எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்

ரு தேசத்தின்

எல்லைக்கோட்டில் இருப்பதாலேயே

எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்தவள்

அந்த வடகிழக்கின் சகோதரி

பயங்கரவாத ஊடுருவல் என்றுசொல்லி

பாதுகாப்புக் காரணங்கள் என்றுசொல்லி

கொடூரமான சட்டங்கள் கொண்டு

நீண்டகாலமாகச் சிறைப்படுத்தப்பட்டவள்

அந்த வடகிழக்கின் சகோதரி

அந்த மாநிலத்தின் பெண்கள்

பயத்தோடும் படபடப்போடும் கழித்த இரவுகள்

எளிமையாக எண்ணி முடியாதது

ஒவ்வொரு ஆட்சியாளனின் கீழும்

கணக்கற்ற கண்களின் கண்காணிப்பில்

கட்டுப்படுத்தப்பட்டார்கள் அம்மாநிலத்தின் மக்கள்

இயற்கையாகவே பேரழகு கொண்ட

அந்த மாநிலத்தின் ஆன்மா

செயற்கையாய் செயற்கையாகவே

மீண்டும்மீண்டும் சிதைக்கப்பட்டது

பாருங்கள்

குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து

வெளியேவந்து பாருங்கள்

பற்றியெரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர்

பாதுகாப்பான அறைகளுக்குள்ளிருந்து

வெளியே வந்து பாருங்கள்

செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்

என்னுடைய கேள்வி எளிமையானதுதான்

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்

இந்தக் கேள்விக்குள்தான்

உங்கள் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது

இந்தக் கேள்விக்குள்தான்

உங்கள் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது

 

மனித இரத்தத்தை குடிக்கக் காத்திருப்பவர்கள்

பெருகியிருக்கும் காலம்

மனிதக்கறியைப் புசிக்கக் காத்திருப்பவர்கள்

அதிகரித்திருக்கும் காலம்

அதனால்தான் போர்கள்

அதனால்தான் நோய்கள்

அதனால்தான் கலவரங்கள்

அதனால்தான் மரணங்கள்

எந்தவொரு சமூகங்களுக்கு இடையிலும்

சமாதானத்தை உண்டாக்க

ஒருபோதும் முடியாது இவர்களால்

அதனால்தான்

கலவரங்களிலிருந்து என்ன கிடைக்குமென்று

கண்ணயராமல் காத்துக் கிடக்கிறார்கள்

எந்தவொரு இனக்குழுவிற்கு இடையிலும்

இணக்கத்தை உண்டாக்க

எப்போதும் முடியாது இவர்களால்

அதனால்தான்

மரணங்களிலிருந்து என்ன கிடைக்குமென்று

மனந்தளராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

 

மீண்டும் நான் கேட்பதெல்லாம்

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்

கேளுங்கள் எல்லோரும் கேளுங்கள்

உங்கள் மாநிலத்தை நோக்கிக்

கொள்ளிக்கட்டைகள் நீளும் வரையிலும்

காத்திருக்கப் போகிறீர்களா

உங்கள் இரத்தத்தை உறிஞ்ச

இராட்சத அட்டைகள்

படையெடுக்கும் வரையிலும்

பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா

நீண்டகாலக் கணக்குகளும்

நீண்டகால இலாபங்களும்

அணைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

நெருப்புக்குக் கீழே கனன்று கொண்டிருப்பதை

மறந்து விடாதீர்கள்

மீண்டும் ஒரு பெருநெருப்பு

பற்றிப் படராது என்பதற்கு

எந்தவொரு உத்திரவாதமுமில்லை

பகைமையை வளர்த்துவிட்டு

பதவிகளைப் பெறுகிறவர்கள்தான்

ஒவ்வொரு நெருப்புக்குப் பின்னாலும்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்

பிணங்களைக் குவித்தாவது

அதிகாரத்தை அடைந்துவிடத் துடிப்பவர்கள்தான்

ஒவ்வொரு நெருப்புக்குப் பின்னாலும்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்

அடங்காத அவர்களின் அதிகாரப் பசியையும்

குறையாத அவர்களின் மனிதகுல விரோதத்தையும்

புரிந்துகொள்ள முடிகிறது

எனக்குப் புரியாததெல்லாம்

கோடிக்கணக்கான கள்ள மெளனமும்

கோடிக்கணக்கான கனத்த அமைதியும்தான்

 

பிரிக்க நினைப்பவர்களை

சேர்ந்து எதிர்க்க வேண்டிய காலமிது

துண்டாட நினைப்பவர்களை

இணைந்து விரட்ட வேண்டிய காலமிது

ஒவ்வொரு போர்களிலும்

முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது

ஒவ்வொரு கலவரங்களிலும்

முதலாளித்துவம் நிலைத்துக் கொண்டிருக்கிறது

காதுள்ளவர்களே கேளுங்கள்

சாதிக்கணக்கு உங்களுக்குத்தான்

அவர்களுக்கோ சந்தை கணக்கு மட்டும்தான்

இப்போதாவது கேட்பீர்களா

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்?

எதற்காக

எதற்காக எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்?

Related Articles

2 comments

முனைவர் பெ.அண்ணாதுரை 10/05/2023 - 5:44 PM

தோழர்/கவிஞர் ஜோசப் ராஜா அவர்களுக்கு வணக்கம்.ஒன்றிய இந்துத்துவ முதலாளித்துவ வர்க்கம், உலக நாட்டு சந்தையில் தான் முன்னணி நாடுகளில் ஒன்றாக வாளர்ந்து விட்டோம் என்ற மமதியில் நம்மையெல்லாம் சுரண்டுவதற்கு பெரும் பரிவோடு நடந்து கொண்டிருக்கிறது.அதனை சிறப்பாக எடுத்துக்காட்டு உள்ளீர்கள் கவிஞரே உங்களை மனதார பாராட்டுகிறேன்.நீங்கள் பாட்டாளி வர்க்க கவிஞன்; இதோ உதயமாய் கொண்டிருக்கிறார் என்ற பெருமகழ்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Reply
பெரணமல்லூர் சேகரன் 12/05/2023 - 9:26 AM

பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்காக
நம்மை உலுக்கும்
கவிதையை வழங்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

இதுவரை பலியான அறுபது உயிர்களை எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியுமா?

இதயம் கனக்கிறது.

ஆளும் வர்க்க கள்ள மௌனம்

கலவரங்களில் குளிர்காயும் குரூர எண்ணம்

என்ன செய்யப் போகிறோம் நாம்?

ஏதேனும் ஒரு வகையில் எதிர்வினை ஆற்றலாமே!

படியுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Comment