போதும் போதும்
என்று சொல்லும் அளவிற்கு
இந்தப் பூமியின் மீது
குண்டுகள்
வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன
போதும் போதும்
என்று சொல்லும் அளவிற்கு
இந்தப் பூமியின் மீது
மனித இரத்தம்
சிந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு
யுத்தத்தின் முன்னாலும்
சாதாரண மக்கள்
உழைக்கும் மக்கள்
ஒன்றுமில்லாத மக்கள்
பசியோடும் தாகத்தோடும்
ஒன்றுமில்லாமல்
நின்று கொண்டிருப்பது
நிம்மதியைக்
குலைத்துக் கொண்டிருக்கிறது
யுத்தத்திற்குத்
தப்பித்த மக்கள்
வேறு வழிகளில்
வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
விலைவாசி ஏற்றம்
வேலையிழப்பு
குறைந்த கூலி
எல்லாம் போதாதென்று
பேராசைக்காரர்களின்
வர்த்தக யுத்தம்
எதுவும் மறைவாக இல்லை
முதலாளிகள்
தேசத்தின் அதிபர்களாக
தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்
முதலாளிகளின் துணையோடு
ஆட்சியதிகாரம்
கைப்பற்றப்படுகிறது
உலகத்தின்
ஒட்டுமொத்த வளங்களும்
ஒருசில முதலாளிகளின்
பெருத்த வயிற்றிற்குள்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன
பூமியின் வேதனைகள்
ஒரேமாதிரிதான் இருக்கின்றன
உலகத் தொழிலாளர்களின்
வலிகளும்
ஒரேமாதிரிதான் இருக்கின்றன
நாளை
செங்கொடிகள் பறக்கும்
நாளை
பேரணிகள் நடக்கும்
நாளை
முழக்கங்கள் ஒலிக்கும்
மே தினத்திற்கான
நீண்ட நெடிய போராட்டங்களும்
மே தினத்திற்கான
தன்னலமற்ற தியாகங்களும்
நினைவு கூரப்படும்
உங்களைப்போலவே
நானும் நிறைந்திருப்பேன்
ஆனால் தோழர்களே
அது மட்டும் போதுமா
யுத்தங்களை
உங்களால்தான் நிறுத்தமுடியும்
படுகொலைகளை
உங்களால்தான் தடுக்கமுடியும்
உன்னதங்களை
உங்களால்தான் உருவாக்கமுடியும்
முதலாளித்துவத்தின்
அதிகாரத்திற்கு கீழ்
அழகை இழந்து விட்டது
இந்த உலகம்
அதிகாரத்தைக்
கைப்பற்றுவதைத் தவிர
வேறு வழியில்லை
அதிகாரத்தைக் கைப்பற்றாமல்
சொல்லுங்கள் தோழர்களே
என்ன செய்துவிட முடியும்
அதிகாரத்தைக் கையிலெடுக்காமல்
சொல்லுங்கள் தோழர்களே
என்னதான் செய்துவிட முடியும்
உங்களை நம்புகிறேன்
பூமியில் புரட்சியை
நிகழ்த்தக் கூடியவர்களே
உங்களுக்கு என்னுடைய
மே தின வாழ்த்துகள்!
ஜோசப் ராஜா