படம் : இன்றும் உலகத்தின் முன்னுதாரணமான சோவியத் புரட்சியின் சித்தரிப்பு
இப்போதும் இங்கே இருப்பது போலத்தான்
அப்போது அங்கே இருந்தது நிலைமை
பெரிதாக வித்தியாசங்கள் ஏதுமில்லை
அதே ஏக்கப் பெருமூச்சு
அதே விடியலின் எதிர்பார்ப்பு
அதே அதிருப்தியின் அணிச்சேர்க்கை
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லா வகையில்
எல்லோரும் துயரக் கடலில் மூழ்கிக் கிடந்தார்கள்
இழந்த நிலங்களில் இலையுதிர்கால மரங்களாய்
வெகு காலங்களாக
நிர்வாணிகளாய் நின்று கொண்டிருந்தார்கள்
அந்த தேசத்தின் விவசாயிகள்
தொழிற்சாலைச் சிறைகளுக்குள்
உதயமும் அஸ்தமனமும் உணராத மனிதர்களாய்
உறிஞ்சப்பட்ட உழைப்பில் பிழியப்பட்ட கரும்பைப் போல
இரும்போடு இரும்பாக கிடந்தார்கள்
அந்த தேசத்தின் தொழிலாளர்கள்
விடியவே விடியாமல் நீண்டு கொண்டிருக்கும்
இரவுகளை எண்ணியெண்ணி வழிந்த கண்ணீரை
ஆடையாய் உடுத்தியிருந்தார்கள்
அந்த தேசத்தின் பெண்கள்
கொடும் பசியை முகமெங்கும் பூசியபடி
பஞ்சத்தின் சாட்சிகளாய்
பட்டினியின் சாட்சிகளாய்
கைவிடப்பட்டவர்களைப் போல
சுற்றிக் கொண்டிருந்தார்கள்
அந்த தேசத்தின் குழந்தைகள்
பேரரசர்களின் நாற்காலிகளுக்குக் கீழ்
பூச்சிகளைப் போல நசுங்கிக் கிடந்தார்கள்
அந்த தேசத்தின் மக்கள்
அளவிற்கு மீறிய வரிகளால்
அரசர்களின் கஜானாக்கள்
நிறைந்து வழிந்து கொண்டிருந்த நேரத்தில்
வரிகொடுத்து வரிகொடுத்து வற்றிப் போயிருந்தார்கள்
அந்த தேசத்தின் மக்கள்
இருண்டு கிடந்தது அந்த தேசம்
ஒளியாய் அவர் வந்தார்
வறண்டு கிடந்தது அந்த நிலங்கள்
மழையாய் அவர் வந்தார்
மரணத்தின் விளிம்பில் வாழ்க்கை கொடுத்தவர்
பாலைவனத்தின் நடுவில் நிழல் கொடுத்தவர்
நகரங்களிலும் கிராமங்களிலும்
வயல்வெளிகளிலும் காடுகளிலும்
எங்கும் எங்கெங்கும்
புரட்சியின் கருத்துக்களை
தந்தையின் கவனத்தோடும்
தாயின் கரிசனத்தோடும்
விதைத்து விட்டவர்
புறக்கணிக்கப்பட்டவர்களை
பலவீனமானவர்களை
ஏழைகளை
வஞ்சிக்கப்பட்டவர்களை
பரந்த தன்னிதயத்தால்
வாரி அவர் அணைத்தபோது
முதன்முதலாக அவர்களின் உதடுகள்
வாழ்வின் கீதத்தை உச்சரிக்கத் தொடங்கின
ஆண்டாண்டு காலங்களாக
கட்டப்பட்டிருந்த சங்கிலிகள்
சுக்கு நூறாக உடைந்து நொறுங்குகின்றது
ஆண்டாண்டு காலங்களாக
அடக்கப்பட்டிருந்த கோபங்கள்
பிரளயமாய்ப் புரட்டியெடுக்கிறது
பாதைகளெல்லாம் மக்கள்
மக்களே பாதைகளாகவும்
மாறி இருந்தார்கள்
பிடுங்கப்பட்ட நிலங்களை
எண்ணிஎண்ணி எழுந்த கோபம்
கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை
எண்ணிஎண்ணி எழுந்த கோபம்
சுரண்டப்பட்ட உழைப்பை
எண்ணிஎண்ணி எழுந்த கோபம்
புரட்சியாய் புதுரூபம் கொண்டது
பாட்டாளி வர்க்க புரட்சியாய்
ரஷ்யாவை மட்டுமல்லாமல்
உலகையே புரட்டிப்போட்டது
தவாரிஷ் தவாரிஷ் என்று
ஒவ்வொரு மனிதரும்
அன்பொழுகும் முகத்தோடும்
கள்ளமில்லாச் சிரிப்போடும்
ஒருவரையொருவர்
கட்டித் தழுவிக் கொண்டனர்
கணிதத்தில் நிபுணராய்
விடையை முன்னுணர்ந்தவராய்ச்
