உன்னோடு நானும் பறக்கத் தொடங்குகிறேன்

நன்றி : பறவையைப் பார்க்கச் சொன்ன அண்ணன் செழியன் அவர்களுக்கு. . .

ங்கள் கண்களை

வியப்பால் விரியச்செய்யும்

வண்ணக் கலவைகளைக் கொண்ட

பேரழகான

சின்னஞ்சிறிய

ஒரு பறவையைப்

பார்க்க விரும்புகிறீர்கள் என்றால்

பாருங்கள் தோழர்களே

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவையை

 

திகாலையில் கண்விழித்து

ஆலிவ் மரங்களிலோ

மசூதியின் கோபுரங்களிலோ

வீட்டின் சுற்றுச்சுவர்களிலோ

இந்தச்

சூரியப்பறவையைப் பார்ப்பதென்பது

ஒவ்வொரு பாலஸ்தீனர்களுக்கும்

நல்ல சகுனமாகவும்

நம்பிக்கையளிக்கும் தருணமாகவும்

இருந்து வருகிறது

சூரியப்பறவை

பாலஸ்தீனர்களுக்கு

மகிழ்ச்சியைக் குறிக்கக்கூடியது

சூரியப்பறவை

பாலஸ்தீனர்களுக்கு

புதிய தொடக்கத்தைப்

பறைசாற்றக் கூடியது

சூரியப்பறவை

பாலஸ்தீனர்களுக்கு

நம்பிக்கையின்

மாற்றத்தின்

குறியீடாக இருக்கக்கூடியது

பாலஸ்தீனத்தின் வலிகளை

பாலஸ்தீனத்தின் இழப்புகளை

பாலஸ்தீனத்தின் சுதந்திரதாகத்தை

ஓயாத தன்னுடைய

சிறகடிப்பின் மூலம்

சூரியனுக்குக் கீழே

சுவாசித்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொருவருக்கும்

உணர்த்திக் கொண்டிருப்பதால்

அழகின் அடையாளமான

எதிர்ப்பின் அடையாளமான

வலிமையின் அடையாளமான

சுதந்திரத்தின் அடையாளமான

சின்னஞ்சிறிய சூரியப்பறவையை

தங்களுடைய தேசியப்பறவையாக

தரித்துக் கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்

 

வெட்டப்பட்ட ஆலீவ் மரங்களின்

இலைகளில்லாத கிளைகளில் நின்றுகொண்டு

துயரம் தோய்ந்த கண்களோடு

காஸாவின் பேரழிவைப்

பார்த்துக் கொண்டிருக்கின்றன

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்

அடுக்குமாடிக் கட்டிடங்களின்

கற்குவியல்களில் நின்றுகொண்டு

இன்னும் மிச்சமிருக்கும்

மசூதிகளின் கோபுரங்களின் நின்றுகொண்டு

ரஃபாவின் பேரழிவைப்

பார்த்துக் கொண்டிருக்கின்றன

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

மருத்துவமனைகளிலும்

அகதிமுகாம்களிலும்

கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகளை

தங்களுடைய சின்னஞ்சிறிய இதயமும்

வெடித்துச் சிதறும் வேதனையோடு

பார்த்துக் கொண்டிருக்கின்றன

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

ஆக்கிரமிப்பாளர்களால்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில்

கட்டி எழுப்பப்பட்ட

பிரிவினைச்சுவர்களில் நின்றுகொண்டு

ஆக்கிரமிப்பாளர்களால்

இப்போதல்ல எப்போதுமே

புரிந்துகொள்ள முடியாத

பேரன்பைத்

தங்கள் இணையோடு

பகிர்ந்து கொண்டிருக்கின்றன

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

குண்டுகளால் துளைக்கப்பட்ட

பாலஸ்தீனத்தின் நிலத்தைப்

பார்த்துக் கொண்டே

முற்றிலும் தரைமாக்கப்பட்ட

காஸாவின் கட்டிடக்குவியல்களைப்

பார்த்துக் கொண்டே

ரஃபாவைச் சுற்றிவளைத்திருக்கும்

ராணுவ வாகனங்களுக்கு நடுவே

பசியால் அழுதுகொண்டிருக்கும்

பாலஸ்தீனத்தின் குழந்தைகளைப்

பார்த்துக் கொண்டே

அரேபிய வானமெங்கும்

பறந்து கொண்டிருக்கின்றன

பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்

 

ன்பிற்குரிய சூரியப்பறவையே

வண்ணங்களால் நிறைந்திருக்கும்

உன்னுடைய சின்னச் சிறகுகளில்

முத்தமிடுகிறேன்

எடையே தெரியாத அளவிற்கு

மெல்லிய உடல்கொண்ட உன்னை

உள்ளங்கைகளில் ஏந்திக்கொள்கிறேன்

பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காகவும்

பாலஸ்தீனத்தின் விடியலுக்காகவும்

உன்னோடு சேர்ந்து

நானும் பறக்கத் தொடங்குகிறேன்

 

என் அன்பே

சுதந்திர பாலஸ்தீனத்தின்

நிலத்தில்

சுதந்திர பாலஸ்தீனத்தின்

வானத்தில்

சுதந்திர பாலஸ்தீனத்தின்

ஆலிவ் மரங்களில்

சுதந்திர பாலஸ்தீனத்தின்

குழந்தைகளின் கண்களில்

நிச்சயத்திலும் நிச்சயமாக

உறுதியிலும் உறுதியாக

உன்னைப் பார்ப்பேன் ஒருநாள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 30/05/2024 - 9:35 PM

தொடரும் போரின்
துன்ப துயரங்களை சூரியப் பறவை பகிர்ந்துகொண்டு சுதந்திர பாலஸ்தீன நம்பிக்கையை விதைக்கும் போது நாம்?

கவிஞர் ஜோசப் ராஜா காட்சிப்படுத்தும் பறவையை விட ஆறறிவு மனிதர்கள் ஆகிய நாம்?

கேள்விக்கு விடையாய் களத்தில் இறங்குவோம் வாருங்கள்.

Reply

Leave a Comment