக்கத் தொடங்குகிறது.
ஆனால் பிரிவின் அந்த நேரத்தைக் கடப்பதுதான், கடப்பதுதான், கடப்பதுதான் கனக்கச் செய்யக் கூடியது!
இதயத்தின் கனம் கூடியிருந்த அப்படியொரு நாளில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.
கடைசியாக ஒரு தொலைதூரம் பயணத்தை முடிவு செய்து தொடர் வண்டியில் ஏறினேன்.
எதிர்க்காற்று! வேகமாக வீசிக்கொண்டிருக்கும் எதிர்க்காற்று!
அடர்ந்து வளர்ந்திருக்கும் முடிகளைக் கலைத்துப்போடுகிறது.
முடிகளை மட்டுமல்ல, இதயத்தை நிறைத்திருந்த துயரங்களையும் துரத்தியடிக்கிறது.
இப்போது கண்கள் மரங்களையும் செடி கொடிகளையும், பரந்த சமவெளிகளையும், குளங்களையும், உழைக்கும் மனிதர்கள் நிறைந்த வயல் வெளிகளையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.
பண்பலை, பாடலைக் காதின் வழியாக இதயத்தில் இறக்கிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் விருப்பப்பட்ட பாடல்களை சேமித்து வைத்துக் கேட்க முடியாது.
எதிர்க்காற்றில் இதயம் லேசான அந்த நேரத்தில் பண்பலையில் அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது.
ஆலாபனையே ஒருபாதி உயிரைப் பற்றிக்கொண்டது, மீதியைப் பாடல் பற்றிக்கொண்டது.
ஒரு பாடலால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியெல்லாம் இப்போதும் எனக்கு இல்லவே இல்லை. எதுவும் செய்ய முடியும். அந்தப் பாடலும் அன்றைக்கு அப்படித்தான் செய்தது.
இதயத்தில் ஒளிந்திருந்த பறவைகள் அந்தச் சமவெளியை நோக்கிப் பறக்கத் தொடங்கின.
தொடர்வண்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் என்னைப்பார்த்துக் கையசைத்தார்கள். நானும்கூட அவர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தேன்.
அந்தப் பாடல் கிட்டத்தட்ட முழுவதுமாக என்னை உயிர்த்தெழச் செய்திருந்தது. துயரங்களிலிருந்து உயிர்த்தெழுதல் விடுதலைக்குச் சமமானது.
என்னுடைய துயரங்கள் மட்டுமல்ல, எல்லோருடைய துயரங்களும் இல்லாமல் போகவேண்டும். அதற்காக எழுத வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்து கொண்டேன்.
இப்போதும் கூட எதிர்க்காற்றை எதிர்கொள்ள நேர்ந்தால் அந்த நேரத்தை நினைத்துக் கொள்கிறேன்.
இப்போதும் கூட எதிர்பாராத அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாழ்வின் மீதும், மனிதர்களின் மீதும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்கிறேன்.
ஜோசப் ராஜா
