உலகமெங்கிலும்
இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள்
உலகமெங்கிலும்
இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கையிழந்திருக்கிறார்கள்
இரவுபகல் பாராமல் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்திச்சிந்தி
உழைத்துக் கொடுத்த தொழிலாளர்கள்
மனசாட்சியே இல்லாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள்
இரக்கமே இல்லாமல் கைகழுவப்பட்டிருக்கிறார்கள்
முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும்
தொழிலாளர்களின் தோள்களில்தான் இறக்கப்படுகிறது
முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நஷ்டமும்
தொழிலாளர்களின் மரணத்தில்தான் ஈடுசெய்யப்படுகிறது
மோசமான இந்த நூற்றாண்டின் மோசடியான இந்தக் காலத்தை
முழுவதுமாக உணர்ந்து கொள்ளத் தொடங்கும் போது
முழு இதயமும் உடைந்து நொறுங்கத்தான் செய்கிறது
மீண்டும் வேலைநேரத்தைப் பற்றிய
விவாதங்கள் பெருகியிருக்கின்றன
நவீன வடிவத்தில்
தொழிலாளர்களின்
உழைப்பையும் ரத்தத்தையும் உறிஞ்சுகிறார்கள்
நவீன முதலாளிகள்
இப்போதும் கூட
எட்டுமணிநேரம்தான் வேலைநேரம் என்பது
எங்கும் எங்கெங்கும் காணக்கிடைக்காதது
அதற்குள் பன்னிரெண்டு மணிநேரம் என்ற
அக்கறைமிகுந்த வார்த்தைகள்
அழுகிய அந்த உதடுகளிலிருந்து
ஒழுகிக் கொண்டிருக்கின்றன
ஆனபோதிலும்
இந்தத் துயரங்களும் இந்த இழப்புகளும்
எல்லா இதயங்களையும் ஒன்று சேர்த்துவிடுமென்று நம்புகிறேன்
உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்திடுவார்கள்
முதலாளித்துவம்
தனக்கான சவக்குழியை மட்டும் தோண்டவில்லை
தனக்கான சவப்பெட்டியையும் சேர்த்தே செய்திருக்கிறது
இனி செய்ய வேண்டியதெல்லாம் ஆழப் புதைப்பதுதான்
சுதந்திரமடைந்த மனிதர்களால்
எல்லாத் தொழிற்சாலைகளும் திறக்கப்படும்
சுதந்திரமடைந்த கரங்களால்
எல்லா இயந்திரங்களும் இயக்கப்படும்
சுதந்திரமடைந்த விரல்களால்
மகிழ்ச்சியின் பாடல்கள் எழுதப்படும்
அதுவரையிலும் பொறுமையாகக் காத்திருப்பேன்
சம்பிரதாயத்திற்கு இது நேரமில்லை
சம்பிரதாயமான வாழ்த்துக்களுக்கு அவசியமுமில்லை
பெரிய வீதிகளெங்கும் பரந்த மைதானங்களெங்கும்
பெருக்கெடுத்து ஓடிய தொழிலாளர்களின் ரத்த ஆறுகளை
மறவாமல் இருந்தீர்களானால்
உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துக்கள்
அதிகாரத்தின் கரங்களால் ஆட்சியாளர்களின் கரங்களால்
முதலாளித்துவத்தின் கரங்களால் நெறித்து உடைக்கப்பட்ட
தொழிலாளர்களின் குரல்வளைகளை மறவாமல் இருந்தீர்களானால்
உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துக்கள்
உதயத்திற்கு முன்னால் தொடங்கி
அஸ்தமனத்திற்கு அப்பாலும் முடியாதிருந்த வேலை நேரத்தை
போராட்டங்களின் மூலமாகவும் தியாகங்களின் மூலமாகவும்
எட்டுமணி நேரமாக மாற்றிய எண்ணிலடங்கா தொழிலாளர்களின்
வியர்வையையும் ரத்தத்தையும் மறவாமல் இருந்தீர்களானால்
உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துக்கள்
வர்க்க வேறுபாடுகளையும் ஒழித்துக் கட்டவும்
மாபெரும் ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் செய்யவும்
ஏதாவது ஒரு வடிவத்தில் ஏதாவது ஒரு வேலையை
இப்போதே தொடங்கினீர்கள் என்றால்
உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துக்கள்
உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துக்கள்

2 comments
மிக சிறப்பு தோழர் ❤
கனவு மெய்ப்பட வாழ்த்துகள்