கடினமாக உழைத்து
மிகக் கடினமாக உழைத்து
பட்டயக் கணக்காளர் தேர்வில்
வெற்றி பெறுகிறாள் அன்னா
கனவுகளோடு
ஆயிரமாயிரம் கனவுகளோடு
வேலைக்குச் சேர்கிறாள்
உழைப்பை நேசித்தவள்
என்ன செய்யப் போகிறாள்
உழைக்கிறாள்
கடினமாக உழைக்கிறாள்
வேலைநேர முடிந்தும்
வேகவேகமாக உழைக்கிறாள்
விடுமுறை நாட்களிலும் கூட
வேலையே கதியென்று கிடக்கிறாள்
ஓய்வுநேரம் இல்லாமல்
ஓய்வுநாள் இல்லாமல்
ஒர் இளம்பெண்ணின் வாழ்க்கை
வேலைக்குள் புதைக்கப்படுகிறது
ஒர் இளம்பெண்ணின் கனவுகள்
வேலையால் வீழ்த்தப்படுகின்றன
ஒர் இளம்பெண்ணின் ஆசைகள்
வேலையால் அழிக்கப்படுகின்றன
நூற்றியிருபது நாட்கள்தான்
நான்கு மாதங்கள்தான்
அதீத வேலைப்பழுவின்
அழுத்தத்திற்குள்ளாகிய அன்னா
மாரடைப்பால் இறந்து போகிறாள்
அவ்வளவுதான்
நிலைகுலைந்து போகிறது
அன்னாவின் குடும்பம்
அவர்களும்தான்
என்ன செய்ய முடியும்
ஆற்றாமையில்
மகளைப் பறிகொடுத்த பரிதவிப்பில்
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்
இந்தக்
கொடூர மரணத்தைக் குறிப்பிட்டு
இந்த தேசத்தின்
நிதியமைச்சர் சொல்கிறார்
அன்னாவைப் போல
சாகாமல் இருக்க வேண்டுமென்றால்
ஆன்மீகத்தை
அறிந்து கொள்ளுங்கள் என்று
பணிச்சுமையின் பாரத்தைத்
தாங்கிக்கொள்ள வேண்டுமென்றால்
தெய்வீகத்தை
உணர்ந்து கொள்ளுங்கள் என்று
இதோடு இல்லாமல்
இன்னும் ஒருபடி மேலேசென்று
இந்த ஆன்மீகத்தையும்
இந்தத் தெய்வீகத்தையும்
கல்வி நிலையங்களிலேயே
கற்றுக்கொடுக்க வேண்டுமென்கிறார்
ஓ!
என் தேசத்தின் மக்களே
நான் கேட்க விரும்புவதெல்லாம்
நீங்கள்
என்ன சொல்லப் போகிறீர்கள்
என்பதுதான்
பணிச்சுமை
வேலைப்பளு என்றெல்லாம்
பூசிமெழுகக்கூடியதா
அன்னாவின் மரணம்
அப்பட்டமான
உழைப்புச் சுரண்டல் அல்லவா!
இலாபமே குறிக்கோளான
உழைப்புச் சுரண்டலால் நிகழ்ந்த
கொடூரமான மரணமல்லவா!
அன்னாவைப் போல
கோடிக்கணக்கான தொழிலாளர்கள்
இரவும் பாராமல்
பகலும் பாராமல்
உழைத்து உழைத்து
முதலாளிகளின் இலாபத்தை
பெருக்கிக் கொண்டிருப்பதை
இல்லையென்று
சொல்ல முடியுமா?
மீண்டும் மீண்டும்மீண்டும்
உயிரைக்கொடுத்து
உயிரைக்கொடுத்து
உழைப்பவனுக்கு மட்டும்தான்
உபதேசமா?
உழைப்பின் பெயரால்
உயிரை எடுக்கும்
முதலாளிகளை எல்லாம்
உழைப்பின் பெயரால்
உயிரைக் குடிக்கும்
பன்னாட்டு நிறுவனங்களையெல்லாம்
என்ன செய்யப் போகிறீர்கள்?
அவர்கள்
உழைப்புச் சுரண்டலுக்கு
ஆதரவானவர்கள்
அப்படித்தான் பேசுவார்கள்
உழைப்புச் சுரண்டலுக்கு
எதிரானவர்களே
நீங்கள் சொல்லுங்கள்
கல்வி நிலையங்களில்
கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது
ஆன்மீகமா?
தெய்வீகமா?