சொல்லி வைத்தாற் போல்
கருத்தை பெளதீக சக்தியாய்
மாற்றிக் காட்டினார் அவர்
கருத்துக்களால் நிறைந்த பெளதீக சக்திகள்
சிம்மாசனங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள்
வானுயர நின்றுகொண்டிருந்த கோபுரங்களை எல்லாம்
தங்களுடைய கால்களுக்குக் கீழே நொறுக்கிப் போட்டார்கள்
நடக்கவே நடக்காது என்று
அதுவரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த
வார்த்தைகளைப் பொய்யாக்கினார்கள்
பாட்டாளிகளுக்கு ஏது வாழ்வு
என்ற புலம்பல்களுக்கு மத்தியில்
பாட்டாளிகள் அரசையே கைப்பற்றினார்கள்
வரலாற்றின் புதிய அத்தியாயத்தை
தியாகங்களாலும் போராட்டங்களாலும்
இரத்தமும் சதையுமாய் எழுதிய
அந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சி
ஒட்டுமொத்த உலகத்திற்கும்
புதிய சாளரங்களைத் திறந்துவிட்டது
ஐரோப்பா கண்டம் அமெரிக்கக் கண்டம்
ஆசியக் கண்டம் முழுவதும் என
ஓட்டுமொத்த உலகமும்
புரட்சி என்ற சொல்லை
மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தது
பாரதியும் சொன்னான் யுகப்புரட்சி என்று
அங்கே என்னதான் நடக்கிறது என்று
ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்
அவ்வளவு எளிதில் ஒருவரும் நம்பிவிடவில்லை
அவ்வளவு எளிதில் அந்தப் புரட்சியை
ஒருவரும் விரும்பிடவுமில்லை
ஆனால்
அந்த தேசத்தின் மக்கள்
ஆழ்மனதிலிருந்து விரும்பினார்கள்
புதிய சமூகத்தை
புதிய அரசமைப்பை
புதிய வாழ்க்கையை
அந்த யுகபுரட்சியை
முட்களில் நடந்தாவது
முடித்துக் காட்டுவோம் என்று
முடித்துக் காட்டினார்கள்
ஜோசப் ராஜா
( 2018 ல் வெளிவந்த “தவாரிஷ் லெனின்” தொகுப்பிலிருந்து )
1 comment
உலகத்தின் உதாரணமான யுகப்புரட்சி குறித்த கவிஞர் ஜோசப் ராஜாவின் படைப்பு பொருத்தமான நாளில் வந்துள்ளது.
யுகப்புரட்சியின் வெற்றிக்குப் பிறகு தான் காலனி அடிமை நாடுகள் விடுதலை பெற்றன.
விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம் ஊட்டின.
இந்தியாவும் அப்படித்தான். எனவேதான் புரட்சியைக் கண்டு அஞ்சிய ஆங்கில ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்தது இந்தியாவில். ரஷ்யப் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் வந்தால் தாங்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் இந்தியாவைப் பிரித்தாள் சூழ்ச்சி செய்து இரண்டாகப் பிளந்து விடுதலை தந்தது.
சுதந்திர இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டி சோவியத் ஒன்றியம் செய்த அளப்பரிய உதவிகளை இப்புரட்சி நாளில் நினைவுகூர்வது பொருத்தமானது.
இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் மலர்ந்தே தீரும். அதன்வழி புரட்சியும் நடந்தே தீரும். ஆனால் அதற்கான உந்துசக்தியாக நம்மால் இயன்றதைச் செய்வது காலத்தின் அவசியம்.
அதைத்தான் செய்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
நாமும் இயன்றதைச் செய்வோம் என இப்புரட்சி நாளில் உறுதி ஏற்போம்.