இன்னும்
பறவைகள் கூட
எழவில்லை
காற்றும் வீசவில்லை
அதிகாலையை
அமைதியாக
ஆக்கிரமித்திருக்கிறது இருள்
நினைத்துப் பாருங்களேன்
இந்த
அதிகாலையின் அமைதியை
உடைத்துக்கொண்டு
குண்டுவிழுந்தால்
எப்படியிருக்கும்
அப்படித்தான் இருக்கிறது
காஸாவின் ஒவ்வொரு விடியலும்
இன்றைய விடியலில் இருந்து
இத்தனை மரணங்கள் என்பதுதான்
தினசரி செய்தி அறிவிப்பாகத்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உலகத்தின் உதடுகள்
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
யுத்தத்தின் கொடூரங்களை
யார் எழுதிக் கொடுக்கிறார்கள்
செய்தியாக?
உலகத்தின் கண்கள்
பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்
யுத்தத்தின் காட்சிகளை
யார் எடுத்துக் கொடுக்கிறார்கள்
படமாக?
இந்தக் கேள்விகள்
இப்போதல்ல எப்போதுமே
யுத்த வெறியர்களைத்
தொந்தரவு செய்யக் கூடியவைகள்
அவர்கள்
வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
பயங்கரமான யுத்தங்களை
ஒரு புகைப்படம்
நிறுத்தத் தூண்டியிருக்கிறது
அமெரிக்கக் குண்டுகளிடம் தப்பித்து
உயிர்பிடித்து ஓடிவரும்
வியட்நாம் சிறுமியின்
புகைப்படத்தைப்போல
யுத்த காலத்தில்
எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள்
யுத்தத்திற்கு எதிரான குரல்களை
இன்றும்
அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன
அந்தப் புகைப்படம்
தெரியாமல் எடுக்கப்பட்டதல்ல
யுத்தத்திற்கு எதிராக
எழுதப்படும் கவிதையைப்போல
யுத்தத்திற்கு எதிராக
வரையப்படும் ஓவியத்தைப்போல
யுத்தத்திற்கு எதிராக
பாடப்படும் பாடலைப்போல
யுத்தத்திற்கு எதிராக
புகைப்படங்களும் எடுக்கப்படுகின்றன
அப்படி எடுக்கப்பட்ட படங்கள்தான்
பாலஸ்தீனத்தின் துயரத்தை
குழந்தைகளின் மரணத்தை
பெண்களின் பாடுகளை
இந்த உலகத்தின் கண்களுக்கு
காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான
பேரணிகள் நடக்கின்றன
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான
ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன
அதற்குக் காரணம்
இஸ்ரேலின் குண்டுகள் மட்டுமல்ல
யுத்தத்திற்கு எதிரான
ஊடவியலாளனின் புகைப்படக் கருவியும்தான்
அதனால்தான்
இந்த யுத்தத்தில்
நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களைக்
கொலை செய்திருக்கிறார்கள்
யுத்த வெறியர்கள்
அப்படித்தான்
காஸாவில் இருக்கும்
மருத்துவமனையின் மீது
குறிபார்த்து குண்டு போடுகிறார்கள்
நோயாளிகள் மருத்துவர்கள் என
அங்கிருந்த அத்தனை உயிர்களும்
புகையாய் புகையாய் மேலெழும்புகின்றன
அந்தப் புகையை
அந்தப் புகைக்குள் மறைந்திருக்கும்
கொடூரத்தை
காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும்
செய்தியாளர்களைக் குறிபார்த்து
அடுத்த குண்டைப் போடுகிறார்கள்
புகை இன்னும் அதிகமாகிறது
யுத்த வெறியர்கள்
சிரிக்கத் தொடங்குகிறார்கள்
சாட்சிகளையும்
இல்லாமல் செய்துவிட்டோம் என்று
கைகுலுக்கிக் கொள்கிறார்கள்
காற்று வீசுகிறது
புகை மெல்ல அடங்குகிறது
இடிபாடுகளுக்குள்ளிருந்து
குழந்தைகளின் உடல்களும்
மருத்துவர்களின் உடல்களும்
பத்திரிக்கைக்காரர்களின் உடல்களும்
எடுத்துச் செல்லப்படுகின்றன
கடைசியாக அங்கே
இரத்தம் தோய்ந்த
ஒரு புகைப்படக் கருவி
கண்டெடுக்கப் படுகிறது
உயிரைப் பணயம் வைத்து
அந்தச் செய்தியாளன் எடுத்த படங்கள்
அந்தக் கருவிக்குள் நிறைந்திருக்கின்றன
இரத்தம் தோய்ந்த
அந்தப் புகைப்படக் கருவியும்
யுத்தத்திற்கு எதிராக
உலகெங்கும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது
இதோ
விழித்துக் கொண்டன பறவைகள்
அடிவானத்தில் வெளிச்சக் கீற்றுகள்
இப்படியான ஒரு விடியல்
குண்டுச்சத்தம் இல்லாமல்
பறவைகளிம் சத்தத்தோடு
பாலஸ்தீனத்திற்கும் வேண்டுமென்றே
விரும்புகிறேன்!
ஜோசப் ராஜா

1 comment
யுத்தகளத்தின் செய்தியாளன் இன்று குண்டடிபட்டு மறைந்தும், நமக்கு காட்சிபடுத்துகிறான் காசாவின் அவலத்தை தன் புகைப்பட கருவியினூடாக.
புரிந்து கொள்ள முடிகிறது தங்கள் கவிதைனூடாக.
மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் தோழர்.