இல்லை இல்லை
இல்லவே இல்லை
ஓ மாணவர்களே
உழைப்புச் சுரண்டலைப்பற்றித்
தெரிந்து கொள்ளுங்கள்
உபரிமதிப்பைப் பற்றித்
தெரிந்து கொள்ளுங்கள்
ஓ! தொழிலாளர்களே
நீங்கள் இல்லாமல்
பன்னாட்டு நிறுவனம் இல்லை
நீங்கள் இல்லாமல்
தொழிற்சாலைகள் இல்லை
நீங்கள் இல்லாமல்
தகவல் தொழில்நுட்பம் இல்லை
நீங்கள் இல்லாமல்
செயற்கை நுண்ணறிவு இல்லை
ஏன்!
நீங்கள் இல்லாமல்
இந்த உலகமே இல்லை
இனியும் சாகாமலிருக்க
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
இதை அறிந்துகொள்வதுதான்
அறிந்துகொள்ளுங்கள்!
ஜோசப் ராஜா
3 comments
வணக்கம் தோழர் நலம் நலமறிய.. நீண்ட இடைவெளிக்கு பின் தொடர்பில் வருகிறேன். எனக்கான சூழலும் சரியில்லாமல் போனதாகல் தொடர்ந்து இணையத்தை கவனிக்கும் வாய்ப்பும் – வாசிப்பும் குறைந்துவிட்டது. உங்கள் பதிவுகள் இன்னும் சில வாசிக்கப்படாமல் தேக்கத்தில் உள்ளன. அவசியம் வாய்ப்பும் ஓய்வும் கிடைக்கும் பொழுது வாசித்துவிடுவேன். நம்பலாம். ”உழைப்பு” என்பதே இன்று சுரண்டலுக்கானதாக மாற்றப்பட்ட நிலைதான் இருக்கிறது. தனக்கான உழைப்பு என்றில்லாமல் பலரும் பல்வேறு சுயத்தேவைகளுக்காகவும் அதீத எதிர்ப்பார்ப்புகளுக்காகவும் மேலும் மேலும் உழைப்பையே செலுத்தக்கூடியவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அல்லது மாறி இருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் உழைக்கும் உழைப்பு பெரும்பான்மையும் பெரும் முதலாளிகளை இன்னும் முதலாளித்துவச் சிந்தனையாளர்களாக மாற்றவே பயன்படுகிறது. அதனால் சாமானிய மனித சமூகம் இன்னும் இன்னும் உழைப்பை சுரண்டலென தெரிந்தே தராளமாக தரவேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கான விளக்கங்களை இக்கவிதை விவாதப் பொருளாகக் கொண்டதில் மகிழ்ச்சி. மாணவர்கள் என்று மட்டுமில்லை. எனக்காக என் குடும்பத்துக்காக என் மகள்களின் திருமணச் செலவுக்காக அடுத்த தலைமுறைக்காக என்று ஓடி ஓடி உழைத்து – முதலாளித்துவத்தை வளர்த்துவரும் ஒவ்வொருவருக்கும் இக்கவிதை சென்று சேரவேண்டியதுதான்.சிறப்பு தோழர்.
வணக்கம் தோழர், நலம். சுரண்டல் என்பதை முலாம் பூசப்பட்ட வேறு வார்த்தைகளில் சொல்லப் பழக்கப்பட்டிருக்கும் சமூக நிலைமையில், இதைப்பற்றி இன்னும் ஆழமாகப் பேசவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கவிதை இம்மாதிரியான உணர்வுகளையும், இம்மாதிரியான புரிதலையும் கொடுக்க வேண்டுமென்றே எப்போதும் விரும்புகிறேன். எட்டுத்திக்கும் கொண்டுசெல்வோம். சுரண்டலுக்கு எதிராக. நன்றி தோழர். இணைந்திருப்போம்.
ஜோசப் ராஜா
அன்னா எனும் 26 வயது இளம் பெண்ணின் மரணத்தை..இல்லை பன்னாட்டு பகாசூர நிறுவனம் செய்த படுகொலையை.. இந்தியா செரிமானம் செய்துவிட்டது. இப்படித்தான் அரிதான மானுட உயிர்கள் அழிக்கப்படுகின்றன. இலாப வேட்டையில் மூலதனம் எந்த எல்லைக்கும் போகும் என்பதை மார்க்ஸ் அன்றே சொல்லிச் சென்றார். அதைத்தான் தனக்கே உரிய பாணியில் கவிஞர் ஜோசப் ராஜா தமது படைப்பில் சொல்லியுள்ளார். இதை அவரின் கூற்றுப்படி மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.