இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் கார்ல் மார்க்ஸ். கவிதையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர் கார்ல் மார்க்ஸ். மானுடத்திரளை நோக்கித் தன்னுடைய பேரன்பின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்ட அந்த மாமேதையின் மாணவனாக, அவருடைய பிறந்தநாளில் உழைப்பவரைப் பற்றிய இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இரும்பின் நிறமுள்ள மனிதனே
காடுகளையும் விவசாய நிலங்களையும்
விழுங்கிக்கொண்டே விரிந்து கொண்டிருக்கும்
இந்த நகரத்திற்கு வெளியே
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்
பரந்து விரிந்திருக்கும்
தொழிற்சாலைக்குச் சென்றிருந்தேன்
சிறைச்சாலையின் மதில்சுவரை விடவும்
உயரமானது தொழிற்சாலையின் மதில்சுவர்
பிழியப்பட்டவர்களை வெளியே தள்ளுவதற்கும்
பிழிபடப்போகிறவர்களை உள்ளே இழுப்பதற்கும்
தனித்தனி வாயில்கள்
அரிதாகத்தான் நிகழ்கிறது
வருகிறவர்களும் போகிறவர்களும் பார்த்துக்கொள்வது
வாயிற்காவலர்கள் சொன்னார்கள்
நெரிசலைத் தவிர்ப்பதற்கு என்று
இருக்கலாம்
நெரிசலைத் தவிர்க்கலாம்
கூடவே
வெளியே வருகிறவர்களின்
களைத்த உயிரற்ற இறுகிய முகங்கள்
உள்ளே போகிறவர்களுக்கு
எதையும் உணர்த்தாமலிருப்பதற்காகவும் இருக்கலாம்
இரும்புகள் இரும்புகள்
எங்கு திரும்பினாலும் இரும்புகள்
சிறிய பெரிய கனத்த தடித்த
உள்ளீடற்ற உருளையான என
வகைவகையான இரும்புகள்
இரும்புகளைப் போல
மனிதர்கள் மனிதர்கள்
ஆணும் பெண்ணுமாக
எங்கு திரும்பினாலும் மனிதர்கள்
சக்கரம் மாட்டப்பட்டவர்களாய்
பறந்து கொண்டிருக்கிறார்கள்
சப்தம் சப்தம் சப்தம்
இதயமும் அதிரும்
இரும்பின் ஓசைகள்
எண்ணிலடங்கா கரங்கள்
காற்றில் அசைந்தாடுகின்றன
இரும்புகள் நகர்த்தப்படுகின்றன
இரும்புகள் தூக்கப்படுகின்றன
சப்தம் சப்தம் இடைவிடாத சப்தம்
அந்தத் தொழிற்சாலைக்கு வெளியே
உருவமற்று உயிரற்று உருக்குலைந்து கிடக்கும்
பெரிய பெரிய இரும்புகள் கனத்த இரும்புகள்
இயந்திரத்தின் உதவியால் மனிதனின் கரங்களால்
உள்ளே எடுத்துச் செல்லப்படுகின்றன
இரும்புகள் வெட்டப்படுகின்றன
இரும்புகள் இணைக்கப்படுகின்றன
இரும்புகள் வளைக்கப்படுகின்றன
இரும்புகள் நீட்டப்படுகின்றன
வேகம் வேகம் அளவிட முடியாத வேகம்
கரங்கள் கரங்கள் மனிதனின் கரங்கள்
காற்றின் வேகத்தையும் மிஞ்சும் அளவுக்கு
சுழன்று இயங்குகின்றன
மேற்பார்வையாளன் கத்துகிறான்
வேகத்தை துரிதப்படுத்த வேகமாய் இயங்குகிறான்
வேலை செய்வது மனிதர்கள் என்பதை
மறந்து விட்டவனாய்
இல்லை
மறந்துவிடுமளவிற்கு மாற்றப்பட்டிருக்கிறான்
அவர்கள் விரும்புவதும் அதைத்தான்
வேகம் வேண்டும்
வேலையில் பிழைகள் இல்லாத
வேகம் வேண்டும்
இரும்புகள் காய்ச்சப்படுகின்றன
இரும்புகள் பற்றவைக்கப்படுகின்றன
இரும்புகள் கட்டப்படுகின்றன
இரும்புகள் எழுப்பப்படுகின்றன
அட பாருங்களேன்
உருவமற்ற ஒன்றாய்
ஒழுங்கற்ற வடிவமாய்
உயிரற்ற பொருளாய்
உள்ளே நுழைந்த இரும்புகள்
உருவமடைந்து ஒழுங்குபெற்று
உயிர்பெற்று எழுந்து வருகிறதை
மனிதன் எவ்வளவு வலிமையானவன்
மனிதனின் கரங்கள் எவ்வளவு வலிமையானவைகள்
இரும்பின் நிறமுள்ள மனிதனே
உன்னை வாழ்த்துகிறேன்
உன்னை போற்றுகிறேன்
என்னை நோக்கி நீட்டப்பட்ட
காதலியின் கரத்தைப் பற்றிக்கொள்ளும் பேரார்வத்தோடு
உன்னுடைய கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்
உன்னுடைய கரங்களில் முத்தமிடுகிறேன்
உன்னுடைய உடலிலிருந்து
இரும்பின் வாசத்தை நுகர்கிறேன்
இரும்பாகவே மாறியவனே
இரும்பிலும் வலிமையானவனே
கவிதையில் வலிமையானவன்
காதலோடு அழைக்கிறேன்
வேலை நேரம் முடிந்ததும்
விரைந்து வா
உனக்கான கவிதைகளோடு
வாயிற்கதவருகில் காத்திருக்கிறேன்
வலிமையான உன்னுடைய கரங்களை
கவிஞனின் கரங்களோடு சேர்த்துக்கொள்
காலார நடப்போம் நாம்
கவிதைகள் பாடிக்கொண்டே
தொழிற்சாலையை விடவும்
உனக்குக் கவிதை முக்கியம்
கவிதையை விடவும்
எனக்கு நீதான் முக்கியம்
1 comment
காரல் மார்க்ஸ் , உழைப்பாளி அவனின் வண்ணம் … உயிரற்ற இரும்புகள் உருவம் பெறுவதும்….. மனிதனின் அளப்பரிய கடினமான வேலைகளையும், இயந்திரத்திற்கு ஈடு இணையற்ற உழைப்பு மனிதன் தான் கொடுக்கிறான்…. காதலியின் கரம் பிடிப்பது போல் உன் கரங்களையும் பிடித்துக்கொள்ளும் அந்த வரிகள்…..உழைப்பின் வாசனையை நுகர்ந்து பார்க்கும் வரிகள் கவிஞருக்கு உரித்தான ஒன்று…. அருமை கவிஞரே…..